Thursday, October 2, 2025

 






அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளில் அரசியல் கட்சிகள் மனித உயிர்பலி பூசை வெற்றியைத் தேடித் தரும் என நம்புவது கண்டிக்கத்தக்கது.
இளைய தமிழ் சமுதாயம் தூண்டிவிடப்பட்ட பொய்யான சில உணர்வுகளால் சுரண்டப்படுவது அரசியலின் ராஜ தந்திரம்.
திரையில் கதா நாயகன் பேசும் வசனம்.. இந்த மண் காதல் மானம் வீரம் எனும் சோறூட்டி வளர்க்கும் மண்.
ஆனால் நிஜத்தில் சாமான்யனுக்குச் சோற்றுக்கே வழியில்லை என்பதுதான் முரண்.
காதல் மானம் வீரம் எனும் வார்த்தைகளுக்கான நிஜம்மான வாழ்வியல் சாத்தியம் நம் சிக்கல் நிறைந்த சமுதாயத்தில் இல்லவே இல்லை என்பது தான் உண்மை.
ஹிந்தி எதிர்ப்பு எனச் சொல்லி ஒரு அரசியல் கட்சி மொழிக்கு எதிராக இளைய சமுதாயத்தை தூண்டி ஒரு சில மானுட மரணங்களை[ சிட்டி பாபு] பலி கொடுத்து அதிகாரத்தை வாங்கியது இந்த மண்ணின் வரலாறு.
இப்போது கூட இந்தி எழுத்து எது எனத் தெரியாமல் ஆங்கில எழுத்தை தார் கொண்டு அழித்த கதை திரைப்படம் சொல்லும் காதல் மானம் வீரம் எனும் எந்த காண்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதென எவரும் அறியார்.
ப்ராய்ட் சொல்லுவார். இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் கூட்டத்தை வழி நடத்துதல் கடினம். கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைய மனமும் தான் வாழ்வில் செய்ய இயலாததை திரையில் செய்து காட்டும் தலைவன் அல்லது நடிகனின் பிம்பத்தை தான் எனக் கற்பனை செய்து விடுவான்.
அந்த பிம்பத்துக்குள் இளைஞன் புகுந்து கொள்வான். அவனின் ஆழ்மனதில் தானும் ஒரு கதா நாயகன் அல்லது தலைவன் எனும் எண்ணம் ஆளத்தொடங்கும். அந்த செலுத்துதலில் காண வந்த கதா நாயகனை அல்லது தலைவனை நோக்கி நகரத்தொடங்குவான். நகர்தல் மெல்ல அதன் அழுத்தத்தை அதிகரித்து தள்ளும் நிலைக்கு வரும். அடுத்தது அசுர கைகள் ஆயிரம் ஒரு திசை நோக்கி கூட்டத்தை நாலா புறமும் தள்ளத் தொடங்கும்.
அப்படியான தள்ளுதலுக்கு உடன்படும் கைகள் ஒன்றிணைவதைத்தான் ப்ராய்ட் லிபிடினல் பாண்ட்ஸ் ஆப் ஐடெண்டிபிகேஷன் என்பார். அவன் தன்னை நடிகனாகவோ அல்லது தலைவனாகவோ எதையும் செய்யும் ஆற்றல் உள்ளவனாகவோ கற்பிதம் செய்து கொள்வான். இந்த மன நிலை காந்த அலைகளை உடனே கூட்டத்தில் இருக்கும் அத்துனை இதயங்களுக்குள்ளும் புகுத்தும். ஆயிரமாயிரம் இதயங்கள் ஒன்றிணைந்து ஒரு கையாய் நகர்வதற்கான வழி அமைக்க அலைபாய்வதைத்தான் ப்ராய்ட் லிபிடினல் பாண்ட்ஸ் ஆப் ஐடெண்டிபிகேஷன் எங்கிறார்.
இந்த அப்பாவிமானுடன் தான் ஏதோ காதல் மானம் வீரம் எனும் மண்ணின் பிரதி நிதி போலவும் அதை நிரூபித்தாக வேண்டிய தருணம் இது எனவும் உணர்ந்து ஓடோடி வருவான். இந்த அப்பாவித் தனமான அறியாமை பூசிய மன நிலையைத்தான் அதிகாரம் நோக்கிய நகர்விற்கு தமிழக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.
விஜய்க்கு வரும் கூட்டத்தைப்பார்த்து அதிகாரம் பிடுங்கப்பட்டு விடுமோ எனும் பயத்தில்...
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே...
அதிகாரத்தைப் பிடிப்பதற்காக ஆறு மாத பிஞ்சைக்கூட பலி கொடுக்கும் கயமையை என்னவென்று சொல்வது..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...