பயணம் என்பது விதிக்கப்பட்டிருக்க வேண்டும். நகர்தல் என்பதை பயணமெனும் கூறுக்குள் அடுக்குதல் பிரயத்தனங்களை தோற்கச் செய்யும். பயணம் எல்லா உயிர்களுக்குமானது. பயணங்களில் எதையெதையோ கண்கள் பார்க்கும். ஆனால் மனம் சில முக்கியமானவற்றைத் தரிசிக்கும். தரிசனம் என்பது நகராத ஜடப் பொருளையோ இல்லை நகரவியலாமல் கட்டப்பட்ட உயிர் பொருள் ஒன்றையோ காண்பதல்ல.
கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும்.. நெடுந்தொலைவு பயணம் செய்து உயர்ந்த மலைச் சிகரங்களையோ அருவிகளையோ தரிசனம் செய்வதற்குமான வேறுபாடுகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவை. வெளிக் கண்களுக்கான தரிசனமும் உள் நோக்கிய தரிசனமும் வெவ்வேறானவை. மிருகக் காட்சி இடங்களில் தரிசிக்கும் மிருக வாழ்விற்கும்.. காடுகளில் தரிசிக்கும் மிருக வாழ்விற்குமான நுண்ணிய நகர்வுகளைத் தரிசிக்கவே நிறைய பயணங்கள் தேவைப்படுகிறது. எவ்வளவு தொலைவும் எவ்வளவு வேகமும் நிறைந்த பயணமென்றாலும் தரிசனப் போதாமையை வாழ் நாள் முழுவதும் சுமந்து திரிந்தாக வேண்டும்..
கூட்டாக பயணித்தால் தரிசனங்கள் பெரும்பாலும் கிட்டுவதில்லை. தனியாகப் பயணிக்கையில் தரிசனப் பெளர்ணமி மேகங்களுக்குள் மறையாமல் ஒளிர்வதைக் காணமுடியும்.. இதைத் தான் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த்...
ஐ வாண்டர்டு லோன்லி..அஸ் அ கிளெவ்ட்.தட் ப்ளோட்ஸ் ஆன் ஹை ஹில்ஸ் அண்ட் வேலிஸ்... என்கிறார்..
கைலாயத்தைப் பார்க்க டூரிஸ்ட் வியாபாரிகள் கூட்டாக மனிதர்களை அழைத்துச் செல்கிறார்கள். அங்கே கைலாய தரிசனம் முற்றாகக் கண்டவர்கள் எவரும் இல்லை என்பதுதான் தரிசன நிஜம்.. கூட்டாக பயணம் செய்கையில் ஆபத்துக்களிலிருந்து மீண்டு வருவதை விட விபத்துக்களில் சிக்குவது ஆகச் சாதாரன நிகழ்வென்பதைப் பார்க்க முடியும்.. பயணங்கள் ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவை எனில் தரிசனங்களும் தான்..
ஆச்சாரியர் நம்மாழ்வார் தரிசனம் பற்றி இப்படிச் சொல்கிறார்...
கட்டுரைக்கில் தாமரை நின் கண். பாதம், கை ஒவ்வா;
கட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டு உரையாய் புற்கு என்றெ காட்டுமால் ...பரஞ்சோதி...
ஆழ்வார் அரங்கனைப் பார்த்துப் புகழ் உரை பேசுபவர்கள்.. அரங்கனின் மேல் உள்ள ஆபரணங்களையும் அவை செய்யப்பட்ட தங்கத்தின் தரத்தையும் மட்டுமே பார்க்கிறார்கள்.. அவர்கள் உவமை சொல்வது அவர்களின் பார்வையைப் பொருத்தது.. ஆனால் அரங்கனை ஆத்ம தரிசனம் செய்தால் தான் அவன் உவமைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது புரியும்..
அப்படித்தான் நடந்து விட்டது. கணவனின் கூற்றுக்கு மாறாகவே எதையும் செய்தாக வேண்டுமெனும் சங்கல்பம் கொண்ட மனைவியும் பேரப் பிள்ளைகளும் மகிழுந்துவில் பயணிக்கிறார்கள்.. அவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வருகிறார்கள்.. கணவன் மகிழுந்துவை இயக்கிக் கொண்டிருக்கிறான். பயணிகளை பயணிகக்ச் செய்யும் சக்தி வேகங்களில் இன்பங்களைத் தருகிறது.. அதனால் தான் ட்ராவலிங்க ப்ளெஷர் தனித்துவமானதென உணர்ந்தவர்கள் சில காலங்களுக்கு முன் கூட மகிழுந்துக்களை ப்ளெஷர் என்று அழைத்திருக்கிறார்கள்..
திடீரென ப்ரேக் பலகையை கணவன் அழுத்த வேண்டியதாகிறது. மனைவியும் குழந்தைகளும் தங்கள் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்படுகிறார்கள்.. மித வேகம் என்பதால் மகிழுந்துக்குள்ளேதான் விழுகிறார்கள்.. அதிவேகமெனில் மறுமைக்குள் வீசப்பட்டிருப்பார்கள்.. கணவன் சீட் பெல்ட் அதாவது இருக்கைப் பட்டையை அணியச் சொன்ன ஒரே காரணத்திற்காக மனைவி எதிராகச் செயல்பட்டதன் விளைவு அது.. பயணங்கள் கூட்டாக செய்யப்படுகையில் விபத்துக்கள் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது.. ஆனால் பாதுகாப்பு என்பதை பயணிதான் தன் ஆத்ம தரிசனத்தில் கண்டடைந்தாக வேண்டும்..
விபத்தற்ற பாதுகாப்பான மனம் திருப்தியடையும் தரிசனம் கிட்டும் பயணங்கள் அனைவருக்கும் அமைய வேண்டும்.. இதுதான் நிகழ் பயணத் தேவை..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்
Comments
Post a Comment