2. கையசைக்கும் பள்ளி வாகனம்
தன் முதல் குழந்தையை
ஏற்றிக்கொள்கையில்
அதுவரை தூங்கிய பாயை
சுருட்டவியலாமல்
உறுமத்தொடங்கும்.
இப்போதே புறப்பட்டால் தான்
ஒன்பது மணிக்குள்
அத்தனை மழலைப் பூக்களையும்
அள்ளிவந்து
வகுப்பறையில் கொட்டவியலுமென்பதால்
ஒரு முறை உடலசைத்து
நெட்டி முறிக்கும்...
பள்ளி வாகனம் தன் பொருளீட்டும்
சக்தியை விட
பிள்ளைகளைச் சுமப்பதில்
பெருமை கொள்வதால் கனம் கூடி
அவ்வப்போது நடை தடுமாறி
வேகமிழந்து
நெடுஞ்சாலைகளில் கூட
நடந்தே செல்லும்..
தினமும்
பிள்ளைகளின் நகரும் வீடாகி விடுகிறது
பள்ளி வாகனம்..
அதனால் தான்
வாகனம் கடந்தபின்னும்
பிள்ளை வாசம் வழித்தடமெங்கும்
மணம் வீசுகிறது...
மாலையில்
ஓய்ந்து களைத்த மழலைகளுடன்
வீடடைய புறப்படுகையில்
கசங்கிய சீருடையும் தளர்ந்த கழுத்துப்பட்டையுமாய்
அசைந்தாடி வரும் வாகனம்
குழந்தைமையை தேக்கிக்கொண்டு
குழந்தைகளை மட்டும் இறக்கிவிட்டு
கையசைக்கும்...
அன்றாடம்
குழந்தைக் கால்கள் பட்டு
புனிதமாய் பளபளக்கும்
வாகனத் தரைத்தளத்தில்
பாய் விரித்துப் படுப்பதில்லை
அதன் ஓட்டுனர்..
மாறாக
வாகனதின் அடியில்
சக்கரங்களின் நடுவில்
தன்னைத் திணித்துக்கொண்டு
தன் உறக்கம் தின்பார் அவர்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment