Sunday, October 5, 2025

 








ஸ்ரீஸ்துதி...4

இருப்பிடவியல் எனும் பதம் பல உள்ளார்ந்த அர்த்த மாயைகளைக் கொண்டது. வாழ்விற்கான இருப்பிடமும் அதன் முகவரியும் அன்றாட அவசியத் தேவையாகிப் போனது மறுக்கவியலாதது. விடியலில் இருந்து நீளும் கால அலைச்சலில் சிக்கி  சிதறத்தொடங்கிய வாழ்வியல் கூறுகள் பொறுக்கப்பட்டு குவித்தோ மறுசீரமைத்தோ கட்டுகளாக்கியோ அடுக்கி வைத்தாக வேண்டிய இடம் இருப்பிடம். இருப்பிடவியல் வளமையின் பிரதிபலிப்பெனவும் காணக் கிடைப்பது மானுட ஏற்றத்தாழ்வின் காணல் நீர்க் காட்சிகள்..எனில் இருப்பிட அவசியத்தின் தீவிரத் தன்மை அதன் வெப்பமாணியின் முட்களை உயர்த்திக்கொண்டே இருப்பதைக் காணலாம்.  


இருப்பிடத்திற்கான மானுடத் தேடலை பயன்படுத்தி மண் துண்டாடப்படுவது சகிப்பின் கோடுகளை குறுக்கும் நெடுக்குமாக மாற்றியமைத்து கேலிக்குரியதாக்கிவிட்டது. இருப்பிடத் தேடலில் வாழ்வைத் தொலைபவர்கள் சில துயரத்தின் வண்ணக் கொடிகள் துண்டாடப்பட்ட மண்ணில் பறப்பதைக் கண்டிப்பாக கண்டிருப்பார்கள். மண் என்பது மானுட வாழ்வியலின் வளமைக்கான மூலப்பொருள்.  இருப்பிடம் குடக்கூலி வடிவில் இருந்தால் ஆழ்மனதில் இனம்புரியா குடைச்சல் ஒன்று கூராயுதத்தால் நொடி முள்ளென குதித்துக் கொண்டே இருக்கும். அதே இருப்பிடம் சாலையெனின் சில சக்கரங்கள் உறக்கப் பொழுதொன்றில் மேலேறிச் செல்லவும் கூடலாம். தனக்கென ஒரு சொந்த இருப்பிடம் அமைத்துக் கொள்வோருக்கு இருப்பிடவியலின் எல்லாப் பக்கங்களையும் வாசித்த அனுபவ உணர்வு பெருமிதம் தரவும் கூடலாம்.


ஆயினும் இங்கே மஹாலெக்ஷ்மியின் நிரந்தர இருப்பிடம் அரங்கனின் திருமார்பு என ஆகப்பணிவுடன் சொல்கிறார் நிகம்மாந்த மஹாதேசிகர். மானுட இருப்பிடவியல் கூறுகள் மஹாலெக்ஷ்மியின் அருளின்றி உருவாக்கம் பெறுவதில்லை என்பதையும் ஸ்த்தேம எனும் ஒற்றை சம்ஸ்கிருத வார்த்தையில் அறுதியிட்டுக்கூறுகிறார். அன்னை பெரும்தேவித் தாயார் தனது நிரந்தர இருப்பிடமான திருவரங்கனின் மார்பில் சற்று கால் நீட்டி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாளாம். தெய்வீக ஆசுவாசம் என்பது மானுட இருப்பிடத்தை அழகுபடுத்துவதெனவும் கொள்ளவியலும். 


மானுடத்தின் இளைப்பாறுதல் சிக்கல்கள் நிறைந்தவை. குடக்கூலி இருப்பிடத்தில் கால் நீட்டி இளைப்பாறும் உரிமை சுருக்கங்களுக்கு உட்பட்டது. சொந்த இருப்பிடம் ஆசீர்வதிக்கப்பட்ட மானுடன் கால் நீட்டி உடலமைதியும் மனவமைதியும் பெறும் இருப்பிடவியல் உரிமைகள் சில சமயம் கேள்விகளுக்கு உள்ளாவதையும் காண முடிகிறது. ஆனால் அன்னை பெரும்தேவி தன் கால் நீட்டி அரங்கனின் திருமார்பில் ஆசுவாசம் கொள்ளும் நேரம்...தேவியின் தாமரைப் பாதங்களின் செந்தூரப் பூச்சு திருவரங்கனின் திருமார்பில் ஈரம் சேர்க்கிறதாம்..


அரங்கன் அளவற்ற கருணை கொண்டவன் அல்லவா? அவனின் இரக்கம் நிறை மார்பில் ஈரம் எப்போதும் காயாமல் இருப்பதன் காரணிகளை ஆச்சாரியர் அற்புதமான இந்த ஸ்லோகத்தில்  இப்படிச் சொல்கிறார்.


யத் ஸங்கல்பாத் பவதி கமலேயத்ர தேஹின்யமீக்ஷாம்

ஜன்ம ஸ்த்தேம  ப்ரளய ரசநா ஜங்கமஜங்கமநாம்

தத் கல்யாணம் கீமபி யமிநாமேக லக்ஷ்யம் ஸமாதெள

பூர்ணம்தேஜ: ஸ்ப்புரதி பவதீ பாத லாகஷார ஸாங்கம்.


அரங்கன் இந்த மண் எங்கும் வியாபித்திருக்கிறான். அவனே சொந்தமான சொந்தமற்ற வாடகை மற்றும் சாலை குடியிருப்புகளில் எல்லாம் ஆழ்ந்த நித்திரையில் கிடக்கிறான். இந்த மண் பகல் இரவென சுழல்வது அவனின் சக்கரச் சுழற்சி எனில் அதுதான் நிஜம். பகலின் வாழ்வியல் அலைச்சலையும் இரவின் சிதறுண்டுபோன உறக்க அடுக்குகளையும் தன்னகத்தே கொண்டே இருப்பிடவியலின் ஒவ்வொரு செங்கற்கலிலும் அவனின் பெயர்தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. மானுடன் தனக்கான அனைத்தையும் இருப்பிடம் உட்பட துறத்தல் அரங்கனை உறக்கத்திலிருந்து உசுப்பி எழுப்பும். அப்படியான துறவிகளின் இதயத்தில் அரங்கன் உடனெ உட்சென்று உறக்கத்தைத் தொடருவான். எங்கும் நிறைந்திருக்கும் இறையின் மார்பில் இருப்பிடம் கொண்டு அரங்கனின் பெருந்துயிலின் அமைதியைப் பெருக்கும் காரணியாகிறாள் பெருந்தேவித் தாயார்.  அன்னையின் செந்தூரம் புசிய பாதங்கள் அரங்கனின் மார்பில்  பட்டு நிரந்தர ஈரமுடன் இன்னமும் பக்தர்களுக்கு வாழ்விற்கான இருப்பிடங்களை மட்டுமல்ல இருத்தலியலின் அத்யாவசிய தேவைகளையும் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது...அதனால் தான் ஸ்ரீவாரி என அரங்கனின் செயல் பக்தி மின்னும் இழைகளால் நெய்யப்பெற்ற போற்றுதலை உடுத்தியிருக்கிறது.   

தைத்ரீய உப நிஷத்தில் " அவந்தி விதவானா  எனத் தொடங்கும் ஸ்லோகத்தின் தத்துவம் மேற்சொன்ன ஸ்ரீஸ்துதியின் ஸ்லோகத்தின் தத்துவப் பூச்சென இடம் பெற்றிருக்கிறது. வாழ்வியலின் கூறுகளான உண்ண உணவு இருக்க இடம் உடுக்க உடை இவைகளைத் தரும் சக்தி அன்னை பெரும்தேவிக்குத்தான் இருக்கிறதென்பதை ஆச்சாரியர் வார்த்தை வாளெடுத்து உயர்த்திக்காட்டுகிறார். அத்தகைய பெருந்தேவி இருப்பிடவியலின் சிக்கிக் கிடக்கும்  கோடுகளை இலகுவாகப் பிரித்தெடுத்து வேண்டி வணங்கி போற்றிக்கொண்டிருக்கும் மானுட பக்தனின் இருப்பிடத்திற்கான வரைபடத்தை வரையத் தொடங்குகிறாள். வரைபடம் தயாராகிவிட்டால் புதுமனை புகும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது தானே...

திருவரங்கன் திருவடிகளே சரணம்

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.

ராகவபிரியன்


No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...