Wednesday, October 15, 2025

 

இலக்கிய வலதுசாரிகள்...1

ஒரு முறை திருவாரூர் வருகை தந்த கோமல் அவர்களிடம் பத்து நிமிடம் பேசுவதற்கான வாய்ப்பைமைந்தது அரங்கனின் செயல். அப்போது இந்த அரங்கனடிமை ஆங்கிலத்தில் ஒரு சில கவிதைகளை தப்பும் தவறுமாக எழுதியிருந்ததை அவரிடம் காட்ட நேர்ந்தது. சுற்றி நிறைய கூட்டம் வேறு சூழ்ந்து இருந்தது. எல்லோரும் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது ஒரு ஆங்கில ஆக்கத்தை மேலோட்டமாகப் படித்தவர் [ இவனின் கையெழுத்தைக்கூட சுலபமாக படித்துவிட்டது வியப்புதான்] உடனேயே இப்படிச் சொன்னார்.
தம்பி உங்கள் வார்த்தைகள் ஆழம் நிறைந்தவை ஆனால் அதை அழகாக அடுக்க ஆங்கில இலக்கணமும் இலக்கியமும் இன்னமும் கொஞ்சம் அதிகமாகத் தெரியவேண்டும். நீங்கள் நிறைய படியுங்கள்.
கா.சி.வேங்கடரமணி என்பவர் உங்கள் தந்தை தேஜஸ்வி போல ஒரு அய்யர் தான். அவர் தேசபக்தன் கந்தன் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதைப் படித்துவிட்டு சுபமங்களாவிற்கு ஒரு கட்டுரை கொடுங்கள். இன்னொன்றும் சொல்கிறேன்... அவர் இந்திய ஆங்கிலத்தில் நாவல் எழுதிய இரண்டாவது இந்தியர் என்றார். முதலாவது யார் எனத் தெரியுமா எனக்கேட்டு சுற்றி இருந்தவர்களைப் பார்த்தார். அடியார்க்கு நல்லான் என நினைவு...அவர் தான் பக்கிம் சந்திர சட்டர்ஜி என்றவுடன்..கோமல் அவரை அப்படியே அணைத்துக்கொண்டார்.
இந்த அரங்கனடிமை மட்டுமல்ல அந்தக் கூட்டத்தில் இருந்த அடியார்க்கு நல்லான் ராஜகுரு என அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். தஞ்சை ப்ரகாஷ் அங்கே அப்போது இருந்தாரா என்பது இப்போது நினைவில் இல்லை.
அந்தக் கூட்டத்தில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் சொன்னார் கோமல். ஒரு முறை காந்தி சென்னைக்கு வந்த போது அவரை அழைத்துச் செல்ல கார் கிடைக்காமல் அவதிப்பட்டாராம் திரு.வி.க. அது போது சதாசிவ அய்யர் எனும் ஒரு நீதிபதி தன் காரை காந்திக்கு கொடுத்து உதவினார் என்றும் கோமல் சொல்லிக்கொண்டிருக்க இவனின் இதயம் தேசபக்தன் கந்தன் எனும் பெயரை உச்சரித்தபடியே இருந்தது.
அடுத்த நாள் திருவாரூரின் கல்லூரி நூலகம் மற்றும் அம்மையப்பன் டாக்கீஸ் எதிரில் உள்ள நூலகம் அனைத்திலும் தேடியும் அந்தப் புத்தகம் பற்றி எவருக்கும் தெரியவில்லை..இவனாலும் தேடிப் படிக்க இயலவில்லை என்பதை விட தேடிப்படிக்க வாசிப்புச் சோம்பல் அனுமதிக்கவில்லை என்பது தான் நிஜம்.
அந்த நாவல் இ.புத்தகமாக இருந்தால் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர்கள் எனது இமெயில் முகவரிக்கு அனுப்பித் தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. எனது இமெயில் முகவரி...ragavapriyansrajagopalan@gmail.com
அன்பும் நன்றியும் வணக்கங்களும்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...