ஸ்ரீஸ்துதி
6.
இந்து மத ஆன்மீகத்தின்
தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித்
தீயை வளர்க்கும் அமைப்பியல் தத்துவங்களை உள்ளடக்கியது. கடும் புயல் வேள்வி நெருப்பை
ஊதி வளர்க்க அதில் நம்பிக்கை நெய்யை ஊற்றச் செய்யும் அணுகுமுறையைக் காட்டும் தெய்வீகப்
பார்வை அது. இருண்ட வாழ்வின் வானத்தில் தீராது கொட்டும் அடர் மழையின் காலம் ஆகச் சிறியதெனச்
சொல்லியபடி மேகம் மறைத்த ஆதவன் தரும் வெளிச்ச காலம் வெகு தொலைவில் இல்லை எனக் காட்டும்
இயங்கியல் பார்வை இது. ஆதவனுக்கான ஹவிஸ்களை சமர்ப்பிக்கும் வேள்வித் தத்துவ கோட்பாடு
புயலின் துயரை நொடியில் துடைக்கும் வல்லமை உடையது. அழிக்க வேண்டியதை அழித்து உருவாக்க
வேண்டியதை புதிதாக உருவாக்குவது தான் இந்து ஆன்மீகத்தின் புயற்கோட்பாட்டுப் பார்வை.
வேள்விகளில் சமர்ப்பிக்கப்படும் ஹவிஸ்கள் மானுட உளவியல் கோட்பாட்டுடன் ஒத்திசைவை தருவது
இந்து ஆன்மீகத் தத்துவத்தின் கூடுதல் மரபியல் செயல்பாடெனில் அதுதான் நிஜம்.
ஆதவன் மானுட
புத்தியின் குறியீடு. வேள்வியின் அக்னி ஆசைகளின் வெளிப்பாடு. சமித்துக்கள் ஆன்மாவை
ஆசைகளாக்கி வேள்வியில் சாம்பலாக்க வேண்டுமெனச் சொல்லும் கருதுகோள் உத்திகள். புயல்
வீழ்ச்சியைத் தருவதில்லை. இந்து மதத் தத்துவங்கள் எழுச்சியைத் தான் தரும். புயலில்
இருண்ட வாழ்வின் காலத்தே நம்பிக்கை அக்னி வார்த்து ஹவிஸை ஆதவனுக்குச் சமர்ப்பித்தால்
ஞாயிறன் மகிழ்வான்.
வேள்வியின்
பலன் அனைத்தும் அரங்கனையே சேருமென ஆச்சார்யன் நிகம்மாந்த மஹா தேசிகர் சொல்கிறார். அரங்கனுக்கு
மானுடம் அடிமையெனும் அரிய தத்துவப் பார்வையை வேதங்கள் தருவதாகச் சொல்கிறார். மானுடன்
தான் அரங்கனுக்கு அடிமை இல்லை எனும் எண்ணம் உருவாக இடம் தருதல் கூடாது . அப்படி இடமளித்தால்
அரங்கனிடமிருந்து தனது ஆன்மாவை தானே திருடியதாகும். இது ஆன்மீகத் தத்துவத் தகர்புப்புயலை
உருவாக்கும் வல்லமையுடையது.
உத்தேச்யத்வம்
ஜநநி பஜதோருஜ்ஜிதோபாதி கந்தம்
ப்ரத்யக் ரூபே
ஹவிஷி யுவயோ ரேக சேஷித்வ யோகாத்!
பத்மே பத்யுஸ்
தவ ச நிகமைர் நித்ய மந்விஷ்யமாணோ
நாவச்சேதம்
பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:
[ ஆச்சார்யன்
நிகம்மாந்த மஹா தேசிகர்]
அரங்க நாயகியும்
பெருந்தேவியுமான என் அன்னையே.. மானுட ஜீவித யாகத்தில் அவிர்பாகம் உன்னையும் அரங்கனையும்
வரதனையுமே சேரும். மானுட அடிமைகளின் மேலான உங்கள் உரிமை சமமானது. இதைத்தான் ஆன்மீக
தத்துவம் போதிக்கிறது. புயலுக்குப் பின்னான அமைதியை உன்னால் மட்டுமே தரவியலும் எனும்
நிஜம் வேதங்களின் உட்பொருளாக இருப்பதை தகர்த்தல் அரிது. வாழ்வின் புயல் கரையைக் கடந்து
வலுவிழந்துவிடும். பிறகான பரிதியின் கிரணங்கள் வளமையைத் தரும் எனும் நம்பிக்கையோடு
உங்கள் இருவருக்குமான ஹவிஸ்களை வாழ்வியல் வேள்வியில் சமர்ப்பிக்கின்றோம்.
திருவரங்கன்
திருவடிகளே சரணம்.
ஆச்சார்யன்
திருவடிகளே சரணம்
ராகவபிரியன்
No comments:
Post a Comment