கச்சி வரதனும் காலப் பனவனும்..1
அரங்கன் தன் திவ்ய திருத்தலங்களுக்கு பக்தர்களை அழைத்துக் கொண்டே இருக்கிறான். அழைப்பு என்பது மானுட வருகைக்கான மரியாதை. உறவுகளுக்கான அழைப்பு விடுத்தல் அவர்களுக்கான மரியாதையின் பங்கை பங்கமின்றி வழங்குதல். அழைப்பை பெற்ற மானுடம் வருகை புரிந்து வாழ்த்துவதோ இல்லை வேறு கடமையாற்றுதலோ பிரதிமரியாதையின் புகுபதிகை.
ஆனால் திருத்தலங்களுக்கான அரங்கனின் தெய்வீக அழைப்பு தங்கத் தாம்பாளத்தில் வெற்றிலைப் பாக்கு பழம் பணம் வைத்துத் தரப்படுவதில்லை. காலச் சுழற்சியில் மானுடக் கால் இடறுகையில் தெய்வத்தின் அழைப்பு தரப்படுவதை உணர்கிறான். உடனே அங்கு சென்று தன் வணக்கங்களையோ இல்லை தனக்கு விதிக்கப்பட்ட புனித கடமைகளையோ நிறைவேற்றுகிறான். திருப்பதி மற்றும் ஏனைய திருத்தலங்களுக்கு அன்றாடம் கூட்டம் கூட்டமாய் வருகை தரும் மானுடங்களின் கைகளில் அரங்கனின் அழைப்பிதழ் அருவ வடிவில் இருப்பதைக் காண இயலும்.
இந்தப் பனவனுக்கும் காஞ்சியின் வரதனெனும் திரு நாமம் கொண்ட அரங்கனின் அழைப்பிதழ் அனுப்பட்டிருக்கிறது. அதுவும் ஐம்பதாண்டுகளாய் அவனால் வாசிக்கப்படாமலே வாழ்வின் கால மாடத்தின் ஒரு மூலையில் கிடந்திருக்கிறது.. அழைப்பிதழ் உறையின் ஓரங்களில் தடவப்பட்ட மஞ்சள் ஐம்பதாண்டுகள் ஈரமாகவே இருந்திருக்கிறது..
பிரம்மன் அரங்கனை திருத்தேரில் நின்று சேவை சாதிக்கும் காட்சியைக் காண விழைகிறான். பெரும் யாகம் செய்ததின் பலனாக காஞ்சியெனும் சத்யவிரத திருத்தலத்திற்கு வருகிறான். அங்கே முதலில் தோன்றிய ஆகப் பெரிய ஒளி அவனின் கண்ணை மறைக்கிறது. சில அழைப்பிதழ்களை அலட்சியம் செய்கையில் மானுடக் கண்பார்வை மங்கிவிடுவது போல பிரம்மனின் பார்வை மங்கி விடுகிறது. ஒளி மெல்ல விலக வரதன் தேவராஜனாக திருத்தேரில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான்.
இந்தப் பனவன் முதன் முதலில் வரதனைக் காண காஞ்சியில் கால் வைத்தது 2022 ல். பனவனின் அறுபத்து மூன்றாம் அகவையில் தான். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அலட்சியப் படுத்தப்பட்ட அரங்கனின் அழைப்பை நிறைவேற்றித் தரவியன்றதும் அரங்கனின் செயல் தானே. இருப்பினும் வரதனுக்கான வணக்கங்கள் அல்லது பனவனின் கடமைகளென நினைத்தது உரத்து பிரபந்தம் வாசிப்பதென்பதென நினைத்திருந்தான். ஆனால் வரதன் அடுத்த மூன்றே ஆண்டுகளில் இந்தப் பனவனை கச்சியில் அவனின் திருத்தலத்தில் பெரிய காஞ்சியில் குடியேற்றி விட்டான்..
த்விரத சிகரி ஸிம்நா ஸத்ம வாந் பத்ம யோநே:
துரக ஸவந வேத்யாம் ஸ்யாமளோ ஹவ்யவாஹ:
கலச் ஜலதி கந்யா வல்லரீ கல்பசாகீ
கலயது குசலம் ந: கோபி காருண்ய ராசி:
அத்தகிர் அருளாளன் அம்மலையின் மேற்கில் குடியேறி நின்ற திருக்கோலத்தில் சேவை தருகிறான். பிரம்மனுக்காக பெரும் ஒளியென பூமிக்கு வந்தவன் கருணையின் வடிவம் ஒளிபொருந்தியதென பக்தர்களுக்கு உணர்த்தவே இங்கு எழுந்தருளியிருக்கிறான். இந்த கச்சி அரங்கன் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களும் மற்றும் மறுமையில் மோட்சமும் தருவதற்காகவே வைகுண்டத்திலிருந்து இறங்கி காஞ்சிக்கு வந்திருக்கிறான் எனச் சொல்கிறார் ஆச்சாரியர் நிகம்மாந்த மஹா தேசிகர்..
இப்போது புரிந்துவிட்டது அரங்கன் ஏன் இந்தப் பனவனை காஞ்சியில் குடியேற்றியிருக்கிறானென..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்
Comments
Post a Comment