பூமிதேவி பின்நவீன கவிதைகள்..




காவல் எனும் தொழில் பொறுமையின் உச்ச நிலையைக் கோரும் சோதனைக் களம். வைகுண்ட வாயில் காப்போர்கள் பொறுமையிழக்கிறார்கள்.. சனகாதி முனிவரின் சாபம் அவர்களை அசுரப் பிறவிகளில் தள்ளிவிடுகிறது.. அவர்களில் ஜெயன் ஹிரண்யாட்சனாக பிறப்பெடுக்கிறான். பலம் பெற்றவர்கள் மதியிழந்துவிடுவார்கள் என்பது நியதி. அசுரபலத்தால் அதீத தவத்தால் தேவர் மனிதர் விலங்குகள் எதுவம் தனக்கு மரணம் தரும் வலிமையற்றிருக்க வேண்டுமெனும் வரம் பெறுகிறான். 

பொறுமையின் எல்லையான பூமியை பூமித்தாயை அவனால் வெற்றி கொள்ள இயலவில்லை.. சுருட்டி எடுத்து சமுத்திரத்தின் ஆழத்தில் அமிழ்த்தி விடுகிறான்..யாகத்தின் உருவாகி வெண்பன்றியென அவதரிக்கிறார் அரங்கன்.. அவர் சுருட்டப்பட்ட பூமியை மீட்டெடுத்தாக வேண்டும்.. பூமி அல்லது பூமிதேவி எப்படிப்பட்டவள் என ஆச்சார்யர் நிகம்மாந்த மஹாதேசிகர் பூஸ்துதியில் இப்படிச் சொல்கிறார்.. 


ஸங்கல்ப கல்ப லதிகா மவதிம் க்ஷமாயா:

ஸ்வேச்சா வரஹ மஹிஷீம் ஸூலபாநுகம்பாம்

விஸ்வஸ்ய மாதர மகிஞ்சந காமதேநும்

விச்வம்பரா மசரண: சரணம் ப்ரபத்யே


இப்பாடலை இந்த அரங்கனடிமை தன்னளவில் தமிழில் தர நேர்ந்தது அரங்கனின் ஆணை..

பூமிதேவி பின்நவீன கவிதைகள்..

----------------------------------------------------------

பாடல் .....  1.

ஆகாய அளவிலான மானுட ஆசைகளை

பறித்துண்ணும் நிலையில்

கையெட்டும் தூரத்தில் 

முதிர்க் கனியாக்கி 

மேனியெங்கும் தாங்கிய

கற்பகக் கொடிபோல நிற்பவள் பூமி..


பழங்களையும் இலக்குகளையும்

பறிக்கக் கைகளும் கால்களும்

வலிமை மிக்க உடலொன்றும் 

வேண்டுமல்லவா..?

மனம் மட்டும் போதுமோ..?


மனவெளியெங்கும்

கொட்டிக் கிடக்கும் அபிலாஷைகளை

கைகள் கால்கள் உடல்கள் அற்றிருப்பினும்

எல்லா உயிர்க்கும்

கறக்கக் கறக்க மலடற்ற 

பாத்திரம் நிறைக்கும் பால்பசுவாய்

பேரன்னையாய் சுழல்பவள் பூமி..

 

பூமி நம் தாய் மட்டும் அல்ல..

திருவரங்கனின் திருமதியும் 

திருமகளின் சகோதரியும் கூட..


அக்கற்பகக் கொடியை 

காமதேனுவை அன்னை பூமியை 

வாழ்வின் வெற்றிக்கான 

பொறுமைக் களத்தில் தோற்றவன்

வேறு வழியின்றி

சரணடைகிறேன்..


ராகவபிரியன் தேஜஸ்வி


Comments

Popular posts from this blog