மத் தெளடோ... சிறுகதை..
அவர்கள் எங்களூருக்கு அருகில் கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். அதாவது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மீந்திருக்கும் ஆயிரம் வயதுடைய ஆலமரத்தடியில் இருக்கும் கூடாரத்தில். அந்த கூடாரத்துப் பையன் ஒருவன் இப்போது என் வீட்டு வாசலில் நின்றிருந்தான்..
க்யா பாய்...தும்க்கு க்யா வோணா... என இந்தியில் பண்டிட் பரீட்சையில் அகில உலக அளவில் முதல் மார்க் வாங்கியவன் போல் கேட்டேன்..
சார்.. எனக்கு நல்லா தமிழ் வரும் சார். எங்க குடும்பம் தமிழ் நாட்டுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு சார்.
அவன் சொன்னதும் சட் டென இமயமலையின் பனிப்பாறை உடைந்து டன் கணக்கில் தேங்கியிருந்த அசடு எண்ணெய் முகத்தில் வழியத் தொடங்கியது. துடைத்துக் கொண்டேன்...
பார்த்தா இந்திக்காரன் மாதிரி இருக்கப்பா அதான் இந்தியில கேட்டேன்.. சரி உனக்கு என்ன வேணும் அதச் சொல்லு..
சார்.. நாங்க யாதவங்க.. கோணார் சாதின்னு இங்க எல்லோரும் சொல்றாங்க.. உங்க வீட்டு மாட்ட காலையில அவுத்துட்டுப் போய் மேய்ச்சுட்டு சாயங்காலம் கொல்லையில கட்டிடறேன் சார். மாசம் ஆயிரம் ரூபா குடுங்க சார் போதும்.. இந்த ஊர்ல பத்து கோணார் வூட்டு மாடுங்கள தர்றதா சொல்லிருக்காங்க.. அதான்..மேய்க்க மாடு கேட்கத்தான் வந்தேன்..
உண்மையிலேயே வியந்து போனேன். கொஞ்சம் கூட இந்தி வாடையற்ற தமிழில் பேசியது நம்பவியலாமல் இருந்தது.
இப்போது அக்ரஹாரங்களே இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு அக்ரஹார வீடுகளிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் கிடையாது. எங்கள் வீட்டில் இந்தப் பசுமாடு பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது. எப்படியும் ஒரு மாடு எங்கள் வீட்டிற்கு வாங்கிவிடுவோம்.. எங்களூர் கோணார் தெருவில் நிறைய மாடுகள் உள்ளன. காவிரி படுகையில் நிறைய புல் விளைந்திருக்கும். இப்போது காவிரிக் கரையோர கால் நடைகள் காவிரிக்குள் தான் மேய்சல் கண்டாக வேண்டும். வயல்களில் எல்லாம் வேலி போட்டிருக்கிறார்கள்.. கோடையில் வயல்களில் உரத்திற்காக செம்மறியாட்டுக் கிடை போட்டு விடுகிறார்கள்.. ஒரு பசுமாடு மேய்ப்பதற்குக் கூட பயிரை மேய்ந்துவிடாமல் இருக்க அதன் தும்பைப் பிடித்துக்கொண்டு கூடவே நடந்தாக வேண்டும்.. அதனால் எங்கள் வீட்டுப் பசு கட்டியே கிடக்கிறது. மேய்ச்சல் பசுவின் பாலுக்கும் கட்டிக்கிடக்கும் பசும்பாலிற்கும் சுவையில் கூட மாறுபாடிருக்கும்..
சரிப்பா.. அவங்கள்லாம் ஒரு மாட்டுக்கு எவ்ளோ தர்றாங்க..
ஆயிரம்னு சொல்வேன் சார். கூடக் கொறைய குடுத்துடுவாங்க.. மாடு மந்தைய பத்ரமா பார்த்துக்குவேன் சார்.. எங்க பக்கமெல்லாம் சமயத்துல சிறுத்தைப் புலி கழுதைப் புலியெல்லாம் கூட மாட்ட வேட்டையாடிடும்.. இங்க அந்தப் பிரச்சனை இல்ல சார்..
இந்த வருஷம் காவேரில தண்ணி வரப்போறதில்ல சார். வந்தாலும் ஒரு ஓரமா தான் ஓடப்போவுது.. பயப்படாம மாடு குடுங்க சார்...
அவனின் கெஞ்சலில் கூட இந்தி கலந்திருக்க வில்லை.
இருந்தாலும் எனது இந்திப் புலமையை அவனிடம் காட்ட..
பில் குல் நஹி ஹோ சக்தா... என்றேன்..
சிரித்துக் கொண்டே ...சரி சார்.. எனச் சொல்லி நகர்ந்தவனை...
சோட்டா.. ஜரா ருக்கோ.. என்றவுடன் அப்படியே நின்றான்.. இதற்கு மேல் இந்தியில் பேசினால் அவனின் எதிர்வினை எப்படியிருக்குமென உணர்ந்ததால்...
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா..
ஆயிடுச்சு சார்.. ஹமாராக்கு தோ பச்சே ...ரெண்டு கொழந்தைங்க.. இங்க முன்சிபாலிட்டி ஸ்கூல்ல படிக்கறாங்க...சார்...
பார்த்தா சின்ன வயசுமாதிரி இருக்க.. உன்னோட வயசு என்ன..
இருவத்தைஞ்சு சார்...எங்க ஊர்ல ஸ்கூல் முடிச்சப்பறம் கல்யாணம் கட்டி வச்சுடுவாங்க.. நாங்களும் வேலை தேடி ஊர் ஊரா வந்துடுவோம்.. நான் இங்க பதினைஞ்சு வயசுல பாணிபூரி விற்க வந்தேன். இப்பவும் சாயங்காலம் மாடு கொண்டாந்து வுட்டுட்டு பாணி பூரி விற்க டவுனுக்குப் போயிருவேன்.. டூ வீலர் இருக்கு சார்...
ஆச்சரியமாய் இருந்தது எனக்கு..
சரி சரி மாட அவுத்துட்டுப் போ.. ஆனா சாயங்காலமா கொல்லையில கட்டிடனும்.. பாப்பாத்தியம்மா.. மாடு வந்தாச்சு.. கட்டுனா கட்டு கட்டாட்டிப் போனு போனே..உன்னைய டிஸ்மிஸ் பண்ணிடுவேன்..
அவன் சிரித்துக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொண்டு போனான்..
சில நாட்கள் சென்றன. மாட்டின் பால் இப்போது இன்னும் ருசியாக இருப்பதாக நாக்கு சொன்னது..
இதோ மாலை காப்பிக்காக காத்திருக்கிறேன்.. மாடும் அந்த இந்திக்காரனும் வரவில்லை.. இருட்டத் தொடங்கியிருந்தது..
பக்கத்துத் தெரு கோணார் வீட்டில் விசாரிக்கச் சென்றேன்..அங்கும் இன்னமும் மாடுகள் வரவில்லை..
எல்லோருமாக காவிரிக்குள் டார்ச் லை கைபேசி லைட் சகிதம் தேடத் தொடங்கினோம்.. யாரும் சென்றிராத நடுக்காவிரியின் கோரைப் புற்கள் மண்டிய இடத்திலிருந்து.. மதத் கரோ..மதத் கரோ..என இந்திக்காரன் கத்திக்கொண்டிருந்தான்.. குரல் கம்மியிருப்பது புரிந்தது.. எல்லோரும் அங்கே ஓடினோம்..
அங்கே மாடுகள் சுற்றி நின்று கொண்டிருக்கின்றன..
அந்த இந்திக்காரன் புதைமணலில் மார்பு வரை சிக்கியிருக்கிறான். எங்கள் வீட்டுப் பசுமாட்டின் கயிறை பிடித்துக்கொண்டிருக்கிறான். மாடுகள் அ....ம்....மா வென கத்தி கத்தி ஓய்ந்திருக்க வேண்டும்.. ஆனால் மாடுகள் புதைமணலில் எப்படி சிக்காமல் நின்று கொண்டிருக்கின்றன என்பது புரியவில்லை..
உடனே ஒருவர் கைபேசியிலிருந்து ஃபயர் சர்வீஸுக்கு தகவல் தந்தார்..
பயர் சர்வீஸ் வந்தது. அதற்குள் ஊர் கூடிவிட்டது. அந்த இந்திக்கார பையனை வெளியில் பத்திரமாக மீட்டு தரையில் கிடத்திவிட்டார்கள். அவனால் நிற்க முடியவில்லை. மரணபயம் அவன் உடலின் உதறலில் மீந்திருந்தது..
கோணார் வீட்டு மாடுகள் அனைத்தையும் வீட்டிற்கு ஓட்டிச் சென்று விட்டார்கள்..
எங்கள் மாட்டின் கயிறை பிடித்து இழுக்கிறேன்.. அது அவ்விடத்தை விட்டு நகர மறுக்கிறது.. தரையில் படுத்திருந்த அந்த இந்திக் காரனை நாவால் நக்கிக் கொடுத்தபடி இருந்தது..
இப்போது ஆம்புலன்ஸின் ஸ்டெரெட்சரில் அந்தப் பையனை ஏற்றி சாலைக்குக் கொண்டு வந்தார்கள்.. ஆம்புலன்ஸ் புறப்பட்டதும்.. என் கையிலிருந்த தும்பை விடுவித்துக்கொண்டு அப்படி ஓடத்தொடங்கியது பசு..
சட் டென ஆம்புலன்ஸிலிருந்து அவனின் குரல் மத் தெளடோ மத் தெளடோ என ஒலிக்கத் தொடங்கியது..
எதிரே வேகமாக வந்த ஒரு லாரி எங்கள் பசுமீது பயங்கரமாக மோதியதில் பசு அங்கேயே உயிரிழந்துவிட்டது..
ராகவபிரியன்
Comments
Post a Comment