அது 1976-78 காலம்.. கர்னாடகா என்றாலே தமிழ் மண்ணில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை தரும் மண். அன்றும் தான்...எங்கள் தூரத்து உறவினரிடம் ஏழ்மையும் விதியும் துரத்த கர்னாடகாவின் அப்போதைய பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பேட்டிற்கு ஓடிச் சேர்ந்தேன்.. பியூசி சேர்வதற்காகத்தான்.. ஆனால் அங்கு பியுசி இரண்டு வருடமாம்.. தமிழகத்தில் அப்போது பியூசி ஒரு வருடம் தான்..
சரி மேல்படிப்பு விதிக்கப்படவில்லையென்பதால் கனத்த இதயத்தை லேசாக மாற்ற ஹோஸ்பேட்டின் காடுகளுக்குச் செல்லும் பாதையில் இருந்த பாலா தியேட்டருக்குப் போனேன்.. அங்கே... நான் நின்ன மறயலாறே... படம் ஓடிக்கொண்டிருந்தது.. கதாநாயகன் ராஜ்குமார்.. ஆமாம் வீரப்பன் கடத்திய ராஜ்குமார் தான்.. கதாநாயகி லக்ஷ்மி.. அதான் ராஜராஜசோழன் படத்தில் சிவாஜிக்கு மகளாக வரும் அதே லக்ஷ்மி தான்..
அதில் ராஜ்குமார் பைக்கில் ரயிலில் போகும் லக்ஷ்மியை துரத்திச் செல்வார்.. காடு மலை ஆறு எல்லாவற்றையும் ரயிலின் பின்னால் துரத்துவார்... பைக்கில் லக்ஷ்மி பார்க்கும் போதெல்லாம் முகத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட சட்டைக் கிழியக் கிழிய துரத்துவார். சரி காதலிப்பதென்றால் பைக்கில் காதலியைத் துரத்தவேண்டுமென்று கன்னட சினிமா மூலம் வாழ்க்கைப் பாடம் கற்ற வருடங்கள் அவை..
பிறிதொரு நாளில் தமிழ் மண்ணுக்கே திரும்ப வேண்டியதானது.. உயிர் தமிழுக்கும் உடல் தமிழ் மண்ணுக்கும் தானே.. அதனால் தான்.. ஆனால் கன்னட லக்ஷ்மி தமிழ் சினிமாவிலும் நடித்த படங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.. லக்ஷ்மி போல் முகஜாடை உள்ள அப்போது என்னுடன் கல்லூரியில் படித்த மூன்று நான்கு பெண்களின் பின்னால் என் பணக்கார நண்பன் ஒருவனின் பைக்கை அதாவது டிவிஎஸ் 50 முந்தைய ஹீரோ மெஜஸ்டிக் பைக்கை ஓசி வாங்கி தொடர்ந்தேன்.. அந்த நான்கு பெண்களின் முகமும் லக்ஷ்மி போலவே இருந்தது உண்மைதான்.
அவர்கள் கரி இஞ்சின் இழுக்கும் ரயிலில் திருவாரூரிலிருந்து மாயவரம் செல்லும் வண்டியில் இருந்தார்கள்.. நானும் ஓசி பைக்கில் வண்டி புறப்பட்டதும் சாலை மார்க்கமாக பைக்கில் புறப்பட்டேன்.. அடுத்தாக சாலையும் ரயிலும் ஒரே இடத்தில் சந்தித்தது பேரளம் ரயில் நிலையமருகில் தான்.. பைக்கை நிறுத்தி விட்டு நிலைய அதிகாரியிடம் மாயவரம் வண்டி சென்று விட்டதா எனக் கேட்டேன்.. எந்த வண்டி என அவர் திருப்பிக்கேட்டார்..
நடிகை லக்ஷ்மி போல் முகஜாடை உள்ள நான்கு கல்லூரிப் பெண்கள் ஜன்னலோரம் பயணித்த வண்டி என்று கூறினேன்..
அதைப்பற்றி எனக்குத் தெரியாது தம்பி.. அடுத்த மாயவரம் வண்டி இன்னும் மூன்று மணி நேரம் கழித்துத் தான் வரும்.. அதில் நீ சொன்ன பெண்கள் இருக்கிறார்களா எனப் பார்.. என்றார்..
நானும் மூன்று மணி நேரம் அங்கேயே இருந்தேன். வண்டியும் வருவதற்கான மணி அடித்தார்கள்..அதற்குள் என் சட்டையைக் கொஞ்சம் கிழித்து விட்டு பிளேடால் முகத்தில் லேசாக ரத்தம் வரும்படி கீறிக்கொண்டேன்.. ஆனால் அந்தப் பெண்கள் அந்த வண்டியில் இல்லை...
நிலைய வாசலில் நிறுத்தியிருந்த என் ஓசி பைக்கையும் காணோம்..
ராகவபிரியன்
Comments
Post a Comment