கடந்த இரண்டு மாதங்களாக திருச்சியில் இல்லை. மீண்டும் காஞ்சிக்கு வருவதற்காக பேரூர்ந்து அட்டவனையை கைபேசியில் தேடுவது கொடுமை. கூகுளில் தேடுவதைத் தவிர வேறு கவனமீர்க்கும் செய்திகள் வந்துவிடுகிறது. இன்றைய ரியலிஸம் இது. ரியலிசத்திற்கும் சர்ரியலிஸத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என சி. சு. செல்லப்பா பதிவு செய்திருக்கிறார்.
ஒருவழியாய் நகரப்பேரூர்ந்து வழி சத்திரம் பேரூர்ந்து நிலையம் வந்தாகிவிட்டது. காலை ஒன்பது மணிக்கே வெயில் உக்கிரம் காட்டியது. வெயில் ரியலிஸமெனில் உக்கிரம் சர்ரியலிஸமென மனம் சொன்னது. சரி சர்ரியலிஸத்திற்கு அமித நடப்பியல் எனும் வார்த்தை பொருத்தமற்றதென சிசுசெ சொன்னது பொறிதட்டியது. அக்கண அடர்வில் பத்மா கபே ஹோட்டலுக்குள் நுழையவியலவில்லை. சட்டையிலும் சுரிதாரிலும் மூவர்ணக் கொடியின் துணுக்கு அணிந்தவர்கள் துளியுண்டிக்காக வரிசையில் நிற்கிறார்கள்.
காஞ்சி செல்ல பஞ்சப்பூர் செல்ல வேண்டுமாம். மத்திய பேரூந்து நிலையத்தைப் பெயர்த்தி பத்து கி.மீ தொலைவில் வைத்துவிட்டார்களாம். நாங்கள் மூத்தக் குடிமக்கள் பெயர்த்தியைக் காண புறப்பட்டுவிட்டோம். ரியலிஸம்..அதாவது நடப்பியல் உண்மை. திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் முன் இன்னொரு பேரூர்ந்தில் வந்திறங்கினோம்.. அமித நடப்பியல் அமில வெய்யில் அகோரபசி.. ஐம்பதாண்டுகளாய் ஒரே பெயரில் இருக்கும் சங்கர் கபேக்குள் துளியுண்டி உண்ண.. அன்றிருந்த தரமும் சுவையும் பெயர்த்து வேறெங்கோ வைத்துவிட்டார்கள் போல..
ஒருவழியாய் மூன்று சக்கர உந்தூர்தியைப் பிடித்து டிவிஎஸ் டோல்கேட் வந்தோம். அவரின் அறிவுரை மன்னார்புரத்தில் காஞ்சி பேரூர்ந்துகளோ குளிர்சாதன வசதி கொண்ட சென்னைப் பேரூர்ந்துகளோ வருவதில்லையாம். நீத்தார் வழிபாட்டுப் பிண்டங்கள் மாடியில் வைத்துவிட்டு காக்கைக்கு காத்திருக்கும் நிலையில் எதையும் சீந்தாமல் பறக்கும் காகக் கூட்டங்கள் போல பேரூர்ந்துகள் மன்னார்புரத்தில் மேம்பாலம் வழி பறந்துவிடுமென பயம் காட்டினார். எப்படியோ எங்களை டிவிஎஸ் டோல்கேட்டில் இறக்கிவிட்டார். அங்கும் மேம்பாலம் இருக்கிறது. அவரின் பயணச் சத்தத்திற்கான உத்தியின் சப்தம் அமித நடப்பியலின் அவலத்தைக் காட்டியது.. நகரமயமாதலின் அசுரன் தன் கோரைப் பற்களுடன் உலகதிர சிரிப்பது பயம் தந்தது.
இப்போது காஞ்சிக்கான குளிர்சாதனமற்ற பேரூர்ந்து வந்தது. அவரிடம் காஞ்சிக்கு நேரடி குளிர்சாதன பேரூர்ந்து எப்போது வருமெனும் வினா அறியாமையால் தொடுக்கப்பட்டது. குளிர்சாதன நேரடி அரசுப் பேரூர்ந்துகள் காஞ்சிக்கு இல்லை என்றார் நடத்துனர். செங்கல்பட்டு வரை குளிர்சாதனப் பேரூர்ந்தில் சென்று அங்கிருந்து காஞ்சி செல்லுங்கள் என்ற இலவச அறிவுரையும் தந்தார். அதற்குள் முன்பக்க மத்திய இருக்கைகள் நிரம்பிவிட்டன.
பெயர்த்திகளைப் பார்த்தாக வேண்டும். அன்பு விலைக்குக் கிடைக்கும் காலத்தில் தாத்தாக்களின் பேரப்பிள்ளைக்களுக்கான அன்பின் ரியலிஸம் அமிலமென கொதிக்கக் தொடங்கியது. ரியலிஸம் அதுவும் பயண ரியலிஸம் அமித நடப்பியலின் உச்சம் காட்ட பயணிக்க முடிவு செய்தாகிவிட்டது. இப்போதைய தனிமனித முடிவுகள் சூழலிய நடப்பியல் அழுத்தங்களால் எடுத்தாளப்படுவது கொடுமை. அக்கணத்தில் ஒரு பொறையை அருகிருந்த தேனீர் கடைக்காரர் வாசலில் விட்டெறிய எங்கிருந்தோ வந்த காக்கைக் கொத்திக்கொண்டு போனது.. பேரூர்ந்துக்குள் ஏறி அமர்ந்தோம்..
வண்டி விழுப்புரத்தில் நின்றது. மூன்று மணி நேரபயணம். உடல் உபாதை தணிக்க விழுப்புரம் பேரூர்ந்து நிலைய கழிவறைகளின் சுகாதாரம் பற்றிய முந்தைய அனுபவம் பயம் காட்டியது. ஆனால் ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கிச் செல்ல..இறங்கி உட்சென்றால் கழிவறை ஆகச் சுத்தமாக ஆச்சரியமளித்தது. உபாதை தணித்து வருவதற்குள் பேரூர்ந்தைக் கிளப்பி விட்டார் ஓட்டுனர். மனைவி சொல்லாமல் கொள்ளாமல் கணவன் துறவறம் பூண்டு காசிக்கு பாதயாத்திரையாக இறங்கிப் போகையில் அலறுவதைக் கண்டு பயணிகளும் ஓட்டுனரும் நடத்துனரும் சேர்ந்தே அலறும் சப்தம் விழிமானகரை விழித்தெழச் செய்துவிட்டது. எங்கிருந்தோ ஓடிவந்த கழிப்பறை காவலர் பத்து உரூபாய் கொடுங்கள் என இன்னமும் தாமதப்படுத்தினார். கையிலிருப்பதோ ஐன்னூறு தாள்.. ஒருவழியாய் க்யூ ஆர் ஸ்கேன் செய்து உபாதை தணிக்கும் கூலியைத் தருவதற்குள் பேரூர்ந்தைக் காணவில்லை.
சட்டென சர்ரியலிய சந்தோஷம் ஆட்கொண்டது. இந்தச் சுதந்திர தினத்தில் முழு சுதந்திரம் கிடைத்த உணர்வு ஆட்கொண்டது.. அவல நடப்பியல் ஆனந்த நிலையை சிசுசெ அனுபவித்திருப்பாரா அறியேன்.. அதற்குள் மீண்டும் அருகில் அதே பேரூர்ந்து வட்டமடித்து வந்து நின்றது. பூமி உருண்டை என்பதை இன்னொருமுறை உணர்ந்த பொழுது அது..
அவ்வப்போது பூமி உருண்டை என்பதை உணர்த்த சாம்பாரில் பருப்புருண்டை இடுவது நினைவில் வர பசிக்கத் தொடங்கியது..
ஆகச் சினத்துடன் கீழிறங்கிய நடத்துனர் அடுத்து விக்கிரவாண்டி அருகே ஒரு மோட்டலில் வண்டி நிற்கும் அதற்குள் ஏன் இறங்கினீர்கள் எனக் கடிந்து கொண்டார்.
மோட்டல் கழிவறைகளின் சுகாதார நிலை அதாவது நடப்பியல் நிஜம் புரிந்ததால் தான் ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கிய உபாதை தணிக்கும் அதே தளத்தை உபயோகித்த அமித நடப்பியல் அவர்களுக்கு ஆத்திரத்தைத் தந்தது யதார்த்தம் தானே..
விக்கிரவாண்டி தாண்டிய மோட்டலில் வண்டி நின்றது.. சிசுசெல்லப்பா ஏன் அமித நடப்பியல் சர்ரியலிஸத்திற்கான மொழிமாற்றம் இல்லை எனச் சொன்னது தெளிவாகப் புரிந்தது.. அடுத்தாக காஞ்சியில் தான் பேரூர்ந்திலிருந்து காளிதாசனின் நகரேழு காஞ்சியின் தரையில் கால் வைத்தல் நிகழ்ந்தது.. சுதந்திர தினத்தின் சர்ரியலியம் அதாவது அவல நடப்பியல் இப்போது தமிழகம் எங்கும் உதித்திருப்பதை எல்லோருமே புரிந்டு வைத்ருக்கிறார்கள்.. இந்த இலக்கிய மூத்தகுடி [தமிழில் பொருள் மாறுவதால்.. சீனியர் சிட்டிசன் எனப் பொருள் கொள்க] ஆர்வலனைத் தவிர..
ராகவபிரியன்
Comments
Post a Comment