உடலெங்கும் தூசிகள் புழுவென உயிர்த்து உடல் தூக்கியும் நகர்ந்தும் ஊர்கின்றன..
என் உபயோக வாடிக்கை சவுக்காரத்தை
எந்த அரசியல் கடையிலும்
நான் வாங்கியதில்லை...
உடலுறுத்திக்காக தினமும்
விளையாடும் என் மைதான தூசிப்புழுக்கள்
வியர்வைக் கடல் நீந்தி
கரை தொடும் சக்தியற்றவை...
எனினும்
அது நடந்த தடத்தில் தேங்கிக் கிடக்கும்
வாடை போக்கும் திடவழலைகள்
என் உள்ளங்கையில்
எப்போதும் இருக்கும்..
அன்றாட உயிர்த்திருத்தலுக்கான என் அலைச்சலில்
உருவம் கொள்ளும் தூசுப் புழுக்கள்
ஒருபோதும் என்னுடலில்
சுகந்தங்களற்ற தீத்தடங்களை
விட்டுச் செல்வதில்லை..
இருப்பினும்
அவைகளின் வீச்சம் போக்கும்
நறுமண சிகைகாய் தூள் விற்கும்
சந்தைகளை நான் தவறவிடுவதேயில்லை...
வாழ்வின் அன்றாட தூசிப் புழுக்கள்
சில நேரம் எனக்கு கண்ணுறுத்தல் தரும்.
எனினும்
பார்வைக் குருட்டைத் தந்ததேயில்லை..
நேற்று
அரசியல் கூட்டத்தின் தூசிப் புழுவொன்று
என் பார்வையோடு அப்பிக்கொண்டு வந்து
இமையருகில் உடல் தூக்கியும் நகர்ந்தும்
பயம் காட்டிக் கொண்டிருக்கிறது..
சட் டென இமை கணவாய் உட்புகுந்து
மீந்திருந்த சன்னப் பார்வையையும்
சப்பித் தின்று விட்டது..
என்ன செய்வேன்...?
என் பார்வைக் குருடகற்றும் திடவழலைளை
நான் எங்கேதான் தேடுவது?
வாசமற்றதெனினும் விலை கூடுதலெனினும்
அதை வாங்கத் தயாராகத்தான் இருக்கிறேன்..
எங்கே கிடைக்குமென யாராவது கொஞ்சம் சொல்லுங்கள்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment