Thursday, October 30, 2025


இலக்கிய வலதுசாரிகள்...4

படைப்பிலக்கியம் என்பதும் ஏற்கனவே படைக்கப்பட்ட இலக்கியத்தின் பிழைகளை திருத்தி சரியாக படைப்பதும் இலக்கியச் சேவைதான். படைக்கப்பட்டு புகழ்பெற்ற ஒரு இலக்கியத்தில் வலிந்து திணிக்கப்பட்ட பிழைகளை எடுத்துச் சொல்லும் திறன் இலக்கிய படைப்பாற்றல் திறனுக்குச் சற்றும் இளைத்தது அல்ல. படைக்கப்பட்ட நிஜ இலக்கியம் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும் எனச் சொல்லும் சிந்தனை ஆய்வு படைப்பாற்றல் இலக்கிய படைப்பெனவே கருதுதல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிடும்.
தமிழிலக்கியத்தில் வள்ளுவர் வலதுசாரி இலக்கியப் பிதாமகர் என்பதை எவராலும் மறுதலிக்க இயலாது. அவரின் ஒரு திருக்குறளை பிற்காலங்களில் தவறாக திரித்து கடவுள் மறுப்புச் சிந்தனையை புகுத்திய இலக்கிய மொள்ளமாறித்தனத்தம் ஆங்கிலேயரின் கைக்கூலி உதவியுடன் அரங்கேறியிருக்க வேண்டும். அப்படியான கீழ்தரமான இலக்கிய திரிபு வேலையொன்றை தைரியமாக அம்பலப்படுத்திய பெருமை வலதுசாரி இலக்கியத்தின் புகழ்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் நேதாஜி எனும் வாரஇதழ் நடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையே சாரும்.
ஒரு உதாரணம் தருகிறேன். மதிப்புமிகு வீரம் மிக்க தேவர் திருமகனாரின் வார்த்தைகளை அப்படியே உங்களுக்காக காப்பி பேஸ்ட் முறையில் தருகிறேன்.
புலவர் பெருமக்களே! அறிஞர்களே, சான்றோர்களே! சற்றுச் சிந்தியுங்கள்.! சிந்தியுங்கள்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம், பேனா, பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைகளைக் கருத்துக்களை, ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இன்று இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணி பிடித்து எல்லாரும் எழுதிவிட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதைக் கருதுகிறேன். 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறுதான் பாடியிருக்கக் கூடும் என்று அடியேன் மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப் பெரியவன். அவன்முன் நாம் தூசி மாத்திரம். ஓரணுவும் அவனன்றி அசையாத காரணத்தால் அவனைச் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம். ஆகவே அந்தக் குறள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
'தெய்வத்தால் ஆகும் எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.' -
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து நேர்,நேர் என்று சொல்லி தேமா என்று வாய்பாடு கூறுவர். ஆகும் என்ற சொல்லையும் ஆ+கும் என்று பிரித்தால் நேர், நேர் என்றும் கூறலாம். மா முன் நிரை அசை வரும் வாய்பாடு அகும். ஆகவே தளையும் தட்டவில்லை. தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகுமென்பதே சரி. தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன். சான்றோர்களாகிய நீங்களும் இக்கருத்தை ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்புகிறேன்."
தொன்மையான வலதுசாரி இலக்கியத்தை நீர் நிலம் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம் உள்ளவரை இப்பூமியை நிலவன் சுற்றிக்கொண்டிருக்கும் வரை எவராலும் அழித்துவிட இயலாது.
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...