ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/12


என் பிறப்பிற்கு முன்பே அனைத்தும் இருந்திருக்கின்றன..

ஆனால் எனக்குத் தெரியவில்லை

அவைகள் எப்போதிலிருந்து பிறப்பெடுத்தன என..

மலைகள் ஆறுகள் கடல் மரம் புழுக்கள் பறவைகள்

கோவில்கள் குளங்கள் மேலும்

அதில் சலனம் உண்டாக்க எறியப்பட்ட கற்கள்

எல்லாமும் எல்லாமும் தான் என் பிறப்பிற்கு முன்பே இருந்திருக்கின்றன..


நான் பிறந்த உடன் அழுதிருக்கிறேன்..

அதனால் என் பிறப்பிற்கு முன் அமைதியிருந்திருக்கிறது..

 நான் அழுதவுடன் அம்மா பாடியிருக்கிறார்கள்

ஆமாம் தாலாட்டும் இருந்திருக்கிறது..

அம்மா சிறுகரண்டியில் பாலூட்டியிருக்கிறார்கள்..

அதற்கு முன்பே அண்ணுக்காக வாங்கிய வெள்ளிப் பாலோடை

இருந்திருக்கிறது..

நான் நடைபயிலும் முன்பே நடைவண்டியிருந்திருக்கிறது..

அப்போது தான் உணர்ந்தேன்

எனக்கு முன் அண்ணன் இருக்கிறானென..


என் வாயிலிருந்து பேச்சுக்கள் பிறக்கத் தொடங்கின..

அண்ணன் எனக்கு முன்பே பேசிவிட்டான் எனச் சொன்னார்கள்..

எனது சொல்லுக்கும் செயலுக்கும் முன்பே அனைத்தும் இருந்திருக்கின்றன..

திடீரென முதுகில் ஒரு கத்தி பாய்ந்தது..

உலோக காலத்திலிருந்தே முதுகில் கத்தி செருகுவதும் இருந்திருக்கிறது..

இப்போது என் பிறப்பிற்கு முன்பிருந்த

அனைத்தும் வறுமையும் முதுகில் செருகப்பட்ட கத்தியும்

அதில் பதிந்திருந்த என் அண்ணனின் கைரேகையும்

இருக்கின்றன..

ஆனால் இதையெல்லாம் பேசக்கூடாதெனும் ஊமைத் தன்மை

முன்பே இருந்ததா எனத் தெரியவில்லை..

ஆனால் ஊமைகள் இருந்திருக்கிறார்கள்.. இருந்திருக்க வேண்டும்..


ராகவபிரியன் தேஜஸ்வி..






Comments

Popular posts from this blog