Saturday, October 25, 2025

 



வலதுசாரி இலக்கியம் 3

ஏறக்குறைய பல நூற்றாண்டுகளான சமூக அவலங்களுக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு பிரிவினர் பரிதாபத்திற்குரியவர்கள் தானே. ஆங்கிலேயர்களால் திரித்து எழுதப்பட்ட இந்திய தமிழக வரலாற்றில் இடதுசாரி எழுத்து எனும் அதிகாரமிக்க வலிமையான கையால் அப்பிரிவினரின் கழுத்தை இன்னமும் இறுக்கி அழுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதோ எப்போது வேண்டுமானாலும் அப்பிரிவு தன் துளிர்த்தலை நிறுத்தி புதைந்து போகலாம். ஆனால் அது மீண்டும் துளிர்த்தே தீரும் என்பது காலத்தின் வரம்.
இருந்தாலும் 1959 ம் ஆண்டு திருச்சியில் பிறந்த எஸ்.எம். நடேச சாஸ்திரி எனும் வலிமை மிக்க எழுத்தாளார் பதினெட்டு மொழிகள் அறிந்த பன்மொழி கலைமாமணி. பதினெட்டும் இந்திய மொழிகள் தான். மொழியறிவென்பது எத்தனை தடுப்பணைகள் கட்டினாலும் மாரிக்காலத்து வெள்ளத்தில் அணை தாண்டி சமயத்தில் அணை உடைத்துப் பாயும் ஆற்றல் கொண்டது. அவர் அறிந்திருந்த ஆங்கிலம் மட்டுமே அன்னிய மொழி. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். இந்தியும் அறிந்திருக்கிறார். ஆனால் இந்தி மொழியில் அவர் எழுதியிருக்கிறாரா எனும் தரவுகள் கிடைக்கவில்லை.
ஒரு முறை திருச்சி தேசிய உயர் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது ஆங்கில வழி கல்வி பயிலும் பிரிவு. தமிழ் பேரவையின் மாணாக்க பிரதி நிதிக்கான தேர்தலுக்கான வேட்பாளர் எவராவது முன் வருகிறாரா எனக் கேட்டார் தமிழாசிரியர். எல்லாவற்றிற்கும் முந்திக்கொண்டு தனது பெயரைத் தரும் உங்கள் ராகவபிரியன் அப்போது எஸ்.ராஜகோபாலன் தனது பெயரையும் கொடுத்தான்.
தமிழாசிரியர் நீ பிறந்த ஊர் எது எனக்கேட்டார். இவன் திருவரங்கம் என்றான். உன் அப்பா என்ன சாஸ்திரிகள் வேலையா பார்க்கிறார் எனக் கிண்டலாகக் கேட்டார் தமிழாசிரியர். என் வகுப்பாசிரியரும் ஒரு சாஸ்திரிகள்தான். அவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது.
உடனே வெகுண்ட வகுப்பாசிரியர் தமிழ் பேரவைக்கு ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணாக்கர்கள் தேர்தலில் நிற்கக்கூடாதா என்றார். திராவிட ஆட்சியின் தொடக்க காலம் அது. ஆலகால விஷ பிராமண வெறுப்புப் பாம்புகளை கூடையிலிருந்து வெளியேற்றும் சப்தமற்ற பணியின் ஒரு உதாரணம் அது. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம் கட்ட பள்ளி மாணவர்களிடம் அப்போதைய மதிப்பு மிக்க 0.50 பைசா வசூலித்த நாட்கள் என்றால் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். சப்தமற்ற அந்த விஷப்பாம்பின் கால்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் அப்பாவிக் குழந்தைகள் படிக்கும் ஆரம்பப்பள்ளிகளிலும் கூட நுழைக்கப்பட்டது. இதை அறியாத வகுப்பாசிரியர் ஏன் அந்தக் கேள்வியை இந்தச் சிறுவனிடம் கேட்கிறீர்கள் என்றார் சற்று குரல் உயர்த்தியபடியே.
தமிழாசிரியரின் ஏளனச் சிரிப்பு உதட்டிலிருந்து மறையவே இல்லை இது மேலிடத்து உத்தரவு என்று சொல்லிவிட்டு வேறு யார் யார் பெயர் தருகிறீர்கள் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். வகுப்பாசிரியர் இது என் வகுப்பு. மாணவர்களை திசை திருப்புகிறீர்கள். போகட்டும். நீங்கள் தமிழாசிரியர்தானே. தமிழ் இலக்கியம் பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கிய ஜாம்பவான் நடேச சாஸ்திரிகளைப் பற்றி எந்தக் கூடுகையிலும் நீங்கள் இதுவரை சொல்லவில்லையே. அவரும் உங்கள் ஊர் தானே என கேட்க அதிர்ந்து போனார் தமிழாசிரியர்.
ஆமாம் பண்டைய திருச்சி மாவட்டத்தில் மணக்கால் என்ற ஊரில் அவதரித்தவர் தான் இருபதாம் நூற்றாண்டின் இந்திய இலக்கியத்தின் புகழ்பெற்ற எஸ்.எம். நடேச சாஸ்திரிகள். அவரின் காலத்தை வென்று நிற்கும் நாவல் திக்கற்ற இரு குழந்தைகள் படித்திருக்கிறீர்களா எனக் கேட்டார்.
மெளனமாய் தமிழாசிரியர் தலை குனிந்தவாறே எனது பெயரையும் பதிவு செய்து கொண்டு அடுத்த வகுப்பிற்குச் சென்று விட்டார். ஆனால் தேர்தல் நடைபெறவில்லை. மாணாக்க பிரதிநிதியாய் பிராமணரல்லாத மாணவர் ஒருவர் நியமணம் செய்யப்பட்டதாக பிறிதொரு நாள் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இவன் வகுப்பாசிரியரை விடவில்லை. அந்த "திக்கற்ற இரு குழந்தைகள்" கதையைச் சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தான்.
இதோ இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்தக் கதையின் பண்டித நடை புகழ்பெற்ற ஒன்று. ஆனால் இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை என்பது தான் வலதுசாரி இலக்கியத்தின் மாபெரும் துயரம்.
அவர் ஆங்கிலம் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் நிறைய எழுதி தமிழிலக்கியத்திற்கும் இந்திய இலக்கியத்திற்கும் அளப்பரிய பங்காற்றி மறைந்திருக்கிறார். இல்லை இல்லை இன்னமும் நம்மிடையே தன் எழுத்துக்களால் காலம் கடந்து வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.
இவரும் பாரதியைப் போலவே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் திருவிழாவில் குதிரை கட்டுக்கடங்காமல் பாய்ந்து கீழே தள்ளியதால் பின் கபாலத்தில் காயம் பட்டு இறந்திருக்கிறார்.
திருவல்லிக்கேணி அரங்கன் இரண்டு மாபெரும் தமிழ் வலதுசாரி எழுத்தாளர்களை தன் திருவடியில் சேர்த்துக்கொண்டிருக்கிறான் எனும் செய்தி இவனை இனம்புரியாத மனத் தவிப்பில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது..
ராகவபிரியன்.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...