ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம் 6/11


காடுகளெங்கும் ஒரு புலி தன் சிறுனீரால் எல்லைகளை வகுத்துக்கொள்கிறது..

தன் உடல் கோடுகளை அழித்துக்கொள்ள தலை திருப்பி நாவால்

அதிவேகமாய் இப்படியும் அப்படியுமாய் உழைக்கிறது..

தன்னை மறைத்துக் கொண்டால் இரை தன்னைத் தேடி வரக்கூடலாம் எனும்

மிருகஞானத்தின் உச்சச் சிந்தனை விளைவின் காரணியது..

வேட்டைக்குச் செல்கையில் அது தாவர உண்ணிகளை மட்டும் தேடுவதில்லை..

பசி தன்னைவிட அதிவேகமாய் பாய்ந்து தாக்குகையில் தோல்வியுற்ற சோகப் பொழுதுகளில் புல் தாவரத்தையும் அது தேடித் திரியலாம்..

புலி தன் மீதான கோடுகளையும் அதன் விசித்திர வேலைப்பாடுகளையும் எந்தச் சகோதரப்புலியிடமோ ஏன் சிறுத்தையிடமோ கூடச் சொல்லிக் கொள்வதில்லை..

பிறந்தகத்தின் பெருமையை எவரும் உடன்பிறப்பிடம் சொல்வதில்லையெனும் மானுடச் சொலவடை பிறப்பதற்கு முன்பே உதித்த மிருக வாழ்வியல் துளியது..


இப்போது நாம் புலிவேட்டைக்குச் சென்றாக வேண்டுமெனில் கூண்டு ஒன்றையும் அதனுள்ளான தியாக ஆடு ஒன்றையும் தூக்கிச் சென்றாக வேண்டும்..

எந்த ஆரண்யத்திலும்  எந்த மானுடக் கண்ணும் முதலில் புலியைப் பார்த்ததாக வரலாறில்லை.. 

பார்வைக்குப் அப்பாற்பட்ட எனும் சொல்லடுக்கு மானுடப்பார்வையைப் பற்றியது..

புலிப் பார்வைகள் அதன் இம்மை இரையைத் துல்லியமாகக் கண்டடையும் சக்தி கொண்டவை..

கொல்லப்பட்ட புலித்தோலை உரித்தபின் அதை இந்துத் துறவியமர்வதற்குத் தரக் கூடாதெனச் சொல்பவர்கள் பசுத் தோலைப் போர்த்தியிருப்பார்கள்..

புலி வேட்டையென்பதை ஆரண்யப் பள்ளிகளில்தான் கற்றாக வேண்டும் என்பதில்லை.. ஒரு சில மூத்த உடன்பிறப்புகள் ஆரம்பப் பள்ளி வயதிலேயே அதில் நிபுணத்துவம் பெற்று விடுகிறார்கள்..

அதனால் தான் அவர்கள் மறுமையைப் பற்றி சதா நிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்..

இறுதியாக.. ஓர் உண்மையை புலிப்பார்வையால் கூட காணமுடியும்..

மானுடப் புலிகளும் புலிவேட்டைக்கான மானுடமும் ஒரே எல்லைக்குள் வசிப்பதில்லை.. என்பது தான் அது..

ஒரே வீட்டிலும் கூட.. என்பது வடிகட்டிய பொய்..


ராகவபிரியன்

Comments

Popular posts from this blog