என்ன வடவாளி கிருட்டினரே ஏன் சபைக்கு இவ்வளவு தாமதமாக வருகிறீர்..
கடும் கோபத்தில் கொந்தளித்தார் ராமதேயராயர்.
சபையில் பதுங்கிப் பதுங்கி தன் இருக்கைக்கு வந்ததை ராதேரா ர் பார்த்துவிட்டதைப் புரிந்து கொண்ட வகி நிமிர்ந்து நின்றார். பேசத் தொடங்கினார்..
மன்னித்து விடுங்கள் அரசே... நிகம சர்மாவின் இறுதிசடங்கில் அரசு மரியாதைச் செலுத்த தாங்கள் தானே என்னை நியமித்தீர்கள்..
அது நேற்று.. நேற்றே நைஸாக உத்தியோக கணக்கில் வீட்டிற்குச் சென்றுவிட்டீர்கள்.. இன்றும் தாமதமாக வந்துவிட்டு அதுவும் வாசலில் நின்று உள்ளே வரலாமா என்று அனுமதியும் கேட்காமல் பதுங்கிப் பதுங்கி இருக்கை வரை வருவதை எந்த அரசனும் பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அறிவீர்கள் தானே..
நன்றாக அறிவேன் அரசே..
சொல்லிக்கொண்டே தன் கைபேசியைத் திறந்து ஒரு நொடி கூர்ந்து பார்த்தார்.. இருபத்து நான்கு மணி கடந்தும் போதிய லைக்குகளோ கமெண்ட்டோ இல்லை
ஒரே ஆச்சர்யம் அவருக்கு.. நிகமசர்மாவை அழைத்துச்செல்ல வந்த எமதூதர்களுக்கும் வைகுண்டத்திலிருந்து வந்திருந்த விஷ்ணு லோக ரெப்ரசண்டேடிவ்களுக்குமான ஆர்க்யூமெண்டை அட்டகாசமான தெலுங்கில் முக நூலில் பதிவு செய்திருந்தும் கூட எவருமே எதிர்வினை ஆற்றவில்லை எனும் இலக்கிய வரலாற்றுத் தவறை எப்படி ஆற்றுப்படுத்துவதென ஒரு நொடிதான் சிந்தித்தார்..
அதற்குள் பொறுமையிழந்த ராதேரா...
வடவாளிக் கிருட்டிணா.. [கத்தியே விட்டார்]... எதற்காக என் கோபத்தைக் கிளறுகிறாய்.. கைபேசியை உத்தியோகப் பொழுதுகளில் உபயோகிக்கக் கூடாதெனும் அரச கட்டளையை யார் மீறினாலும் சிரச்சேதம் உறுதி.. அதற்கு முன் விசாரணைக்காக உங்களை தக்கான பீடபூமியிலிருந்து திராவிட தேசம் வரை ஒற்றைக் குதிரை ரதத்தில் அழைத்துச் சென்று பின் நிசிதாண்டி இறக்கி விடும் அதிகாரமும் ராஜ நீதி காக்கும் கடமையும் அரசருக்கு இருக்கிறதென அறிவீர் தானே..
சற்றும் பயமின்றி.. கொஞ்சமும் பொறுமையிழக்காத வகி மெல்ல இருக்கையில் அமர்ந்தார்.. அவரது ஆசனத்தின் வலது கைதாங்கி கழற்றப்பட்டிருந்தது.. அனுமதியின்றி சபைக்கு வராத மந்திரிகளின் ஆசனத்தில் கைதாங்கி அகற்றப்படவேண்டுமெனும் விதி எண் 110 கடைபிடிக்கப்பட்டிருந்தது..
வடவாளி கிருட்டிணருக்கு இப்போது கடும் கோபம்..புறப்பட்டது. கேபினட் அந்தஸ்த் உள்ள அரசவிகடகவிக்கே கைதாங்கி கழற்றும் தண்டனையா எனும் அறச்சீற்றம் உசுப்ப.. உடனே எழுந்தார்..
அரசே இது அநீதி.. உடலைக் குறுக்கி கைகளை தொடைகளின் நடுவில் வைத்து பவ்யமாக உத்தியோகம் செய்யும் எங்களுக்கு அவ்வப்போது கையிளைப்பாறுதல் தருவது இருக்கையின் கைதாங்கி. கைதாங்கியற்ற ஆசனங்கள் இருக்கை எனும் பெயருக்கு இழுக்கு சேர்ப்பவை.. என்பதை நீங்கள்தானே சொல்வீர்கள்..ஆகையால் உடனே எனது இருக்கையின் வலது கைதாங்கியைப் பொருத்த ஆணையிடுங்கள்.. இழுக்கை நீக்கி இறவாப் புகழ் பெறுங்கள்..
இப்போது பெருமை பொங்க சபையைச் சுழலும் கண்களால் பார்த்தார்..வகி..
வடவாளிக்கிருட்டிணரே.. நீங்கள் ஏன் நிகமசர்மாவின் அக்காவினுடைய மூக்குத்தியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.. இது ராஜத் துரோகம்.. தெரியுமா உங்களுக்கு...
மன்னித்துவிடுங்கள் அரசே.. நிகமசர்மாவின் அக்கா மூக்குத்தி காணவில்லை என்று பாமினி சுல்தானின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தாக்கல் செய்திருக்கிறார். அதற்குள் நிகம சர்மாவின் ஆன்மாவை அழைத்துச் செல்லும் எம தூதர்களுக்கும் வைகுண்ட ரெப்ரசண்டேடிவ்களுக்கும் கடுமையான வாக்குவாதம்.. முக நூல் முழுவதும் ஒரே கண்டனப் பதிவுகள்.. அதில் இந்த எளியவனின் நிகமசர்மா இரங்கல் குறிப்பிற்கு எவரும் கண்ணீர் இமோஜியைக்கூட அழுத்த நேரமின்றி இருந்திருக்கிறார்கள். ஏன் நீங்கள் கூட இந்த எளிய உங்கள் அரசவை கேபினட் அந்தஸ்து உள்ள விகடகவியின் பதிவிற்கு எதிர்வினையாற்றவில்லை. இப்படியிருக்கையில் நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறான் இந்த வகி..
வகி.. உனக்கு சொற்பொழிவாற்ற இந்த அரண்மனையில் உத்தியோகம் தரவில்லை. தம்பி இறந்ததைக்கூட பொருட்படுத்தாமல் மூக்குத்தியைக்காணவில்லையெனும் நிகச வின் அக்காவின் அலறல் ராஜசபையில் எதிரொலிப்பது உங்கள் காதுகளில் விழவில்லையா.. ஆராய்ச்சி மணி தானே ஒலிக்கும் சப்தம் நம் அரண்மனைச் சுவர்களில் எதிரொலிக்கிறதே.. அதுவும் கேட்கவில்லையா.. கேட்கும் சக்தியற்ற உங்கள் காதுகளுக்கு எதற்காக ராஜ்ஜிய சீருடையின் அங்கமான குண்டலங்கள்.. உடனே அவற்றைக் கழற்றி கஜானாவில் ஒப்படைத்துவிட்டு வாருங்கள்..
கத்தியபடியே யாரங்கே என மேலதிக சப்தத்துடன் கூப்பிட்டார் ராதேரா ராஜன்..
ஓடிவந்த சிப்பாய்களிடம்.. உடனே இவரை ஒற்றைக் குதிரை ரதத்தில் அழைத்துச் சென்று திராவிட நாட்டில் இறக்கிவிடுங்கள்..
இந்த ஆணையைக் கேட்ட வகி
அரசே என்னை நாடு கடத்துங்கள்.. ஆனால் திராவிட நாட்டிற்கு வேண்டாம்.. நிகச வின் அக்கா புகார் பதிவு செய்த பாமினி நாட்டிலாவது இறக்கிவிடச் சொல்லுங்கள்.. எங்கு புகார் செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு தானே விசாரணைகளைச் செய்ய இயலும்..
ராதேராவிற்கு கடும் கோபம்..
வகி..நீங்கள் எல்லை மீறிப் போகிறீர்கள்.. ஏன் திராவிட நாடு வேண்டாமெனச் சொல்கிறீர்கள்..
அரசே திராவிட நாடு இப்போது பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.. அதனால் தான்..
வகியின் கூற்றிலிருந்த உண்மை ராதேரா அரசருக்குப் பளீரென உறைத்தது.. உடனே கைபேசியைத் திறந்த அரசர் வகியின் இரங்கல் பதிவிற்கு ஆட்டின் இமோஜியை இட்டுவிட்டு தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார்..
அரசவை பொற்கொல்லர் வகியின் இருக்கையில் வலது கைதாங்கியை மீண்டும் பொருத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்..
ராகவபிரியன்
Comments
Post a Comment