கயிலை காண்... சிறுகதை..
அந்த நபருக்கு நாற்பது வயதிருக்கும். வசீகரமான சிரிப்பை நிரந்தரமாக அணிந்திருக்கும் முகம். எவரையும் எளிதில் எதற்கும் சம்மதிக்க வைக்கும் ஆற்றல் தெறிக்கும் கண்கள். அவரைப் பார்த்தால் முகவரி விசாரிப்பவராகவோ இல்லை ஏதேனும் காப்பீட்டு முகவராகவோ தெரியவில்லை..
முழுக்கை சட்டை. இறுக பிடிக்காமலும் தொள தொளவென இல்லாமலும் யானைக்காலடி இல்லாமலும் சீராக இடுப்பிலிருந்து கால் வரை ஒரே அளவில் பெட்டி போட்ட சுவடு தெரியும் முழுக்கால்சராய் அணிந்திருந்தார். சட்டையை கால்சராய்க்குள் செருகி சுறுசுறுப்பை வெளிக்காட்டும் தோற்றமுடன் அவர் என் வீட்டு வாசலில் இதோ நிற்கிறார்.
சார் உள்ள வரலாமா... அவரின் குரலின் பணிவும் இனிமையும் வித்தியாசமாக இருந்தது..
வாங்க... உட்காருங்க.. நீங்க... என இழுத்தேன்.
அவர் திண்ணையில் வந்தமர்ந்தார்.
சார நீங்க எங்கயாவது போகனுங்களா.. அவர் கேட்டதும் சற்று கோபம் என்னைப் பிடித்து தள்ளிவிட்டு முன் வந்து நின்றது..
எதுக்கு கேக்கறீங்க.. நீங்க யாருன்னு சொல்லுங்க மொதல்ல.. நான் எங்கயும் போகல.. அப்புடியே போகறதா இருந்தாலும் அதை ஏன் உங்ககிட்ட சொல்லனும்..
அதில்ல சார்.. கோவிச்சுக்காதீங்க.. நான் புதுசா ஆட்டோ வாங்கிருக்கேன். ஐடி கம்பெனில வேலை பார்த்தேன். என்னோட குடும்பம் பெரிசு.. இப்ப வேலை இல்லை. நீங்க அடிக்கடி பஸ்ஸ்டாண்ட்ல நிக்கறத பார்க்கிறேன். அதே பஸ் சார்ஜ்ல உங்கள டவுன்ல கொண்டு விட்டுவேன்.. பாருங்க இப்ப ஆட்டோவுல ரெண்டு பேர் இருக்காங்க.. அறுபது வயசுக்கு மேல இருந்தா பாதி சார்ஜ்தான்..
ரொம்ப சந்தோஷம் ..உங்க போன் நம்பர குடுத்துட்டுப் போங்க.. தேவைப்படும் போது கூப்புடறேன்..
விருட்டென்று உள்ளே வந்துவிட்டேன்.. இருந்தாலும் அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. இப்போது எல்லோரிடமும் வாகனங்கள் இருக்கின்றன.. பயணத்திற்கான கூலியைப் பகிர்ந்து கொள்ள நிறைய போக்குவரத்துச் சாதனங்கள் முளைத்துவிட்டன.. போட்டி சூழ் உலகம்.
அன்று மாலை வரை என் மனம் அவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது.. அவரின் கைபேசி எண்ணிற்கு அழைத்தேன்..
உங்க பேர் என்னங்க...
ஈஸ்வரன் சார்..
உங்களுக்கு எத்தனை பசங்க..
ரெண்டு பொண்ணுங்க சார். ரெண்டும் ஹைஸ்கூல் படிக்குதுங்க..
பெரிய குடும்பம்னு சொன்னீங்களே..
ஆமாம் சார். வயசான அப்பா அம்மா எங்கூடத்தான் இருக்காங்க.. இப்ப என்னோட வொய்பும் ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டிருக்கா.. ஆட்டோ நின்னுச்சுன்னா எங்க வாழ்க்கையும் நின்னுடுங்க.. அதனால தான் வீடு தேடி சவாரி புடிக்க வேண்டியதா இருக்கு..
சரிப்பா ..இப்ப வரமுடியுமா.. டவுனுக்குப் போகனும்..
அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஈஸ்வரன் என் வீட்டு வாசலில் வந்து நின்றார். ஏற்கனவே ஆட்டோவில் இன்னொரு வயதானவர் இருந்தார். சீரான வேகத்தில் மிகவும் பாதுகாப்பாக என்னை டவுனில் இறக்கிவிட்டார்.. டவுன் பஸ்ஸில் வந்திருந்தால் இருபது உரூபாய்கள் தான் டிக்கட் சார்ஜ்.. நான் அவரிடம் நூறு உரூபாய் கொடுத்தேன்.. வாங்க மறுத்துவிட்டார்.. மீதி என்பது உரூபாய்களை திருப்பிக் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி பறந்துவிட்டார்..
அடுத்த சில மாதங்களின் பின் ஒரு நாள் நான் பேருர்ந்திற்காக நின்றிருந்தேன்.. அருகில் ஒரு மகிழுந்து வந்து நின்றது.. அட ஈஸ்வரன்..
சார் வாங்க ஏறிக்குங்க..
இல்லப்பா.. நான் பஸ்லயே வரேன்..
சார் அதே பஸ்சார்ஜ் தான்.. ஏறிக்குங்க..
ஏறிக்கொண்டேன்.. குளிர்சாதன மகிழுந்துவில் ஆன்மீக மணம் மணத்தது. டாஷ் போர்டில் கடவுளின் ஆகச்சிறிய பிரதிமைகளை பொருத்தியிருந்தார். அதற்கு மல்லிகை மாலைகள் சாற்றியிருந்தார். நறுமண பயணம் சட் டென ஒரு சில நொடிகளில் இறங்குமிடம் வரை வந்து என்னை இறங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டது. இறங்க மனமின்றி இறங்கி இருபது உரூபாய் கொடுத்தேன்..
மீதம் ஐந்து உருபாய் காயின் ஒன்றைக் கொடுத்தார் ஈஸ்வரன்.
யப்பா ...ஈஸ்வரா.. ஆட்டோவுக்கு இருபது வாங்கின சரி.. இது ஏசி கார். இதுக்கு பதினைஞ்சு வாங்கினா உன்னோட குடும்பத்த எப்புடிப்பா காப்பாத்தப் போற.. பெரிய குடும்பம் வேற.. அநியாயமா வாங்க வேண்டாம். சரியான சார்ஜ் வாங்கலாம்ல..
சார். கோவிச்சுக்காதீங்க.. உங்களப் போல பெரியவங்க ஆசீர்வாதம் விலையில்லாதது சார். நீங்க வாழ்த்தினா எங்க வாழ்க்கை வளமாயிடும் சார்..
சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார் ஈஸ்வரன்.
திடீரென ஒரு நாள் மீண்டும் வீட்டு வாசலில் வந்து நின்றார். ஈஸ்வரன்..
இந்த முறை எந்த அனுமதியும் கேட்காமல் திண்ணையில் அமர்ந்து கொண்டவர்..
சார். கோவிச்சுக்காதீங்க.. இப்ப நான் டூர் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன். அதாவது ஆன்மீக டூர்.. நூத்தியெட்டு திருப்பதி.. திருப்பதி காஞ்சீபுரம்.. நவ நரசிம்மர்ன்னு.. கொறைஞ்ச ரேட் தான் சார்..
ரொம்ப சந்தோசஷம் ஈஸ்வரன்.. நல்ல காரியம்.. இப்ப நான் என்ன செய்யனும்..
சார்..நீங்க எதாவது ஆன்மீக ஸ்தலங்களுக்குப் போகனும்னா என்னை மறந்துடாதீங்க சார். அதச் சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்..
கண்டிப்பா சொல்றேன் ஈஸ்வரன்.. இப்ப அடுத்த டூர் எங்க அரேஞ் பண்ணிருக்க...
நேபாள்..காட்மாண்டு.. கைலாயம் ஆன்மீக டூர் சார். ரொம்ப கொறைஞ்ச ரேட் தான் சார் என்றார்..
ஓ.கே ஈஸ்வரன்.. போயிட்டு வாங்க.. கைலாயம் போறதா இருந்தா கண்டிப்பா உங்களை காண்டாக்ட் பண்றேன்..
அவர் மெல்ல எழுந்து நம்பவியலாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார்...
ராகவபிரியன்
Comments
Post a Comment