தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்.. 6
பயண கால தேனீருக்கான அடிப்படை ஆழ்மன உந்துதலை சாலையோர தேனீர்கடைகள் உற்பத்தி செய்யும் தேனீர் வாசங்கள் ஒரு கர்மாவென வழி நடத்துகையில் மகிழுந்துவை நிறுத்துதல் இச்சையற்ற அணிச்சையின் செயலாகிப்போகிறது.. திண்டிவனம் சாலையோர உணவகங்கள் நிரம்பி வழியும் ஊர்..இதற்கு வனமெனும் பின்னொட்டை எவர் சேர்த்திருப்பாரென யோசிக்கையில் ஆழ்மன உந்துதலை வழி நடத்தும் உயர்தர தேனீர் வாசமொன்று புறப்பட்டு முன் செல்லத் தொடங்கியது..
உயர் தர உணவகங்கள் காட்டும் உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்குமான இடைவெளிகளில் சிந்தை புகுந்து வெளி வந்தது.. தேனீரின் தரமதிப்பீடுகள் உணவக விளம்பர செல்வச் செழிப்பு காட்டும் உத்திகளில் இல்லை என்பதை புரிந்து கொள்ள சற்று அரிய பயண நேரத்தைச் செலவு செய்ய வேண்டியதானது.. உயர்தர உணவகங்களில் வெறும் தேனீர் மட்டும் அருந்தும் வாடிக்கையாளருக்கான அகமதிப்பீட்டின் அலகுகள் ஏற்கனவே அனுபவ ஏடுகளில் மீள் வாசிப்பிற்கு உள்ளானதால் நடுத்தர செல்வ நிலையைக் காட்டும் தேனீரகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் சுயமன இருண்மையை மீறிச் செயலாற்ற வேண்டிய சவாலாகத்தான் இருந்தது..
அப்படியான தொன்ம கலாச்சார தேய்மானமற்ற தேனீரகம் ஒன்றைக் கண்டு பிடித்த அந்த நொடியில் வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடித்து கோழிக்கோட்டின் கடற்கரையில் கால் வைத்த நொடியின் மன உணர்வு நிலையை உணரத் தந்தது. உடனே டி.எஸ். எலியட்டின் புகழ்பெற்ற கவிதைகள் நினைவின் நுகத்தடியை தன் தோளில் தானே ஏற்றிக் கொண்டது.. மானுடம் எப்படி தங்களது அரிய நேரத்தை தேனீர்க் கோப்பைகளில் சிறு எவர்சில்வர் கரண்டிகளால் துழாவி வீணடிக்கிறார்கள் என்பதை எலியட் இப்படிச் சொல்கிறார்..
i have measured out my life with coffee spoons../ before the taking of the toast and tea..
அவரின் வரிகள் நேர இழப்பின் ஆற்றாமையைச் சொல்வது போல் தொன்ம கலாச்சார தேய்மான தேனீரகமொன்றைத் தேடும் நேர இழப்பு ஆற்றாமை அதிர்வுகளைத் தரத் தொடங்கியது..
பண்டைய தேனீரகங்கள் என்பதைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளை கைபேசியில் தேடுகையில் நேர இழப்பின் வாழ்வியல் நட்டங்களும் உயர்வான தேனீர் ஒன்றை அருந்துகையில் ஈடாகிவிடுமெனும் புரிதல் நிகழ்வதைத் தடுக்கவியலாமற்போனது..ஆதி முதலான தேனீர் பற்றிய குறிப்புகள் பொ.ஆ.பி..1600 களில் ஆங்கில இலக்கியத்தில் எட்மண்ட் வாலர் என்பவரால் எழுதப்பட்டதாக செயற்கை நுண்ணறிவு செப்பியது.. உயர்தர தேனீருக்கான சீர்மையை அத்தேனீரக உரிமையாளரிடம் கட்டளை எனும் சம்ஸ்கிருத கலப்பற்ற சீர்மையெனும் தூய தமிழ்ச் சொல்பயண்படுத்தி கட்டணம் செலுத்திச் சொல்ல.. பரிதாபமான பார்வையொன்றையும் தேனீர் தயாரிப்போளரிடம் தருவதற்கான வட்டி நெகிழி வில்லை யொன்றையும் தருகிறார்..
அந்நொடியில் காணாமல் போன அலைவரிசைக் கதிர்களை கைபேசி கண்டுபிடித்து அந்த பொ.ஆ.பி.1600 ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க கவிதையை ஒளிர்திரையில் ஒளிரவிட்டது..
"The Muse's friend, tea does our fancy aid, Repress those vapours which the head invade, And keep the palace of the soul serene."
இக்கவிதையை வாசித்த அந்த நொடியில் ஆன்மாவின் அரண்மனை அமைதியடைய தொன்ம கலாச்சார தேய்மானமற்ற அத்தேனீரக உரிமையாளர் தேனீரைக் கண்ணாடிக் கோப்பையில் வாடிக்கையாளரின் உருவம் உசுப்பிய பணிவுடன் தருகிறார். தரும்போது கைகளால் கோப்பை விளிம்பையும் அதன் அடிப்பாகத்தையும் துடைக்கும் ஆதர்ச செயலொன்றை பார்வைக்குத் தருவது பின் நவீன தேனீர் தரும் சந்தைப் படுத்துதல் உத்தியென்பது வாடிக்கையாளருக்கு உறைத்தாக வேண்டும்.. நிகழ் தேனீர் அடங்கிய கண்ணாடிக் கோப்பை நன்றாகக் கழுவப்பட்டிருந்தாலும் கூட விளிம்புகளில் முன்பு அருந்திய மானுட எச்சிலின் எச்சம் முழுமையாக துறக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதையும் அது முழுமையாக துடைக்கப்பட்டிருக்கிறதெனும் உத்தரவாத செய்கையையும் செய்து காட்டியதன் கலாச்சார முப்பரிமாணம் வாடிக்கையாளர்களை மூச்சு முட்டச் செய்துகொண்டிருந்தது.
தேனீருக்கு முன்பான மாச்சில்லுகள் நிறைய வட்டக் கண்ணாடிக் குடுவைகளில் வசீகரம் காட்ட மாச்சில் ஒன்றை தேனீரில் நனைத்து நாவில் வைக்கும் நவீன கலாச்சார நீட்சிக்கான உணர்வெழுச்சியை புறம் தள்ளுதல் கூடாதென்பதால் ஒரே ஒரு மாச்சில் அல்லது ஈரட்டியை குடுவையின் மூடி திறந்து வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும் வாடிக்கையாளர் அடிப்படை உரிமை அறியாமல் பேந்த விழித்த போதுகளில் அத்தேனீரக உரிமையாளர் மீண்டும் எள்ளல் பார்வையை வீசியது கலாச்சார தேய்மான அறிகுறிகளைக் கொண்டிருந்ததை தேனீரின் இருண்ட காலமென பதிவாகிவிட்டது. அதை குறிப்பேட்டில் இருந்து நீக்குதல் எப்போதெனும் கேள்வியை எழுப்பியபடி வரலாறு சற்று ஓய்வெடுக்க வேண்டியதானது..
ஒரே ஒரு மாச்சில் அல்லது ஈரட்டியை அத் தொன்ம கலாச்சார தேய்மான அறிகுறிகள் மாற்றத்தை நோக்கி நகரும் தேனீரகத்தின் தேனீரில் நனைக்கையில் தேனீரின் சூட்டின் தரம் சற்றே தளர்ந்திருப்பதென்பது தேனீருக்கான அருந்து கால தொடர்பறுத்தல் செய்கை. சூட்டின் தரம் தளர்வதென்பது தேனீரின் மீது படரும் தேனீராடையின் அடர்வில் இருப்பதை அது மாச்சில்லில் ஒட்டி வெளிவருகையில் தொடர்பறுத்தலின் கையறு நிலையின் உண்மைத் தன்மை காணக்கிடைத்தது..
தேனீர் அருந்திய பின்னான பயண நேர இழப்பை தொன்ம கலாச்சார தேய்மானமற்ற தேனீரகத் தேனீரால் ஈடுசெய்வதென்பது இனி பகீரதப் பிரயத்தனமெனப் புரிய மீள்ம உருண்டைகளின் வாயுவடர்வைச் சோதித்து அதன் உருளளின் துவக்கத்தை இயக்கும் இயந்திரத்தை உயிரூட்டும் பணி தொடங்கியது.. இனி பயணம் தொடர்வதும் எங்காவது தேங்குவதும் தேசிய நெடுஞ்சாலை தொன்ம தேய்மான தேனீரகம் ஒன்றின் ஈர்ப்பு சக்தியால் தான் இயலுமென யோசித்த வேளையில் விழுப்புரம் எனும் பெயர் தாங்கிய திராவிட மண்ணில் கம்பீரமாக ஆர்ய பவன் எனும் பெயர் தாங்கி நிற்கும் உணவகம் முன் மகிழுந்து தானாகவே நின்று கொண்டது..
ராகவபிரியன்
Comments
Post a Comment