Tuesday, April 14, 2026

 






கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை

-----------------------------------------------

பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்று பராரி வளாகமுனி என எல்லோரும் அழைக்கிறார்கள்..

தங்களின் குழப்பங்களுக்கு மனப்பிறழ்வுகளுக்கு தீர்வு வேண்டி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினார்கள்..

வாழ்வின் அலைச்சல் எப்போது முடியுமென்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருந்தது..

அப்படித்தான் பாணபாண்டியும்  அலைந்து திரிந்து அன்று தேடிக் கண்டுபிடித்து அவர் முன் விழுந்து வணங்கினான்.. கைகட்டி வாய்பொத்தி பவ்யமாய் அவர் முன் நின்று கொண்டிருந்தான்..

ஐந்து தலை நாக பிரதிமையை குளிப்பாட்டி இல்லை இல்லை அபிஷேகங்கள் செய்து கொண்டிருந்தார் பராரிமுனி... தாமிர கிண்டியிலிருந்து ஒரு உத்தரணி தண்ணீரை நாகத்தின் மேல் ஊற்றுவார். பிறகு எழுந்து சென்றுவிடுவார். கோவிலை ஒருதரம் சுற்றி வருவார்.. மீண்டும் அபிஷேகத்தைத் தொடர்வார் பராரி வளாக முனி...

அன்று முனி இவன் பக்கம் திரும்பவே இல்லை.. 

பாணபாண்டி மனதளவில் குழம்பிப் போய் இருக்கிறான். வாழ்வின் யதார்த்தங்கள் பதார்த்தங்களுடன் ஒத்து வராத ஒருவித ப்ராஹ்மெண்டேஷன் மன நிலையில் இருக்கிறான். அதனால் பராரிமுனியின் சீடராக தன்னை மாற்றிக்கொள்ள இப்போது அவர் முன் நின்று கொண்டிருக்கிறான்.

வளாக முனி ஒவ்வொரு முறை வளாகத்தைச் சுற்றும் போதும் பாணபாண்டியும் அவர் பின்னால் சுற்றுவான்..

சட் டென அபிஷேகத்தை நிறுத்தினார் முனி..

தம்பி இங்கே சீடர்களுக்கான வேலை எதுவும் காலி இல்லை.. நீ முதலில் உன் சந்தேகத்தை உன்னிடமே கேட்டுக்கொள். பதில் இல்லை எனில் என்னிடம் கேள் என்றார்..

சுவாமி..வேலையற்ற பட்டதாரியான எனக்கு என் வீட்டில் சோறு போடுகிறார்கள்.. வெறும் அரிசிச் சோறும் காய்களற்ற குழம்பும் தான். அது ஏன் என்பதுதான் எனக்குள் உறுத்தும் கேள்வி...ஆனால் சம்பாதிக்கும் என் தந்தைக்கு குழம்புடன் உருளைக்கிழங்கு கார வதக்கல் வைக்கிறார்கள்.. இது நிலை நிறுத்தப்பட்ட உண்மை.. அதுமட்டுமல்ல.. இது என் தகப்பனின் அதிகாரதின் மேலான கேள்விகளற்ற குவிப்பு நிலை... எனக்குள் விடையற்றிருப்பதால் அதற்கான தீர்வு தேடி குருவே தங்களிடம் வந்திருக்கிறேன்..

பராரி வளாக முனி பாணபாண்டியின் கேள்வியில் மட்டுமல்ல பாண்டித்யத்திலும் பதறித்தான் போனார்..

மெளனமாக மீண்டும் நாகப் பிரதிமையின் மேல் உத்தரணியால் தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்...

எழுந்து கோவில் வளாகம் சுற்றி ஓடிவரத்தொடங்கினார்..

பாணபாண்டியும் அவர் பின்னால் ஓடத் துவங்கினான்..

சட் டென நின்றவர்...

தம்பி இப்போது நீ உன் வீட்டிற்குப் போ..நாளை மதிய உணவிற்கு நான் வருகிறேன். உன் தந்தையுடன் நாம் உணவருந்துவோம்.. அப்போது பரிமாறப்படும் பதார்த்தங்களுடனான யதார்த்தங்களின் உண்மை நிலையைப் பார்க்கிறேன்.. பிறகு உன் தகப்பனின் அதிகார குவியலை கலைத்துவிடுகிறேன்.. அங்கிருக்கும் காலங்காலமாக உலவும் ஐரணியை என் நாகத்திற்கு படைத்துவிடுகிறேன்.. இனி வாழ் நாள் முழுவதும் உனக்கு உருளை கார வத்தல் வண்டி வண்டியாய் கிடைக்கும் போய் வா.. என்றார்..

பாணபாண்டிக்கு பேரமைதி சித்தித்தது போன்ற மன நிலை..உருவானது... அவனின் மனக்குளத்தில் ஐந்து தலை நாகம் நீந்திக்கொண்டிருந்தது... ஆனால் அதன் மேல் கல்லெறியும் உந்துதல் கட்டுபட்டிருந்ததை உணர்ந்தான்..

முனிவரின் தவ ஆற்றல் இப்போது அவனுக்கு மாய யதார்த்தத்தை உணர்தியது...

அடுத்த நாள் பராரிவளாகமுனிக்கு பாண்டியின் வீட்டில் ஆன்மீக அற்புத வரவேற்பு கிட்டியது...

எல்லோரும் மெளனமாக அமர்ந்திருக்க உரையாடலற்ற தெய்வீக நிலை அங்கே நிலவத் தொடங்கியது.. 

முனி மெள்ள ஒரு தாம்பாளத்தில் நாக பிரதிமையை வைத்தார்... பாண்டி வேகமாக ஒடி கிண்டியில் நீர் நிரப்பி வந்தான்..

வளாக முனி அபிஷேகங்களைத் தொடங்கினார்.. அபிஷேகத்திற்குப் பின்னான நைவேத்யங்களை பிரதிமையின் முன் வைக்கக் கட்டளையிட்டார்..

அன்னம் காய்களற்ற சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு கார வத்தல் ஒரு சட்டி நிறைய வைக்கப்பட்டன..

ஒரு உத்தரணி பிரதிமையின் மேல் ஊற்றுவார் முனி..பின் சாதம் ஒரு உண்டை சாம்பார் கலந்து உருட்டுவார். அப்படியே வாயில் போட்டுக்கொள்வார்.. பிறகு ஒரு தேக்கரண்டி உருளைக் கார வதக்கல் அவரின் வாயிற்குள் செல்லும்..

தம்பி நாகம் நீந்தும் குளத்திற்குள் மீன்கள் வாழ்வதில்லை.. அதனால் நாகப்பிரதிமை இருக்கும் என் நெஞ்சக் குளத்திற்குள் நைவேத்தியங்களை வீசிக்கொண்டிருக்கிறேன்.. எனச் சொல்ல எல்லோருமே சிலிர்த்துப் போனார்கள்..

இப்படியே மாலைவரை தொடர்ந்து கொண்டிருந்தார்..

இந்த தெய்வீக செயல் மூலம் பராரி வளாக முனி நைவேத்யம் அத்தனையையும் காலி செய்துவிட்டிருந்தார்.. நாகமும் குளத்தின் ஒரு மூலையில் உடல் சுருட்டி உறங்கச் சென்று விட்டிருந்தது..

பாணபாண்டியும் அவரின் தகப்பனாருக்கும் இப்போது நிலை நிறுத்தப்பட்ட ஒரு நிஜ உண்மை புரிந்தது... பராரியின் முன் வைக்கும் நைவேத்யங்கள் அதிகாரக் குவிப்பை ஒரு ஒட்டுப் பருக்கையின்றி காலிசெய்துவிடுமென புரிந்து கொண்டார்கள்..

இருவருமே இப்போது பராரி வளாக முனியின் சீடர்களாக அவரின் கோவில் வளாக மடத்தில் இணைந்து கொண்டு நைவேத்யங்களை தயார் செய்யத் தொடங்கினார்கள்.. 

வளாக முனியும் நாக நைவேத்யம் செய்து கொண்டே இருந்தார்..பாணபாண்டிக்கும் அவரின் தகப்பனாருக்கும் பதார்த்தங்கள் கிட்டாத பாஸ்டிச் கால யதார்த்தம் மெல்ல உருவம் காட்டத் தொடங்கியது..

பாணபாண்டியின் அன்னை நிம்மதியாய் ஏற்கனவே சமைத்தவற்றில் ஒரு சிறு பங்கை தனியாக அவளுக்கென்று எடுத்து வைத்திருந்ததால் நிம்மதியாக பசியாறி உறங்கச் சென்றாள்..

ராகவபிரியன்

Friday, April 10, 2026

 






தமிழ் மண்ணின் பேசும் மொழி பல உட்பிரிவுகளைக் கொண்டது. சென்னைத் தமிழ் நெல்லைத் தமிழ் கொங்கு தமிழ் தஞ்சைத் தமிழ் என இன்னமும் பிராந்திய பிரிவுப் பெயருடன் மரனமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது.. பிரிவு எனும் சொல் இங்கே பேசும் மொழியைச் சொல்கிறதே தவிர மானுட வாழ்வியலையோ இல்லை அது சார்ந்த வேறெந்த பிரிவுகளையோ செப்பவில்லை.. இந்த மண்ணின் மானுட வாழ்வியலோடு இலக்கியத்தையும் எவ்வித பிரிவுகளுமற்று தன்னோடு இணைத்த தனித்த வாழ்வுமுறைமையைக் கொண்டிருந்தவர்கள் தான் பண்டைய மதராஸ் ராஜதானியெனும் தக்கான பீடபூமி மாந்தர்கள்..
அப்படியான தென்னிந்திய தமிழ் மக்களின் கலாச்சார மொழிபற்றுடன் கூடிய ஒற்றுமை வாழ்வியலை சிதைக்க வந்தவன் தான் ஆங்கிலேயன். 1856 வரை இந்தத் தமிழ் மண்ணில் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகள் பரவலாக காணப்படவே இல்லை. தொழில் சார்ந்த பிரிவுகளுக்கு சாதீய பிரிவுகளென பெயரிட்டு ஊதிப் பெரிதாக்கி மக்களைப் பிளவு படுத்தி ஆட்சியதிகாரத்தை அன்று தக்க வைத்து கொண்டான் ஆங்கிலேயன். அதே உத்தியைப் பயன்படுத்தி இன்று தமிழ் மொழியின் பேச்சு வழக்கின் பிரிவுகளை உள் வாங்கி மக்களையும் பிளவுபடுத்தி இன்னமும் ஒன்றுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகளையும் விதைத்துவிட்டே சென்றிருக்கிறான் கல் நெஞ்ச மேலைத் தேய மொழிவெறியன்.. அவ்வாறான ஆங்கில வழி பயிற்றுப்பள்ளிகள் இந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் கால் ஊன்று கர்ஜிக்கச் செய்பவர்கள் இன்றைய அரசியல் வாதிகள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் தான்..அப்படியான உத்தியால் உருவாக்கப்பட்ட பிரிவினை வார்த்தைகள் தான் திராவிடன் ஆரியன் என்பது மட்டுமல்ல.. வடமொழி தென்னாட்டு மொழி என்பதும்..
இது போன்ற மொழியின் பேச்சுவழி உட்பிரிவுகளை பயன்படுத்தி மதமாற்றம் மட்டுமல்ல மொழிமாற்றமும் செய்தவன் தான் கொடுமைக்காரன் கால்டுவெல் போப். அந்த வித்தையை அதிகாரத்திற்கு பயன்படுத்தி இத்தமிழ்மண்ணை இன்னமும் நிரந்தரமாக பிளவுபடுத்தினால் நிரந்தரமாக ஆட்சிசெய்யவியலும் என உணர்ந்த கட்சிதான் இப்போது மொழியரசியலை தேவைப்படும் போதெல்லாம் கையிலெடுக்கும் கட்சி.. அந்தக் கட்சியின் முன்னாள் முதல்வர் ஒருவர்
கண்ணகிக்கு ஓர் சிலை..கால்டுவெல் போப்புக்கும் சிலை..
என முரசொலியில் அன்று எழுதியது இன்னமும் நெருடலைத் தந்துகொண்டிருக்கிறது.
கண்ணகிக்கு சிலை என்பது இம்மண்ணின் கலாச்சார நீட்சியை அதன் புனிதத் தன்மையை தலைமுறைகள் உணர்ந்து கொள்ள என்பதைப் புரிந்துகொள்ளலாம் ஆனால் அதனோடு சேர்த்து கால்டுவெல் போப்பிற்கும் சிலை எனும் உள் நோக்க பிளவுபடுத்தும் அரசியல் உத்தியை இன்னமும் தமிழ் மக்கள் புரிந்துணர்வு கொள்ளவே இல்லை என்பதுதான் கவலைக்குரிய நிஜம்..
1856 முதல் 1900 வரையிலான காலகட்டம் தமிழ் இலக்கியம் ஓலைச்சுவடியிலிருந்து அச்சிற்கு இடம்பெயர்வதற்கான பாய்ச்சல் நிகழ்த்திய காலம்.. ஆனால் அப்பாய்ச்சலால் குறுகிய பிரிவுகளற்று அடர்வு நிறைந்திருந்த தமிழ்மொழி பிராமண பேசும் மொழி பிராந்திய பேசும் மொழி என பிளவுபட்டு பரிதாபகரமான இடத்தில் இன்று நின்று கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அதுமட்டுமல்ல அது அனாதையாய் அரசியல் வாதியின் அல்லது ஆளும் கட்சியின் ஆதரவை அண்டி நிற்பதுதான் கொடுமை..அதைவிடக் கொடுமை தமிழிலக்கியம் பிழைப்பு வாத பிரிவினை மொழியை இன்று உள்வாங்கியதால் அதன் நிலைத்து நிற்கும் கால்கள் மெலிந்து சூம்பி தள்ளாடுவதைக் காண சகிக்கவில்லை..
என்ன செய்வது? பிரித்தாளும் உத்தியை ஆட்சி செய்ய பயன்படுத்தக் கற்றுத் தந்தவன்ஆங்கிலேயன். அதே உத்தியால் இன்று இந்த மண்ணின் கலாச்சாரத்தை மொழியை மக்களை ஏன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக்கூட பிரித்தாளும் தந்திரத்தை அதிகாரத்திற்காக கையிலெடுப்பதுதான் டாஸ்மாக் மற்றும் இலவசங்கள்..
இந்தக் கேவலமான அரசியலைப் புரிந்து கொண்டால் மக்கள் மதப் பிரிவுகளை முன்னிருத்தி செய்யும் அரசியலையும் புரிந்து கொள்ளுதல் சுலபம்.. தமிழ் அல்லாத தாய்மொழி கொண்டவர்கள் இந்த மண்ணில் அரபு மற்றும் ஆங்கில கலாச்சாரத்தை புகுத்தியது மட்டுமல்ல நம் மொழியின் வளமையையும் சிதைத்து நம்மிடையே நிரந்தர பிரிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்..
மேலைத்தேயத்திலிருந்து வந்த மொழிகளை நாம் வெறுப்பதில்லை. மாறாக இந்த மண்ணில் முகிழ்த்த மொழிகளை அதாவது இந்தி பார்ஸி குஜராத்தி கொங்கணி சம்ஸ்கிருதம் எனும் இந்திய மொழிகளை வெறுக்கச் சொல்லும் கீழ்த்தரமான அரசியலை தமிழ் மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.. இப்போது கூட தமிழ் மண்ணில் ஜெர்மன் ப்ரெஞ்சு மற்றும் ஏனைய மேலைத்தேய மொழிகள் கற்பிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன..
ஆதலால் இந்த மண்ணின் மொழியை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒற்றுமையாய் மொழிப்பிரிவினை பேசுவோரை எதிர்த்து ஒன்றுபடவேண்டிய அவசியம் இப்போது கட்டாயமாகிறது..
சிந்திப்போம் செயல்படுவோம்.. இம்மண்ணை மொழியால் பிளவுபடுத்தும் உத்தியை பொடிப்பொடியாய் தகர்த்தெறிவோம்..
ராகவபிரியன்




Wednesday, April 8, 2026


 


                                     Soon on Print.. For copies contact whatsup...9442536901...

Tuesday, April 7, 2026

 





ராகவபிரியனின் நகைச்சுவைக் கதைகள் விரைவில் புஸ்தகா மூலம் அச்சில்..

முன் பதிவு செய்வோர் இப்போதே ரூ 500/  9442536901 எனும் எண்ணிற்கு அனுப்பி விவரங்களை முகவரியுடன் இதே எண் வாட்ஸப்பில் அனுப்பினால் விரைவில் ஏற்கனவே அச்சில் வெளிவந்த ராகவபிரியனின்  மேலும் சில புத்தகங்களுடன் உங்களுக்கு வந்து சேரும்..

நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன்


 




வெப்ப நாட்களின் கொடுமை சொற்களை மீறிச் சுடுகிறது.. 

ஆவிபறக்கும் சாலையில் ஒருவன் உடலை வதைத்து கைவண்டியையும் வாழ்வையும் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கிறான்..

புங்க மரத்தடி திப்பி நிழலில் சில ஆவினங்கள் அசைபோட்டபடி இளைப்பாறுகின்றன..

அவற்றின் மேல் உதிர்கின்றன வெம்பி வதங்கிய நூற்றாண்டு கால சந்தைச் சருகுகளும் பூக்களும்..

ஆவின வெளிமூச்சு வெப்பப் புகையில் கோடை மானுட மேதைமையின் வடிவம் காட்டுவதை நுண்ணிய பார்வையில் காணவியலும் அப்போதில்

காய்ந்து வெடித்த மருத வயல்களில் முண்டாசு சுற்றியபடி                      வாழ்வாதார மந்தைகளை ஒழுங்குபடுத்தும் மேய்ப்பர் சிறுவர்கள்     கைக்கம்புடன் கோடைவெப்பத்தை ஒழுங்கு செய்ய ஓடத்துவக்கம் நடந்தேறுகிறது...

ஆங்கே வெடித்துச் சிதறும் மூங்கில் அரிசிகளை உருவியெறிந்த                எழுத்தின் காலவெப்பத்தின் முதுகில் பச்சை மூங்கிலால்  பளாரென                        விளாச நினைக்கிறான் தானணிந்த மகுடத்தை சரிசெய்யும் மானுடன்..

வன்னி மரத்திலிருந்து தொங்கும் ஈர தாவணி போர்த்திய இளநீர் குலைகள் ஒன்றிரண்டு இருசக்கர வாகனவோட்டிகளை நிறுத்தத்தான் செய்கிறது..

எனினும்

நெடுஞ்சாலை கிராம ஓர பொருளாதாரத்தின் அடித்தளத்தின் பொக்கைகளை நீர் மோரும் சர்பத் தள்ளுவண்டிகளும் கரணையால் நிரப்பிக் கொண்டிருக்கையில்..

தற்காலிகமாக மெல்ல கவிகிறது மேற்கு வான பகலவனின் கோடை....

ஒரு வெப்ப நாளின் சுடு சொல் மாலையிலோ இரவிலோ சூடிழக்காமல் கணன்றுகொண்டிருக்கிறது..

ஒற்றை விரலால் பூத்திருந்த நீறெடுத்து நெற்றியில் தடவியபடி தலைசாய்க்கிறான் மானுடம்..

இனி கோடைத் தூக்கம் ஆழ்ந்த உறக்கத்தின் அளவீடுகளை கேலிசெய்யத்தான் போகிறது..

ராகவபிரியன்



Sunday, April 5, 2026

 




கோடையிடி
அதைப் பதிவு செய்யத்தான்
அவன் கைபேசியுடன் நடக்கத் தொடங்கினான்..
நிஜம்மான ஒன்றை
இயற்கையின் சப்தமிடும் சக்தியை
தூரத்துச் சப்தத்தின் துல்லியத்தை
பதிவு செய்தே ஆகவேண்டும் அவனுக்கு..
அவனால் எட்டவியலா உயரத்தில்
மேகங்கள் மோதிக்கொள்ளத் துவங்கின..
கைபேசியைத் திறந்தான்..
மின்சக்தி குறைவாய் இருப்பதைச் சொல்லியதது..
ஓடினான்..
போதை உந்தித் தள்ளிய வேகமுடன்..
ஆங்கொரு
அரசாங்க மதுபாணக்கடையொன்றின்
மின்னூட்ட அமைப்பானில்
மின்னூட்டியை பாங்கெனச்செருகினான்..
அங்கே மின்சார வினியோகம் தடைபட்டிருந்தது..
இடியோசை கடகடவென ஒலிகூட்டி
தன் உறுமலைத் தொடங்கியது..
விருட்டென கைபேசியை உருவியவன்
ஒலிப்பதிவு பொத்தானை அழுத்தினான்..
கைபேசி இறந்து நெடுநேரம் கடந்திருந்தது..
இறந்த காலத்தின் கைபேசியுடன்
அவனுக்கு முன்னான உலத்தின்
இடியோசையுடன் கைகுலுக்க
இல்லை இல்லை
கோடையிடியைப் பதிவு செய்ய....
காத்திருக்கிறான்..
இன்னமும் மதுபானக் கடையில்
யுகங்களைக் கடந்தும்..
ராகவபிரியன்

Wednesday, April 1, 2026

 









மனிதரோ மிருகங்களோ 

உலவவியலாத

வனாந்தரங்களை

விழைகிறதென் மனம்..


பறவையோ விமானமோ 

செயற்கை இயற்கை கோள்களோ

வேறெந்த வானுறுப்புகளோ அற்ற

வெளியில் நடக்கச் சொல்கிறது

என் பாதங்கள்..


நதியும் கடலும் குளியலறைகளும்

நீரூற்றுகளும் மழையும் 

பொழிபனித்துளியும் அற்ற

இன்னபிற நீரெனும் எதுவுமற்ற 

இடங்களில் தான் 

குளிக்கத் துணிகிறது 

இப்பாழும் வேர்க்குமுடல்..


விடுதிகளோ வீடோ

விருந்தோம்பலோ 

வீதி உணவகங்களோ

விழாக்கால அன்ன தானங்களோ அற்ற

ஊரொன்றில் தான்

அதீதமாக பசிக்கிறதெனக்கு..


ஆனாலும் 

சுடுகாடுகளோ இடுகாடுகளோ 

அற்ற இடங்களில்

மரணிக்கவேண்டாமெனச் சொல்லும்

மனச்சொல்லின்

பொருள் மட்டும் புரியவில்லையெனக்கு..


ராகவபிரியன்







Sunday, March 29, 2026

 







கோபாலய்யரின் சோம்பலை பேட்ரியார்க்கியென கடுமையாக சாடிக்கொண்டிருந்தாள் யாழினி மாமி.
ஒரு நாளாவது கிட்ச்சன்ல எப்புடி கஷ்டப்படறோம்னு ஒங்களக்குத் தெரியறதா எனக் கத்திக் கொண்டிருந்தாள்..
ஊஞ்சலில் அமர்ந்து விஜய்யின் வேட்பாளர் பட்டியலை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் கோபாலய்யர். யாழினியின் கூச்சலில் கோபம் உச்சத்திற்கு ஏறியது..
தோ பாரு யாழி.. எங்கிட்ட அனாவசியமா கத்தாதே.. நேக்கு சமையல் ரொம்ப நன்னா பண்ணத் தெரியும். நீ கிச்சன விட்டுக்கொடுக்கமாட்டே அதான் நான் உள்ள வரல. பிஜேபி திமுக இருக்கறதுனாலதான் தமிழ் நாட்டுக்குல்ள வரலன்னு சொல்றாளோன்ணோ.. அது மாதிரி தான்.. நான் உள்ள வந்தேன் என்னோட கிச்சன் ஆர்டிஸ்ட்ரிய பார்த்து மூக்குல சூடான இரும்புக்கரண்டியால சுட்டுப்பே ஆமாம்..
சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் கோபமாய் வந்த அய்யர் இரண்டு மூன்று கிண்ணங்கள் சில ஸ்பூன்கள்,,, கலக்குவதற்கான விக்கர்.. இன்னபிற... எல்லாவற்றையும் எடுத்து வைக்கத் தொடங்கினார்..
என் சமையலறையில் நீ கேக்கா இல்லை பேக்கா என சப்தமில்லாமல் ஹம் செய்யத் தொடங்கினார்..
வியப்புடன் அய்யரைப் பார்த்துக்கொண்டிருந்த யாழினி
ஏன்ணா கோவிச்சுண்டேளா.. நேக்கு கெல்ப் கிடைக்கலங்கறதுனாலதானே அப்புடிச் சொன்னேன்.. அதுக்குப் போய் கோவிச்சுண்டேளே..
பேட்ரியார்க்கிங்கறது பெரிய வார்த்தைடி யாழி.. எண்ணெய கொட்டிட்டா தொடைச்சுடலாம்.. வார்த்தைய கொட்டிட்டா.... வழுக்கித்தானே... விழனும்..
ஒரு பழமொழியை டைம்ல சொல்ற ஆர்ட் கைவரப்பெற்ற பெருமையுடன் யாழினியை ஒரு கேவலப் பார்வையுடன் பார்த்தார்..
மெல்ல நில அதிர்வை உணர்த்த மெலிதாய் ஆடும் தொங்கு விளக்கென சின்னதாய் நடுக்கம் காட்டிய யாழினி..
நீங்களும் தான் என்னை பெமினிஸ்ட் அது இதுன்னு... ஏன் பர்வர்ட்ன்னுலாம் தான் சொல்றேள்.. நான் என்ன ஒங்களுக்கு வடிச்சு கொட்டாமயா இருக்கேன்.. அத வுடுங்கோ..இப்போ நீங்க என்ன பண்ணப்போறேள்..கிச்சன்ல..அதச் சொல்லித் தொலைங்கோ..
யாழினி கேட்டவுடன்..
வடிச்சு கொட்டறதுங்கறது அந்தக்காலம்.. குக்கர் வச்சு விசில் எண்ணி வீணாப்போறேன்னு வேனும்னா சொல்லாமென நினைத்தபடியே..
கப் கேக்டி.. கப் கேக் பண்ணப்போறேன்.. ஒன்னோட பெமினிஸ்ட் திங்கிங்க தூள் தூளா பொடிச்சு வீடு பூரா தூவப்போறேன்..
சொல்லியபடி மைதா மாவை ஒரு கிண்ணத்தில் கொட்டி வெண்ணை கொஞ்சம் கலந்து விக்கரால் நன்றாக கலக்கத் தொடங்கினார்..பேக்கிங்க் பவுடர் கொஞ்சம் கலந்தார். வினிகர் சேர்த்தார்....
எவ்வளவு கோபமெனினும் தான் பேலண்ஸ் வாய்ஸ் மெயிண்டைன் செய்வதைக் காட்ட..
யாழினி நோக்கு வெண்ணிலாவா இல்ல ஸ்டாரா பெர்ரியா... என மெல்லிய குரலில் கேட்டார்..
இன்னமும் அய்யர் சமையலறையில் சமைக்க வந்த அந்த இன்ப அதிர்விலிருந்து விடுபடாத யாழினி
நேக்கு ஸ்ட்ரா பெர்ரின்ணா...
எனச் சொல்லிக்கொண்டே பின் பக்கமாய் வந்து அய்யரை கட்டிக்கொண்டாள்..
என்னடிது.. பெமினிஸ்ட் கொரிலா வார் டேக்டிக்ஸா. இப்புடி பண்ணினா என்னோட ஆர்டிஸ்ட்ரி கொறஞ்சிடுமா என்ன..
எந்த அசைவையும் காட்டாமல் அய்யர் ஸ்ட்ராபெர்ரி எஸென்ஸையும் சர்க்கரையையும் அளந்து கலந்தார்.. யாழினியின் ஸ்பரிசமும் இப்போது தேவையாய்த்தான் இருந்தது அய்யருக்கு..
ஒரு கடாயை அடுப்பில் வைத்தார்..அதில் உப்பைக்கொட்டி கலவையை சின்னச் சின்ன கிண்ணங்களில் நிரப்பி அடுப்பில் வைத்தார்..
அவ்வளவுதான் இனி முப்பது நிமிடங்களில் கேக் தயாராகிவிடும்..
அப்பாடா என பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலில் அமர்ந்தார்..
மெல்ல கேக் வாசம் வீடெங்கும் பரவத்தொடங்கியது..
யாழினிக்கு வெட்கமாகப் போய்விட்டது.. உண்மையிலேயே சமையல் கலை வல்லுனராக இருப்பாரோ அய்யர் என நினைத்தாள்.. தான் லட்சுமணக் கோட்டைத் தாண்டியது போன்ற குற்ற உணர்வுடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள்..
திடீரென காலிங்க் பெல் அடித்தது..
யாழினியும் கோபாலய்யரும் வாசல் கதவைத் திறந்தார்கள்..
சார் வணக்கம்.. மாமி அக்கா வணக்கம்.. நான் தான் இந்த தொகுதி கேண்டிடேட்....விஜய் கட்சியில நிக்கறேன்.. ஒங்க ஓட்டும் ஆதரவும் தேவை..
அந்தத் தெருவின் புளிங்கோ கட்டிங்க் கொண்ட ஒரு இளைஞனும் இன்னும் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள்.. தோளில் மஞ்சள் சிவப்பு வெள்ளை கோடு போட்ட துண்டு அணிந்திருந்தார்கள்..
ஒரு நோட்டீஸைக் கொடுத்து படிங்க அய்யரே.. எனச் சொல்லிவிட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டார்கள்..
ஒரு வழியாய் டொனேஷனெல்லாம் தரவியலாதென சொல்லி அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த அய்யரை யாழினி முறைத்துப் பார்க்கத் தொடங்கினாள்..
வீடு முழுவதும் தீய்ந்த கேக் வாசம் நிறைந்திருந்தது..
ஓடிப்போய் அடுப்பை அணைத்துவிட்டு கடாயைத் திறந்து பார்த்தார் அய்யர்.. கிண்ணங்களில் கேக்கும் அவரது பேட்ரியார்க்கியும் அப்படித் தீய்ந்து போயிருந்தது..
மீண்டும் காலிங்க் பெல் அடித்தது..
வாசலில் அந்த கேண்டிடேட் இளைஞன்..
அய்யரின் பின்னால் யாழினி நின்று கொண்டாள்..
சார் தப்பா எடுத்துக்காதீங்க.. நான் பேக்கரி கடை வச்சிருக்கேன்.. இப்ப எலெக்ஷன்ல நிக்கறேன்.. எனக்கு கேக் செய்யத் தெரியும்.. ஒரு சின்ன சீக்ரெட் இருக்கு அதுல.. முட்டை இல்லாம கேக் பண்ணினா தீய்ஞ்சுடும்..
சொல்லிவிட்டு வேகமாய் ஓடி கூட்டத்துடன் சேர்ந்து கொண்டான் இளைஞன்..
யாருக்கு ஓட்டு போட்டாலும் அந்த விஜய் கட்சிக்கு ஓட்டு போடாக்கூடாதுன்ணா.. எப்புடி கிண்டல் பண்ணிட்டு போறான் பாருங்கோ..
சொல்லியபடி வாசல் கதவை படீரென அறைந்து சாத்தினாள் யாழினி..
தமிழக பேட்ரியார்க்கி எனும் ஆலமரமொன்று கீழே வேருடன் சாயும் சப்தம் அய்யருக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது..
ராகவபிரியன்
இந்த கேக் உங்கள் ராகவபிரியன் செய்தது அல்ல.. கோபாலய்யர் செய்ததுதான்.. ஆமாம் கோபாலய்யர் செய்தது தான்.. நம்புங்கோ...

Friday, March 27, 2026

 










போஸ்டர் கணக்குகள்.. சிறுகதை
--------------------------------------------
கோபாலய்யருக்குக் கோபம். வாசலில் இருசக்கர பழைய வண்டியை உதைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது களைத்து யாழினி ரெடியாகிவிட்டாளா எனவும் பார்த்துக்கொண்டிருந்தார். யாழினியோ மடிசாரை கடந்த ஒரு மணி நேரமாக கட்டிக்கொண்டிருந்தாள்..இன்னமும் திருப்தியில்லாத குரலுடன்..தோ வந்துட்டன்.. செத்த இருங்கோ.. வண்டிய ஆப் பண்ணிடாதேங்கோ.. எனக் கத்தினாள்..
இப்படித்தான் கோபாலய்யர் 1977 ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சிக்காக போஸ்டர் ஒட்ட பழைய சைக்கிளை கிளப்பினார். இரண்டு சக்கரங்களிலும் காற்றுப் போயிருந்தது. அப்போது அய்யருக்கு கல்யாணம் நடந்திருக்கவில்லை. ஒரு வழியாய் பஞ்சர் சைக்கிளில் போய் ஒரு போஸ்டரை பேரூர்ந்து நிறுத்தத்தில் ஒட்டியதும் காத்திருந்த ஒரு மாடு அதைத் தின்று விட்டது.. ஆனால் எதிர்கட்சிகள் ஜெயித்துவிட்டன..கிளம்பும் போது வண்டி மக்கர் செய்தால் நல்ல சகுணம் என்பதை இந்த வருட பஞ்சாங்கத்தில் சேர்க்கச் சொல்லி குட்டி சாஸ்திரிகளிடம் சொல்ல வேண்டுமென நினைத்தார்.. அப்போது எமர்ஜென்சியை எதிர்த்து எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்திருந்தன.. அதையும் சொல்லியாக வேண்டும்..
ஒரு வழியாய் யாழினி மாமி உறுமிக்கொண்டு புகை கிளப்பியபடி இருந்த வண்டியின் பின்பக்கதில் ஒருபக்கமாய் அமர்ந்து கொண்டாள்..
ஏன்ணா இவ்ளோ அவசரப்படுத்தறேள்.. மடிசார் கட்டறது என்ன ஈஸியா... ஒங்களுக்குப் புடிச்ச அரசியல் கட்சிக்கெல்லாம் தொகுதி பிரிக்கறாமாதிரி ஈஸின்னு நெனச்சேளா.. சொல்லிக்கொண்டே
ம்..கெளம்புங்கோ.. இப்பவே போனாதான் க்யூவுல நிக்க சரியா இருக்கும்.
ஏற்கனவே கோபமாயிருந்த கோபாலய்யருக்கு கோவில் நடை திறந்திருப்பதோ க்யூவோ பிரச்சனையே இல்லை. அவருடைய பிரச்சனையெல்லாம் தமிழக அரசியல்ல எதிக்ஸோ நியாயமோ தர்மமோ இல்லங்கறதுதான் அவரோட ஒரே வாழ்வியல் பிரச்சனை. அந்த தார்மீக கோபம் அவருக்கு அவ்வப்போது யாழினி மீதும் கோவில் வாசலில் நிற்கும் ஆட்டோக்களால் இருசக்கர வாகனம் நிறுத்தவியலா நிகழ் சமூக அவலத்தின் மீதும் வெளிப்படும்..
ஏண்டி இவ்ளோ நேரமா மடிசார் கட்டிண்டிருக்க.. கோவில் வாசல்ல வண்டிய நிறுத்தறது அவ்ளோ ஈசியா என்ன.. அப்புடியே ஒரு இடம் புடிச்சு வண்டிய நிறுத்தினா..ஆட்டோ காரன்.. சாமி.. இங்க இன்னோரு வண்டி வரும். அங்கிட்டு போங்க ன்னு கத்தறான். மொரார்ஜிக்கு ப்ரைம்மினிஸடர் குடுத்தா சரண்சிங் கத்தறா மாதிரி கத்தறான். க்யூவுல நின்னா சீப்மினிஸ்டர் பையன் சீனியர ஓவர்டேக் பண்ணி டெபுடி ஆகறாமாதிரி அவனவன் இன்புளுயன்ஸ் வச்சுண்டு க்யூ ஜெம்ப் பண்றான். அதுகூட பரவால்லடி அரசியல் காரா எக்கேடு கெட்டும் போட்டம்.. நேக்கு ரொம்ப கோவம் எதுல வரற்துனா எலெக்ஷ்னுக்காக கட்சி மாறறான் பாரு அவன் மேல வர்ற் கோபமாட்டம் இது ஆட்டோ போடற இடம் தள்ளி நிறுத்து சாமின்னு சொல்றாம் பாரு அவன் மேல அவ்ளோ கோபம் வரும்...
அய்யர் சொல்லிக்கொண்டிருக்க...மாமி மடிசாரை மார்பில் இழுத்துவிடும் அந்த விதியின் நொடிகளில் வண்டி ஆடத்தொடங்கியது..
யாழினி.. வண்டிய ஆட்டாம வா.. ஜெயபிரகாஷ் நாராயணன் குடும்ப ஆட்சிய எமர்ஜென்ஸி கொண்டு வந்த கொடுங்கோல் ஆட்சிய எதுத்து கூட்டணி அமைச்சார்... ஆனா இப்ப பாரு..குடும்ப ஆட்சிய சட்டம் ஒழுங்கு சரியில்லாத ஆட்சிய மறுபடியும் கொண்டுவர மெகா கூட்டணி அமைக்கறா.. இந்த குண்டும் குழியுமா இருக்கற ரோடுல வண்டி ஓட்டற கஷ்டம்...அதுவும் ஒன்ன பின்னாடி ஒக்கார வச்சுண்டுவர்ற கஷ்டம் இந்த அரசியல் காராலுக்கு எங்க தெரியப்போறது..ஒன்ன பின்னாடி ஒக்கார வச்சுண்டு ப்ரெண்ட் வீல் தரையில படாம ஓட்டறதும்.. கமலுக்கு ரெண்டு சீட் குடுக்கறதும் ஒன்னு தான்.. கமல் பேசறதும் இந்த வாழ்க்கையும் புரிஞ்சுக்கறதுங்கறது என்ன அவ்ளோ ஈஸியா... அதவுட கொடுமை என்னன்னா...ஒங்கப்பன் நேக்கு ஒரு கார் வாங்கிக் குடுக்க மாட்டேங்கறாம் பாரு..அதான்..
அய்யர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒங்கி அவரின் முதுகில் ஒரு அடி வைத்தாள் யாழினி.. சட் டென கீழே குதித்தாள்.. வண்டியை கண்ட்ரோல் செய்யவியலாத அய்யர் கோவில் வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவின் மேல் மோதியே விட்டார்..
வெகுண்டெழுந்த ஆட்டோ டிரைவர்.. அய்யரின் அங்க வஸ்திரத்தால் அவரின் கழுத்தை இறுக்கிப் பிடிக்க..
யாழினி விடுவிடென கோவிலுக்குள் சென்றுகொண்டே.. அண்ணா சீக்கரமா வாங்கோ.. எலெக்ஷன் டைம்ல யாரண்டையும் அரசியல் பேசாதீங்கோ..நான் க்யூவுக்குப் போறேன்.. சொல்லியபடி கோபுர வாசல் திட்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..
ஒரு வழியாய் ஆட்டோ ட்ரைவரின் பிடியிலிருந்து விடுபட்ட அய்யர் வண்டியின் பெட்டியைத் திறந்தார்.. எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரிக்கும் போஸ்டரை எடுத்து கோவில் சுவற்றில் ஒட்டினார்..
அசரீரி போல்..எங்கிருந்தோ வந்த யாழினி.. ஏன்ணா.. எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேளா... ஒங்களுக்கு ஏன் இந்த வேலை.. எனச் சொல்லியபடி..அந்த போஸ்டரை கிழித்தாள்..
பஞ்சர் சைக்கிளும் மாடு தின்ற போஸ்டரும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த அந்த கால நினைவுகள் மனதில் வந்தன அய்யருக்கு..
இப்போதும் மக்கர் செய்த வண்டியும் யாழினி கிழித்த போஸ்டரும் கண்முன்னே மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்தது..
அய்யரின் கோபம் இப்போது பறந்தே போய்விட்டது.. யாழினியின் தோளில் கைபோட்டுக் கொண்டவர் வா இன்னிக்கி க்யூவுல நிக்க வேண்டாம்... நேரா தரிசணம் தான்.. எனச் சொல்லியபடி துள்ளல் நடையில் க்யூ ஜெம்ப் நடையைக் கட்டினார்..
மடிசாரை அணிச்சையாய் இழுத்துவிட்டபடியே யாழினி அய்யரை நம்பவியலாமல் பார்த்தாள்..கைவிரல்களால் அய்யரின் முகத்தைத் தடவி சடக்கென தன் நெற்றியில் சொடக்கி திருஷ்ட்டிக் கழித்தாள்..
கீழே கிடந்த கிழிந்த போஸ்டரை காராம் பசு ஒன்று தின்னத் தொடங்கியது..
ராகவபிரியன்







அந்தக் காட்டு வழியில்
மீண்டும் அவன் நடக்கத் தொடங்குகிறான்.
ஏற்கனவே பாதையோரம்
பட்டா போட்டு படுத்திருப்பவர்கள்
அவன் மீது கல்லெறியத் தொடங்குகிறார்கள்..
ஒவ்வொன்றாய் எடுத்து
முடிவற்ற பாதையின்
முள்ளடர்ந்த
புறம்போக்கு இடமொன்றில்
ஒன்றன் மேலொன்றாய்
அடுக்கத் தொடங்குகிறான்..
மெல்ல மெல்ல
உயர்ந்த கற்குவியல்
பொறுமையின் மேகம் தவழும்
தெய்வீகக் குன்றமென
உயர்ந்து நிற்கிறது..
அவ்வரலாற்று உச்சியில்
எக்கண்ணும் எட்டாவிடத்து
நிரந்தர குடிசையில்
நிலவொளியில்
நித்ய வாசம் செய்கிறான்...
அது காலப்போக்கில்
குன்றக் கோவிலாகிவிட்டது...
பட்டா உடையோர் பம்முவார்களா என்ன?
எவரும் நெருங்கவியலா
அவ்வுச்சிக்கோவிலில்
காற்றில் ஆடியபடி
கவி நடனமிடும்
காலத்தை வென்றெரியும்
தூங்கா விளக்கொளியின் மீதுதான்
இப்போது கைவலிக்க
கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்..
கற்கள் தாக்கினால்
குன்று என்ன
குனிந்தா நிற்கும்...?
ராகவபிரியன்



 

Monday, March 23, 2026





கோபாலய்யர் கிணற்றிலிருந்து நேராக சில்லென தண்ணீர் கொட்டும் குழாயைத் திறந்தார்..

காற்றுதான் வந்தது..
யாழினி மாமிக்கு சிரிப்பு வந்தது.. ஏன்ணா.. மோட்டார் போட்டுட்டு பைப்ப ஓபன் பண்ணனும்ணா.. நீங்க அபிஷ்ட்டுன்னு அப்பப்ப ப்ரூப் பண்றேளே.. சொல்லியபடியே மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தாள்..
சட் டென அதீத சில்லிட்ட தண்ணீர் ஏந்திய கைகளில் கொட்டியதும் கோடையின் வெப்பம் மட்டுமல்ல அய்யரின் மனமும் குளிர்ந்தது.. கை கால்களை நன்றாக தண்ணீரில் கழுவிக்கொண்டார். இரண்டு கைகளாலும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக்கொண்டார்..
வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு முகத்திலும் உடலெங்கும் பட்டை பட்டையாய் விபூதி பூசியபடி சந்தியா வந்தனம் செய்யத் தொடங்கினார்..
யாழினி மாமிக்கு அய்யரின் மாற்றம் அதிசயமாய் பட்டது..
ஏன்ணா..என்னாச்சு.. நித்ய கர்மா பண்றதுன்னு எப்போ முடிவு பண்ணேள்..
அது ஒன்னும் இல்லடி.. எலெக்ஷன் வருதோன்னோ.. அதான். கவர்மெண்ட் மாறனுமோன்னோ.. அதான்.. மாற்றம் மட்டும் தானே மாறாததுன்னு எல்லோரும் சொல்லிண்டிருக்காளோன்னோ.. அதான்..ஏப்ரல் ஒண்ணாம் தேதி இங்கிரிமெண்ட் வரனுமோன்னோ..அதான்.. ஓம் பூர்புவஸுவ:.. என்று காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்தார்..
போறும் போறும் அசடு வழியறது.. நீங்க அய்யரா மாறிட்டேள்னு இண்டேரக்டா சொல்றேளாக்கும்.. சொல்லியபடியே காப்பியை ஊஞ்சலில் வைத்தாள் யாழினி..
சந்தியா வந்தனம் முடித்த பெருமை கலந்த முகத்துடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்த கோபாலய்யர்.. கொஞ்சம் பக்கத்துல வந்து ஒக்காந்து காப்பிய ஆத்தி தரப்படாதாக்கும் ஆம்படையானுக்கு... எனச் சொல்லிவிட்டு கண்ணை வேறு சிமிட்டிக்காட்டினார்..
சட் டென ஊஞ்சலில் யாழினி அமர்ந்த வேகத்தில் காப்பி கீழே கொட்டியது. கோபாலய்யரின் முகம் சிவக்கத் தொடங்கியது.. மாற்றம் ஒன்றுதானே மாறாதது... என யாழினி சொல்ல உடனே அங்க வஸ்திரத்தை கழற்றி காப்பி கொட்டிய தரையைத் துடைக்கத் தொடங்கினார் அய்யர்..
இப்போது.. சிச்சுவேஷனை மாற்றியாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த யாழினி..
ஏன்ணா... நீங்க யாருக்கு ஓட்டு போடப்போறேள்..
தோ பாரு.. நான் சீரியஸ்ஸா எப்புடி தவளை புடிக்கறதுன்னு யோசிச்சுண்டிருக்கேன்..இப்ப போய் அட்டென்ஷன டைவர்ட் பண்ணாத.. டென்ஷன் ஆயிட்டேனா.. என்ன பண்ணுவேன்னு நேக்கே தெரியாது ஆமாம்..
என்ன பண்ணுவேள்.. கொட்டின காப்பிய அள்ளப் போறேளா.. இல்ல துண்டப் புழிஞ்சு காப்பிய அண்ணாந்து சொட்டு சொட்ட குடிக்கப்போறேளா.. இல்ல இனிமே காப்பியே வேண்டாம்னு போயிடுவேளா என்ன.. என்ன மாற்றம் இப்ப வரப்போறது.. எனக் கேட்டுக்கொண்டே எழுந்து மீண்டும் காப்பி தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்தாள்..யாழினி..
கோபாலய்யர் தவளை பிடிப்பது எப்படி என கூகுளில் தேடத் துவங்கினார்..
புதுக்காப்பியுடன் அய்யரின் பின்பக்கம் வந்த யாழினி அய்யரின் கைபேசியைப் பார்த்தாள்..
ஏன்ணா எதுக்கு தவளை புடிக்கறது எப்புடின்னு பார்த்துண்டிருக்கேள்..
எங்க லேபுக்கு வேணும்...அய்யரே நீங்க தான் புடிச்சுண்டு வரணும்..இல்லாட்டி இந்த வருஷ இண்க்ரிமெண்ட் கட்டுன்னு சொல்லிட்டான் அந்த படுபாவி ஹெட்மாஸ்டர்..அதான் கூகுள்ல பார்த்துண்டிருக்கேன்..
தவளை புடிக்கறது ரொம்ப ஈஸின்ணா.. கைல ஒரு வாளிய எடுத்துக்கோங்கோ.. நம்ம கோவில் குளத்துக்குப் போங்கோ.. படியிலேர்ந்து தவளை பாயும் போது வாளிய நீட்டினேள்னா அதுக்குள்ள பாஞ்சுடும்.. அப்புடியே ஒங்க அங்க வஸ்த்ரத்தை மூடி ஆத்துக்கு எடுத்துண்டு வந்துருங்கோ.. வாசல் திண்ணையில தான் வைக்கனும்.. உள்ள எடுத்துண்டு வரப்படாது புரியறதோன்னோ.. ஆத்துக்குள்ள தவளை வரப்படாது ஆமாம் சொல்லிட்டேன்.. மடிசாரை சரிசெய்து கொண்டே சொன்னாள் யாழினி..
யாழினி சொன்னதைத் தான் கூகுளும் சொல்கிறதென எண்ணிய அய்யர் வாளியுடன் கோவில் குளத்திற்கு செல்லத் தயாரானார்..
யாழினி..கிட்ட வாயேன்... எனக் கூப்பிட்டார். அருகில் வந்த யாழினியிடம் மெல்லிய குரலில்...நான் வர்றதுக்குள்ள இந்த பதினாறு மொழம் மடிசாருக்குப் பதிலா சுடிதார போட்டுக்கோயேன்..
ஓங்கி ஒரு குட்டு வைத்தவள்..
அசடு வழியறது.. போங்கோ போய் தவளை புடிச்சுண்டு வாங்கோ..ஒங்க சமத்த பாக்கறேன்..
கோபாலய்யர் தலையைத் தடவியபடியே குளத்திற்கு வந்தார்.
பாசிபிடித்த படிகளில் நிறைய தவளைகள் இருந்தன..
அருகில் சென்றதும் விருட்டென குளத்திற்குள் பாய்ந்தன..
ஒன்று வலப்பக்கம் குதித்தது...இன்னொன்று மேல் படியில் தாவியது.. அவர் மீது ஒன்றுபாய.. தடாலென குளத்திற்குள் விழுந்தார் அய்யர். சுதாரித்து எழுந்தவர் தண்ணிரில் மிதந்த தவளைகளை வாளியை விட்டு மொந்தி எடுத்தார்.. வாளியில் தண்ணிர் தான் வந்தது .. தவளைகளைக் காணோம்.. தவளை பிடிக்கும் கலையை கற்றாக வேண்டுமே.. களவும் கற்று மற எனச் சொன்னவன் தவளையைப் பிடித்து தண்ணீரில் விடக் கற்றுக்கொள் எனச் சொல்லவில்லையே..
மெல்ல பாசி வழுக்காமல் நிதானமாய் சாம தான பேத தண்டங்களை உபயோக்கிக்காமல் வெறும் வாளியை மட்டும் நீட்டி ஏறக்குறைய இருபதிற்கும் மேல் தவளைகளைப் பிடித்துவிட்டார் அய்யர்.
பெருமை பொங்க வீட்டுத் திண்ணையில் தவளை வாளியை வைத்துவிட்டு யாழினியைப் பார்த்து ஒரு மாற்றமான லுக் விட்டார்..
அண்ணா நீங்க ரொம்ப சமத்தாயிட்டேளே.. ஏகப்பட்ட தவளைய புடிச்சுட்டேளே.. பாருங்கோ.. ஒரு தவளை வாளி விளிம்புல நிக்கறது.. வெளியில போயிடப்போறது... என பயம் காட்டினாள் யாழினி..
அப்பாடா என்ன ஜெம்ப்..என்ன ஜெம்ப்...எனச் சொல்லிக்கொண்டே..திண்ணையில் வாளியை வைத்துவிட்டு ஊஞ்சலில் வந்து அமர்ந்தார் கோபாலய்யர். எப்போதும் ஆன்மீக சேணல் வைப்பவர் ஒரு மாற்றத்திற்காக நியூஸ் சேணல் வைத்தார்..
தவாக திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்லிக்கொண்டிருந்தது நியூஸ்..
அண்ணா ஒரு தவளை தாவி வெளியில போறது பாருங்கோ எனக் கத்தினாள் யாழினி..
நிம்மதியா நியூஸ் கூட பாக்க முடியல இந்தாத்துல என முணுமுணுத்தபடியே எழுந்து வேகமாக ஓடியவர் வாளியைத் திறந்து பார்த்தார்..
அந்த நொடியைப் பயன்படுத்திக்கொண்டன தவளைகள்..ஒவ்வொன்றாக வெளியில் பாய்ந்து தின்ணையெங்கும் தாவத் தொடங்கின..
படீரென வாசற்கதவை அடித்துச் சாத்திய யாழினி.. தவளை ஆத்துக்குள்ள வரப்படாது.. தவளை ஆத்துக்குள்ள வந்துடப்படாது..என்று தாவித்தாவி கத்தத் தொடங்கினாள்..
டிவியில் ஒருவர் பிஜேபி உள்ளே வந்துட போறது என உரத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்..
கோபாலய்யர் தலையில் கைவைத்தபடி திண்ணையில் அமர்ந்தே விட்டார். இருட்டிவிட்டது. இனி விடிந்தால் தான் குளத்திற்குச் செல்லமுடியும். எப்போது விடியப்போகிறதோ என்னமோ... ஆனால் யாழினி வீட்டுக்கதவைத் திறந்தால் தானே வீட்டுக்குள்ளேயே போக முடியுமென யோசித்தவர்..
மாற்றம் ஒன்றுதானே மாறாதது என தனக்குத் தானே சொல்ல வந்தவர் தவளை ஒன்றுதானே தாவாதது... என உரத்துச் சொல்ல..
என்ன சொன்னேள் எனக் கத்தியபடியே யாழினி படீரென கதவைத் திறந்தாள்..
விருட்டென ஒரு தவளை வீட்டிற்குள் தாவியது..
பிஜேபி உள்ளே வருவதை எவராலும் தடுக்கமுடியாதென டிவி சொல்லிக்கொண்டிருந்தது..
ராகவபிரியன்

Sunday, March 22, 2026

 









மானுடத்தின் வாழ்வியல் பொழுதுகள் ஒவ்வொரு நொடியும் தவறாமல் பதிவிடப்படுகிறது. இவ்வுண்மையை மானுடம் அறிந்திருக்கிறதா என்பது தான் புதிர். சித்ரகுப்தனால் இம்மையின் கணக்குகள் மறுமையில் சரிபார்க்கப்படுகிறதாம். நன்மை மிகுந்திருக்கும் கணக்கின் மானுடம் சொர்க்கம் செல்கிறான். இனியொரு பிறவி அவனுக்கில்லையென கருணீகர் புராணம் சொல்கிறது.
மானுட வாழ்வியல் கணக்குகள் துல்லியமாக சித்ரகுப்தனால் கணக்கிடப்படுகிறது. அவைகள் அழிக்ககியலா பதிவேடுகளில் பதியப்படுகிறதெனவும் அறியவருகையில் வியப்பு இமையை இறுக்கிப் பிடிக்கிறது..
தீமை மிகுந்து நிற்கும் கணக்கின் மானுடம் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும். முற்பிறப்பின் தீமைக்கான பலன்களைச் சுமந்தே ஆகவேண்டும். அப்படியான இன்னொரு பிறப்பில் அனுபவிக்கும் துன்பங்கள்தான் கர்மா என நம் புராணங்கள் சொல்கின்றன.
அந்த முற்பிறவி தீராதீமையின் எச்சங்களில் ஒரு கடுகளவு நன்மை செய்தவன் காஞ்சியில் பிறக்கிறான். அல்லது காஞ்சியில் இருக்கும் சித்ரகுப்தர் கோவில் வாசலையாவது கடந்து செல்லும் பாக்கியம் பெறுகிறான்.
கடந்த எட்டு மாத காஞ்சியின் வாழ்வில் சித்ரகுப்தன் கோவிலைக் காணும்போதெல்லாம் ஒரு கோபம் விருட்டென அகத்தில் உதிக்கும். எங்கோ என் முற்பிறவியில் செய்த கடுகளவு நன்மையாலோ இல்லை தீமையின் விளைவாலோ அரங்கனிடமிருந்து என்னைப் பிரித்து வரதனிடம் கொண்டு சேர்க்கும் தப்புக் கணக்கை சித்ரகுபதன் எழுதியிருப்பானோ எனும் கோபம் தான்.
இன்றும் சித்ரகுப்தன் கோவிலைக் கடக்கையில் உறங்கி க்கொண்டிருந்த கோபம் சட் டென விழித்து இவனை நிழற்படமெடுக்க வைத்துவிட்டது. இச்செய்கை இம்மையின் நன்மை பதிவேட்டில் பதியப்பட்டு இனியொரு பிறவி இல்லாமல் செய்துவிடட்டும் என உள்மனம் அரற்றத் தொடங்கியது..
விருத்தச் செய்யுள்களால் நிறைந்த கருணீக புராணத்தின் ஒரு சில அத்தியாயங்களை இவன் இன்று வாசிக்க நேர்ந்தது. அதுபோழ்து சென்னிசோழன் எனும் மன்னனைப் பற்றிய குறிப்பும் இவனின் கண்களுக்குள் பதிவாகித் தொலைத்தது.
அந்த மன்னன் செம்பொன்னாலான கிரீடம் அணிந்து காஞ்சியை ஆட்சி செய்திருக்கிறான். மன்னன் என்றாலே தீமைகள் விஞ்சி நிற்கும் கணக்குகளைத்தானே விட்டுச் சென்றிருப்பான். அவையெல்லாம் ஒன்றுவிடாமல் சித்ரகுப்தன் பதிவிட்டிருப்பான் போல. அதனால் தான் இந்தக் கோவிலின் வாசலை ஒவ்வொரு பொழுதிலும் இவனைக் கடக்கச் செய்கிறான். இப்பிறப்பிலாவது சித்ரகுப்தன் தன்பதிவேடுகளில் இத்துன்பம் தாங்கி அலையும் இவ்வெளிய மானுடத்தின் நற்செயல்களை ஒன்றுவிடாமல் பதிவிடட்டும்..
கருணீக புராணத்தின் சென்னிசோழன் பற்றிய பாடல்..
இத்தகு சீர் தொண்ட நன்னாடதன் கட் கச்சி
யெனும் பதி மாபதியு மாபதி........
---------------------------------------------------------
---------------------------------------செம்பொன்
முடிசென்னி சோழனடலரியேனொப்பன்..
சென்னிச் சோழன் செம்பொன்னாலான கிரீடமணிந்து ஆண் சிங்கத்தைப் போல் இருந்தானாம்.. மக்களுக்கு நன்மைகளையே செய்தானாம். கருணிக புராணம் சொல்கிறது. அப்படியானால் அந்த மன்னனுக்கு மறுபிறவிக்கு வாய்ப்பில்லை. ஆனால் அந்த செம்பொன் கிரீடத்தை காஞ்சியில் எங்கோ ஒளித்து வைத்துவிட்டிருக்கிறான். அந்த தீமை விரட்ட இப்பிறவியில் பிறந்திருக்க வேண்டும்...
போகட்டும்...இப்போது ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.. என்ன செய்ய முற்பிறவியில் சம்பாதித்த தங்க ஆபரணங்களின் கணக்கும் அவைகள் புதைந்திருக்கும் புதையல் குறிப்புகளும் சித்ரகுப்தன் பதிவேடுகளில் இருக்கிறதா எனத் தெரியவில்லை..
எவருக்காவது தெரிந்தால் உடனே இவ்வெளிய வறியவனுக்கு வாட்ஸப்பில் அனுப்பித் தர வேண்டுகிறான்..
ராகவபிரியன்

  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...