Sunday, October 19, 2025

 


இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி
அந்த இருள் வானில்
ஆறுமாதம் முன் நீண்ட
மரணத்தின் கரம்
இன்று வெடிகுண்டுகளை
திரியின் முனை நீக்காமலேயே
கொளுத்திக்கொண்டிருக்கிறது..
சட் டென ஒரு நொடி ஒளிர்ந்த வானிலிருந்து
மகிழ்ச்சி ஆதவனும்
மலர்ச்சி நிலவனும்
வானவெடிகளாய் வெடித்து
ஒளிநட்சத்திரங்களென
கோடிகளில் சிதறி
வானத்தின் ஓரமெங்கும்
ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறேன்...
என் வீட்டின் வாசல்களில்
வீதியின் பட்டாசுக் குப்பைகள்
ஒன்றோடொன்று உருத்திரண்டு
தகர்க்கவியலா தேக்குக் கதவுகளென
எழுந்து தழுவியபடி
என் வெளியேறலைப் பூட்டுகிறது..
புது ஆடைகளுடன்
கந்தர்வர்கள்
என் வானின் திரையரங்கு முன்
வரிசையில் நின்று
என் கேளிக்கைக்கான
அனுமதிச் சீட்டை கிழித்தெறிந்துவிட்டு
அப்படிச் சிரிக்கிறார்கள்
சரவெடியென...
என்ன செய்வேன்..?
ஒவ்வொரு ஆண்டும்
அரங்கனுக்கு புது ஆடை தராமல்
என் தீபாவளியின்
மத்தாப்புகள் கொளுத்தப்பட்டதில்லை..
இந்த தீபாவளியில்
என் மனவானின் பாற்கடல்
ஆரவார அலைகளின்றி
இன்னமும் எழுந்திருக்காமல்
தூங்கிக் கொண்டிருக்கிறது..
அரங்கனும் அரங்க நாயகியும்
ஏன் ஆதிசேடனும் கூட
புத்தாடை அணியாமல்
பட்டாசு கொளுத்தாமல்
வெற்றிலை சுருண்டு மிதக்கும்
ஓம எண்ணெயை ஒரு சொட்டுகூட
தலையில் தேய்க்காமல்
கசப்பு அரப்பை
கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்...
என் வானத்து கருடன்
தன் சிறகுகளை மூடிக்கொண்டிருக்கும்
இத் தீபாவளியில்
இருள் மட்டுமே
எங்களைச் சூழ்ந்திருக்கிறது...
அண்ட சராசரங்களும் அதிர
ஒலியெழுப்பும்
என் எழுத்தின் கேசவ யானை வெடி
விடாமல் கொட்டிக்கொண்டிருக்கும்
அரங்கனின் கண்ணீர் மழையில்
நவுத்துக் கிடக்கிறது...
இந்த சோக இருளைத் தின்று
என் மன வானில் வண்ண ஒளியுதிர்த்தபடி
எழும்பி நிற்கும்
வாழ்த்து பொதவாணம் ஒன்றை
நீங்கள் தான் கொளுத்த வேண்டும்..
செய்வீர்களா...? நண்பர்களே..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...