உடல் நிலை சரியில்லை எனில் மருத்துவ மனை செல்ல வேண்டுமெனும் மையவாதம் நேற்று மனதில் முரண்பாடுகளைச் சமைத்தது. மருத்துவமனைகள் நேர்மையாக செயல்பட்ட நவீன சமூகவியல் உடைக்கப்பட்டு அப்படியான விழுமியங்கள் பணக்கட்டுகளோடு விழுங்கப்பட்ட பின் நவீன இருததலியல் காலமிது. நாம் செயலற்றவர்களாகி செயற்கை நுண்ணறிவின் தயவில் வாழத் தொடங்கிவிட்டோம்..
நிகழில் கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையிலான அகவய இடைவெளிகளின் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சம் மங்கத் தொடங்கிவிட்டது. மருத்துவ மனை சென்றால் உடல் நிலைத் தொய்விற்கான காரணிகள் உண்மைத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் சோதிக்கப்படுமா எனும் சந்தேகம் கார்ப்பரேட் மயமான பின் மருத்துவ அமைப்பியல் வாதக்கருத்து மீன்களை தூண்டிலின்றியே ஒவ்வொன்றாக சிந்தனைத் தரையில் தூக்கி வீசியபடியே இருக்கிறது.. துடிதுடிக்கும் மீன் வாதங்களை வீண் வாதங்களென புறந்தள்ள பின் நவீன மருத்துவ இயலில் அனுமதித்தல் இயலவில்லை..
உடல் நிலை சரியில்லாத நிலையில் உதவியாளர் ஒருவருடன் வரும் நோயாளிக்கு முன்னுரிமை தரும் மருத்துவ தர்க்க வரலாறு தோற்றுப்போன இக்காலகட்டத்தில் தனியொரு நோயாளியாய் தன் காலில் தானே நடந்து மருத்துவ மனை அனுகும் அணுக்கம் கட்டுடைப்பிற்கு உள்ளானால் என் செய்வதெனும் கிரே ஸ்பாட்கள் நடை தளர்வினைத் தரத் தொடங்கின..
மைய வாதமெனும் வார்த்தையை மய்ய வாதமென எழுதுவது சரியா எனும் பின் நவீன சிந்தனை வேறு நோயின் உக்கிரத் தன்மையை அளவு மாணியின் அளவீட்டூ எல்லைகளை தாண்டியதால் உடைத்து நொறுக்கிவிட்டது. கீழே தள்ளப்பட்ட ஜுரமாணியின் சிதறல்களால் வெகுண்ட செவிலியச் சகோதரியின் தார்மீகக் கோபம் ஃபூக்கோவின் கோட்பாடுகளால் மருத்துவ மனை மையத்தையே தகர்த்துவிடுமெனச் சொன்னதை அச்செவிலியச் சோதரி மருத்துவரிடம் போட்டுக் கொடுத்ததை கைபேசியில் பதிவு செய்யும் மாற்று ஊடக காலத்தின் அறப்பிறழ்வுத் தொடக்கம் என்றே வரலாறு இனி பேசும்.. பேச வேண்டும்..
உடம்பிற்கு என்ன எனும் ஆதி மருத்துவன் ஆதி முதல் நோயாளியிடம் கேட்ட அதே கேள்வியை பின் நவீன நோயாளியிடம் கேட்டது மருத்துவக் கோட்பாடுகளும் நோயறியும் கூறுகளும் கலைக்கப்பட்டதையுமே எடுத்துக் காட்டுவதாக அறிய முடிகிறது. பழைய நோயறியும் உத்தியை மீயுத்தியாகக் கருதுதல் பின் நவீன மருத்துவ ஆராய்வின் விளிம்புகள் தகர்க்கப்பட்டதைக் காட்டுவது விளிம்பு சிதைந்த கண்ணாடி மொந்தையில் பழைய கள்ளை வண்ணமூட்டிகளைக் கலந்து கொடுப்பது போன்றது..
பின் நவீன மருத்துவமும் நோயறிய கேட்ட அந்த ஆறிப்போன கேள்வியில் நோய் முற்றுதல் நிகழ நோயாளி மயக்கம் கொண்டு அருகிருந்த செவிலியச் சகோதரியின் மார்பில் சாய நேரலாம். மயக்கம் எனும் மருத்துவப் பதம் நிறைய மாந்தர்களின் வாழ்வைப் பதம்பார்த்திருக்கிறது.. மார்பில் சாய்ந்த நோயாளியின் ஒருமைச் சாயல் சிதறிய உருவக் கோட்பாட்டின் வடிவ உத்திகளை மருத்துவருக்குப் புரியத் தர ஒரு கூர்மழுங்கிய ஊசியை நோயாளியின் பிருஷ்ட்டத்தில் செலுத்துகிறார்..மருத்துவ முதுகலையியலில் முனைவர் பட்டமும் பெயருக்குப் பின்னால் புரியாத பட்டயங்களின் எழுத்துக்களையும் பெயர்பலகையில் பொறித்திருப்பவர்.
பின் நவீன காய்கள் முதிர்ந்து பழுத்தலுக்கான முறைமைகள் காய்களுக்கு ஊசி செலுத்தி பழுக்க வைக்கும் நவீன பண்டைய எளிய முறைமையை மருத்துவர் கையாள்வது மருத்துவ போதாமையைக் காட்டியது. நோயாளியின் நோயும் மருத்துவ சிகிச்சைக்கான கூலியும் பழுத்து முதிரத் தொடங்கி பறிக்கவியலா உயரத்திற்கு தாவிவிடுகிறது. மரத்தில் காய் பழுத்து முதிர்ந்தால் தானே உதிரும்.. நோயும் சிகிச்சைக் கூலியும் பழுத்தால் ஒரு வேளை நோயாளியின் உயிர் உதிரவும் வாய்ப்பிருக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துச் சீட்டின் கோட்டோவிய வார்த்தைகளை மருந்துக் கடையில் கொடுத்து வாசிக்கச் சொல்லி கேட்கவேண்டும்.. எனும் ஆழ்மனக் குரல்களின் மோதல் கைகலப்பில் முடிந்தது.
நவீன காலமெனில் மருந்துச் சீட்டின் சொற்பிறப்பியலை வாசித்தே ஆகவேண்டுமென மருந்துக் கடை சிப்பந்தியை நிர்பந்திக்கலாம். இது பின் நவீன யுகமென்பதால் இந்தப் பதிவை நாளை சட்ட மன்றத்தில் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்..
நோயற்ற வாழ்வே குறைவாற்ற செல்வம் எனும் சொல்லாடல் மருத்துவ உலகம் வெறுக்கும் ஒன்றென புரிந்த நேரத்தில் தான் நீட் தேர்விற்கான விலக்கு கேட்ட தீர்மானம் சட்ட சபையில் ஓட்டிற்கு விடப்பட்டிருக்கிறது.. ஆனால் நோயாளியின் நோயும் மார்பில் சாயக் காரணமான மயக்கமும் மட்டும் யுகம் யுகமாய் தீர்க்கப்படவே இல்லை..
ராகவபிரியன்
Comments
Post a Comment