எதைச் சொல்வதென்று புரியவில்லை. காலத்தின் துருப்பிடித்த பிசிறொன்று இதயத்தைக் கீறிவிட்டது. எப்போதோ தான். ஆனால் இப்போதும் ரத்தக்கசிவு நின்றபாடில்லை. பணிக்காலத்தில் பட்ட கீறல் காயம். அதனால் ரயில்பயணங்கள் தவிர்க்கப்பட்டன. மகிழுந்துவை இயக்க கால்கள் இப்போது ஒத்துழைப்பதில்லை. பயணத்திற்கான முன்பதிவு செய்தாகிவிட்டது. ரத்தச் சொதப்பலால் எது பயணத்தேவை எது பயணத்தில் தேவை என்பது மனக் கீரிப்பிள்ளையாய் தோன்றி ஒரு நொடியில் மறைந்து விடுகிறது.. எதையும் இப்போது இதயம் சரியாகக் காட்டுவதில்லை.

கைபேசி தகவமைப்பில் படுக்கை எண்.. பெட்டி எண்..இன்னபிற எல்லாம் முன் கூட்டியே காணத் தருகிறார்கள்.. பயண உணவு வேண்டுமா? வேண்டாமா? எனும் மிரட்டல் குறிப்பு வேறு அருகில் மின்னுகிறது.. பணிகாலத்தில் பயணிகள் சூழ்ந்து கொண்டு எந்த நடைமேடை? வண்டி எப்போது வரும்?. இப்போது எங்கிருக்கிறது? இஞ்சினிலிருந்து எத்தனையாவது பெட்டி? எனக் கேள்விகளால் நிலைய அதிகாரியைத் துளைத்த காலத்தின் இரும்பாய் கனத்த கேள்விகளை பழைய இரும்புக் கடையில் போட்டாகிவிட்டது. அப்போது குத்திய பிசிறின் ரத்தக் கசிவால் இப்போதெல்லாம் நிலையத்திற்கு மட்டுமல்ல...நிலைய அதிகாரி அறையருகே கூட செல்வதில்லை.
இதோ இப்போது நிலைய அதிகாரியே வருகிறார். மரியாதை செலுத்துகிறார். குருபூர்ணிமா வணக்கமாம். சூம்பிய கால்களைத் தொட்டு அத்தனை கூட்டமும் பார்க்க கண்களில் ஒற்றிக் கொள்கிறார். வடநாட்டிலிருந்து வந்திருந்தாலும் தூய தமிழை அழகாக மழலை இனிமையுடன் பேசுகிறார். மீண்டும் ரயில் நிலையங்களில் ஓயாமல் வீசிக்கொண்டிருக்கும் காற்று பழை இரும்புகளை வீசிவிட்டுப் போகிறது..
சரி தம்பி வாழ்க வளமுடன்.. ஒரே ஒரு சந்தேகம்.. கைபேசி தகவலில் நடைமேடை இரண்டு என மின்னுகிறது. ஆனால் சிகப்பு நட்சத்திரம் வேறு உறுதிப் படுத்தப் படாத தகவல் என்பதாக அருகில் காட்டுகிறதே.. என வினவ.. அவருக்கும் தெரியவில்லை..
நிறைய பயணிகள் இரண்டாம் எண் நடைமேடை நோக்கியே செல்வதால் அவர்களை பின் தொடர்வதைத் தவிர வேறு வழி.. இன்னமும் தகவல் உலக வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆனால் முகநூலில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அவ்வப்போது இரும்புக் கம்பியால் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டுப் போகும்.
முன்பெல்லாம் வண்டிகளைப் பற்றிய நுண்ணிய தகவல் விரல் நுனியில் வைத்திருப்பார்கள் ஊழியர்கள்..அந்தக்கால தகவல் அறியத் தரும் விழுமியங்கள் இப்போது எதோ ஒரு ரயிலில் ஏற்றிவிட்ட பூனையாக மீண்டும் ஏறிய இடத்திற்கே எப்படியோ திரும்பி வந்துவிடுகிறது. வந்ததும் ஒருமுறை இதயத்தை இன்னும் கொஞ்சம் பிறாண்டி விட்டுப் போய்விடுகிறது..
மாணவர்கள் சரியில்லையென்றால் அது குருவின் இயலாமை தானே.. குருபூர்ணிமா சந்திரனைப் பார்க்க கொஞ்சம் அதன் விளிம்பு நசுங்கியிருப்பது போல் காணப்பட்டது..
கூடு திரும்புதல் என்பது கீறல்களுக்கு களிம்பு பூச அல்ல என்பதும் புரிந்தது..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog