ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/14
அவன் ஒரு சட்டகத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறான்..
அவன் சட்டகத்தில் ஆணி அடிக்கும் திறமையின் மெச்சுதல்கள் தரும் இன்பத்தை முகத்திலிருந்து நிரந்தரமாக மறைக்கும் வித்தையறிந்தவன்..
பரவாயில்லை..
மற்றும் சட்டக ஆணி அறையும் நுட்பமறிந்த மேதை என அவனைக் காட்டிக் கொடுக்கும் முகச் சாயலை மன்னித்துவிடுவோம்..
மென்பொருள் விற்கும் கடைவீதிகளில் அலைந்து களைத்த அவனின் கால்களில் கூட வன்மம் இப்போது கூரிய தோல் ஆணியென முளைத்திருக்கிறது.
வன்பொருள் கடையின் வலிமை மிக்க ஆணியொன்றால் ஓங்கி அடித்து உள்ளிறக்குகையில் பிளக்கும் சட்டகப் பிளாச்சுகளின் பிரளய ஓசை தரும் சுயபுல்லரிப்பில் அவன் லயித்திருக்கிறான்.
தன் இம்மையின் பயன் நிறைவுற்றதென இறுமாந்து களைத்திருப்பவனிடம் சூடான தேனீர் ஒன்றை யாராவது வாங்கிக் கொடுத்தால் உலகம் மகிழும்..
மரச் சட்டகங்களுக்குள் தற்புகழ் மேதைமையைப் புதைத்த நெகிஷி விளம்பர மென்துணியை பொருத்தி வீதியின் முச்சந்திகளில் காட்சிப் படுத்தும் சட்டகங்களில் வன்பொருள் ஆணிகொண்டு அறைவதில் வல்லவன் அவன்..
புகழற்ற ஏழை ஆணி அறையும் நிபுணர்கள் எவராவது சட்டகங்களுக்குள் கண்ணீர் அஞ்சலி வார்த்தைகளை பதிப்பதற்கு முன் அது அவனுடையது தானா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..
இல்லையெனில் இரும்பு ஆணியிழுக்கும் காந்த உபகரணம் கொண்டு அஞ்சலி சட்டகங்களைக் கூட சிதைக்கும் இரக்கமற்றவன் அவன்..
சட்டகத் துணியில் சரிந்த இமயம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கையில் அவனின் அர்த்தமற்ற வார்த்தைகளுக்குக்கூட தலையாட்டும் பூம்பூம் மாடு ஒன்று அதைத் தின்ன நாவு மேயும் வித்தையொன்றை ஆங்கே நிகழ்த்தக் கூடும்..
சிலுவையில் அறையப்பட்ட இந்து தெய்வங்களின் குருதி கொப்பளித்த ஆணிகளைப் பிடுங்கி எறிந்த அனுபவம் நிறைந்த அந்நாத்திகன் ஒருபோதும் வேறு மத தெய்வங்களின் சிலுவைகளைச் சிதைத்ததே இல்லை..
தன்னை புகழ் மூத்தவனென எண்ணி புளங்காகிதம் போர்த்திய அவனின் குப்பித்தலையுடைந்த ஆணிகள் இப்போது சாமான்யர்கள் நடக்கும் தெருக்களில் கூர் வான் நோக்கக் கிடக்கின்றன..
சோற்றுக்காக ஓடும் ஏழைகளின் தேய்ந்த மீள்ம உருண்டைகளுக்குள் அவை எளிதாகப் பதிந்து அவர்களின் பயணத்தையே புரட்டிப் போடலாம் அவை..
அது பற்றிய கவலைகள் அவனைச் சீந்தாத போழ்தில்..
அருகிருக்கும் கந்தக வெப்பமூட்டி துளையடைக்கும் கடைவரையில் சாண் வயிற்றுக்காக ஜீவித காற்றற்ற தன் வாகனத்தைத் தள்ளும் நெடுந்தொலைவை கடக்கவியலாத வயது மூப்பர்களை அவன் வெறுப்பது நியாயம் தானே..
கூரான முனையிருக்கும் இரும்பு ஆணிகளை காரைச் சுவற்றில் வெற்றுக் கையாலேயே அறைந்து உள்ளிறக்குதலில் வல்லமை கொண்ட அவனின் தொழில் நுட்பம் உலக வல்லரசுகளில் இப்போதும் கூட தேவைப்படுகிறதாம்..
அதனால் அவன் மென்பொருள் சட்டகம் ஒன்றில் வன்பொருள் ஆணி அறைவதற்காக தன் காலாணியையும் பொருட்படுத்தாமல் வயது மூப்பையும் புகழ் மூப்பையும் தாங்கி நிற்கும் காலத்தின் பின்காலணிய பின் நவீன ஆணிகள் கிடக்கும் சாலைகளில் கடுகி நடந்து கொண்டே இருக்கிறான்.
ராகவபிரியன்
Comments
Post a Comment