வாசிப்பியல் என்பது பல அடுக்குகளைக் கொண்டது. பள்ளிப் புத்தகங்களை வாசித்து மனதில் அடுக்கிக் கொள்வது வாழ்வின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிடுவது வாடிக்கை. இதில் வேடிக்கை என்னவெனில் தேர்வு தவிர வேறொன்றிற்கும் உதவாத சில புழுதி படிந்தஅடுக்குகளை களைவதென்பது அத்தனைச் சுலபமும் அல்ல. வாழ்வியலின் மூச்சற்றுத் தவித்து சுவாசித்தே ஆக வேண்டிய பொழுதுகளில் அவ்வடுக்குகளின் புழுதி சுவாசப்பைக்குள் சென்று சில நேரம் நம் வாழ்வை முடிவுக்கும் கொண்டு வந்துவிடுவது தான் மாபெரும் துயரம். நீட் என்பது எத்துனை மாணவர்களின் இலக்குகளை தகர்த்துவிட்டது. போகட்டும்.
ஒரு சில மார்க்ஸிய பொருளாதார குறியீடுகளான தனி நபர் வருமான உச்சவரம்பையும் தனி நபரின் வரவு செலவு விகித்தாச்சாரங்களையும் கல்லூரிப் பாடங்களென இளமையின் ஆண்டுகளை செலவழித்து அடுக்கடுக்காக அடுக்கியிருந்தாலும் நம் வாழ்வின் கடன் சுமை அழுத்துகையில் செல்லரித்த அப்பாடப்புத்தக வாசிப்புத் தரவுகள் எவ்விதத்திலும் உபயோகப்படுவதில்லை. இனி உபயோகப்படப் போவதுமில்லை.
ஆனால் இலக்கிய வாசிப்பென்பது நமக்கு வரலாறு அறிவியல் வாழ்வியல் பொருளாதாரவியல் சிந்தனைச் செறிவியல் உளவியல் சார்ந்த சமூக அணுகுமுறையியல் மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு கொண்ட சமூகவியல் போன்ற விழுமியங்களை நம் மனதில் ஒழுங்காக அடுக்கி வைக்கிறது. வாழ்வின் விழுந்து கிடக்கும் பொழுதுகள் நம் மேல் எச்சில் துப்பிவிட்டுப் போகும். நாம் எழுந்து உச்சம் தொடும் பொழுதுகள் நம் கழுத்தில் மாலையிடும். நம் சமூக சீர்குலைவின் எண்ணங்கள் ஊடகங்களால் திணிக்கப்படுகையில் ஆட்சி மாற்றச் சிந்தனையை அள்ளித் தரும். அதிகார அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகையில் சுய பாதுகாப்பிற்கான கவசங்களை போர்த்திவிடும். இவ்வாறான இதய எண்ணச் சமன்பாடுகளுக்கு தேவையானவற்றை நாம் இலக்கிய அடுக்குகளில் இருந்து எடுத்தாள்வது எளிதாகிவிடும். சட்டகங்களுக்கான வாழ்வெனினும் சுதந்திர வாழ்விற்கான அவாவெனினும் நம் திசைகளை நோக்கிய பயணத்திற்கான அட்டவணையை இலக்கியம் வைத்திருக்கும். வெற்று பாடப்புத்தக அடுக்ககத்தைவிட இலக்கிய அடுக்ககங்கள் அன்றாடம் தூசித்தட்டச் சொல்லி வாசிப்பனுவ இன்பமனதை தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் இலக்கியம் தூசிகளற்று தூய்மையாய் நம்மிடையே கைகோர்த்து இம்மையின் இறுதி மயானத்தையும் தாண்டி நம்மை அழைத்துச் செல்லும் சக்தியுடையவை.
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். இருபதாம் நூற்றாண்டு நமது முந்தைய தலைமுறைகள் வீட்டு நூலகங்களை உருவாக்கி அறிவாற்றலின் அடுக்குகளை குழந்தைகளின் எட்டும் உயரத்தில் நிரந்தரமாக அமைத்துச் சென்றிருக்கிறார்கள். கொஞ்சம் எதிரே பாருங்கள்..நாம் பாடப்புத்தக அடுக்குகளின் தூசித்தொட்டிலில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு இலக்கிய அடுக்ககத்தை மேலைத்தேய இலக்கியங்களிடம் அடகு வைத்துவிட்டோம்.
அப்படியான அரிய இந்திய இலக்கிய அடுக்குகளில் இருந்து அருமை நண்பர் வெற்றிவேல் தேவர் அவர்கள் 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சுதேசி தமிழ் இலக்கிய பொக்கிஷமான தேசபக்தன் கந்தன் நாவலை இவ்வெளிய வாசகனுக்காக அனுப்பித் தந்திருக்கிறார்கள்.
இதை உருவாக்கிய இலக்கிய மேதை மறைந்த கே.சி. வேங்கடரமணி அவர்கள் அவரின் காலத்தில் தென்னகத் தாகூர் என்றழைக்கப்பட்டிருக்கிறார். இலக்கியத்தில் காலத்தால் அழிக்கவியலா இடத்தைப் பெற்றிருக்கிறார்.
தேச பக்தன் கந்தன் நாவலின் முதல் ஒரு சில பக்கங்களை வாசித்துவிட்டு இப்பதிவை இடச்சொல்லி அரங்கன் ஆழ்மனதில் தன் சுதர்சனத்தைத் சுற்றிக்கொண்டிருக்கிறான். அதனால் தான் இப்போது இப்பதிவு.
இந்நாவலைப் பற்றிய முழுமையான திறனாய்வைத் தரும் தேர்ந்த இலக்கியத் தகுதி இவ்வெளியவனுக்கில்லை. இருப்பினும் முற்றாக வாசித்தபின் இந்த எளியவனின் தேசபக்தன் கந்தன் நாவலின் வண்ணங்களை தூர்ந்த தூரிகையின் உதவியுடன் கோணல்மாணலாகவேனும் இங்கே தீட்ட உத்தேசித்திருக்கிறான்.
அருமை நண்பர் வெற்றிவேல் தேவர் அவர்களுக்கும் அரங்கனுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
ராகவபிரியன்
No comments:
Post a Comment