உலகக் கவிகளின் உயிர்தேன் உன் உள்ளங்கையில்.
சொற்சிக்கனம் படைப்பறம் தனித்துவம் எனும் போலி தமிழ் வார்த்தைகளில்
இருந்து முற்றாக ஒதுங்கிய ஹங்கேரியின் பின் நவீனத்துவ எழுத்து யதார்த்தத்தின் அனைத்துக்
கூறுகளையும் உள்ளடக்கி ஒங்கி ஒற்றை வாக்கியமாய் ஒலித்திருக்கிறது. அப்படி ஒலிக்கச்
செய்த லோஸ்லா கார்ஸ்னஹோர்ஹாயின் ஒரு ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட ஹங்கேரி மொழிக்
கவிதையின் ஆணிவேர் திருமூலரின் ஒரு பாட்டில் இருக்கிறதென்பது அதிரச் செய்யும் நிஜம்.
உருவத்திற்கும் அருவத்திற்கும் நடுவில் சுற்றும்
உலகத்தை இயங்கியல் தத்துவமாய் தந்து சென்றவர் திருமூலர்.. எப்படியெங்கிறீர்களா…அவரின்
ஒரு சோற்றைப் பதம் பார்க்கப் படியுங்கள்..இலக்கிய விருந்தின்
தரம் புரியும்..
காயப்பை ஒன்று சரக்கு பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றோர் பையுண்டு
காயப்பைக்கு உள் நிறை கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே…
[திருமூலர்]
லோஸ்லா கார்ஸ்னஹோர்ஹாயின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில்
தருகிறேன். இது மொழியாக்கமோ மொழி மாற்றமோ மொழி பெயர்ப்போ இல்லை…
என்னைவிட்டு உருவப்படப்போகிறது…
என் கண் காணாத காடுகள்
நான் நடந்த நடந்திராத பாதைகள்
என் காதுகளில் வந்தமர்ந்து
சதா கத்திக்கொண்டிருக்கும்
வெளி நாட்டின் பெளிமிங்கோ பறவைகள்…
உள் நாட்டின் வானம்பாடிகள்..
அனைத்தும்
ஒரு நாள் கொலைசெய்யப்பட்டு
பதப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்
நீங்களளித்த விருதுகள்
நான் வளர்த்த தாடி
என் பெற்றோர்கள் என் அரங்கன்
நான் படித்த பகவத் கீதை திருமூலர் தேசிகர் ராமானுஜர்
திஜரா தஸ்தாவஸ்கி தஸ்தாவேஜ்கள்
பாடப் புத்தகங்கள் கோணார் உரைகள்
கல்கி விகடன் குமுதம் காலச்சுவடு கணையாழி
நான் சுற்றிவந்த ப்ராகரங்கள் வாழ்ந்த அக்ரஹாரங்கள்
நான் அமர்ந்த தேனீர்கடை நீள் மரப்பலகைகள்
வகுப்பறைத் தரைகள் டூரிங்க கொட்டகை மணல்கள்
வாழ்ந்த வாடகை வீடுகள் சொந்த அரண்மனை
உத்யோக இடங்கள் உறவினர் வாசல்கள்
ஊர்சுற்றிய பொழுதுகள்
இன்னும் இன்னும் அனைத்தும்
அதனதன் அர்த்தங்களை இப்போது இழந்து நிற்பதால்
இதோ என் கால எறும்புக்கூட்டம்
சூழ்ந்து அரித்து துகளாக்கி
தூக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது..
உடைகளற்ற அழுக்காகிப் போன ஆணுடலும்
எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியற்ற
பஞ்சடைந்த கண்களும் எப்போது வேண்டுமானாலும்
நின்றுவிடப்போகும் இருதயமும்
கையிலிருந்து எந்நேரமும் நழுவி விழப்போகும் கைபேசியும்
ஒட்டியிருக்கும் ஒருசில கவரி உரோமங்களையும் கூட
உதிர்த்துவிடப்போகிறேன்..
No comments:
Post a Comment