ஆன்மீகம் மனிதனை
மனம் எனும் அந்தராத்மாவில் அரங்கனை துயில் கொள்ள வைக்கும் கலையை அனுபவம் மூலம் கற்றுத்தருகிறது.
ஆனால் மனிதன் தனது கர்வத்தால் தானே அரங்கன் எனும் கடவுளின் சக்திகள் கொண்டவனாக மனதில்
கர்வம் கொள்கிறான். அதனால் ஆன்மீகக் கலையை அலட்சியம் செய்கிறான். அவனின் செய்கைப்பாடுகள்
உலக நிலையற்ற இன்பகளுடன் ஒட்டியிருக்கும் ஒட்டுப்பண்புகளால் சுயத்தை இழக்கச் செய்வது
சகிக்கவியலாதது. மானுட அகமும் அவனின் புறமும் பள்ளத்தாக்குகளும் அதைச் சுற்றியிருக்கும்
சிகரங்களும் என கட்டி எழுப்பிய சிறைக்குள்ளாகவே
சுற்றி வருவது அவனின் ஆன்மீக அறிதலுக்கான முடக்கப் பாயை விரித்து வைக்கிறது. முதலில்
வேகமாக சுற்றுபவன் களைத்து சுழற்சியின் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டு பின்பு முடக்குப்
பாயில் முடங்கிவிடுகிறான்.
ஆத்ம உபனிஷத்தில்
மனிதனின் சுயம் மூன்று நிலைகளாக துண்டாடப்பட்டிருப்பதின் யதார்த்தத்தை உணர வைக்கிறது.
உள் சுயம் என்பதும் வெளி சுயம் என்பதும் இரண்டையும் மீறிய அவனிடத்தே உள்ள உயர்ந்த உயர்வுச்
சுயம் என்பதையும் மானுடன் தன் வாழ்வியல் கூறுகளில் அடையாளம் கண்டு தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள
வேண்டுமெனில் தன் அந்தராத்ம இருளை சுருட்டி ஒரு மூலையில் கிடத்திவிடவேண்டும். உள்சுயம்
தான் எனும் சிந்தையை போர்த்திக்கொண்டிருக்கையில் மனிதன் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
தவறிவிடுகிறான். வெளிசுயம் என்பது மனிதன் தன்னுடைய உடலின் மீதான கர்வத்தின் பசைமத்தின்
பிடியிலிருந்து விடுபடவியலா தன்மையுடன் இருப்பதாகும். தன் உடலின் நிறங்கள் வல்லமை உறுப்பின் ஆற்றல்கள் இயங்குவிசைகள்
உற்பத்தித் திறன் இவைகளுடனான் உறவின் இயக்கத்திலிருந்து பிரித்தெடுக்கவியலா காய்ந்த
பசைமத்தின் பிடியை உரத்துச் சொல்வது தான் வெளிசுயம்.
உள்சுயம் மற்றும்
வெளிசுயம் இவைகளில் இருந்து முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டதுதான் உயர்சுயம். மனம்
அதன் காற்றின் தடத்தில் சிறகு விரித்துப் பறக்கும் பொழுதுகளில் கீழிறங்கி ஒரு கிளையிலோ
மாடத்திலோ சுவரிலோ நீர் நிலையிலோ நிற்க வைப்பதென்பது
கடின வித்தையின் தொய்வற்ற நீள் பயிற்சியின் விளைவாகவே சாத்தியப்படுவது. ஒவ்வொரு மானுட
மனதிற்குள்ளும் ஒரு உயர்ந்து சுயம் இருக்கிறது. அந்த உயர்ந்த சுயம் வானம் பூமி காற்று
நெருப்பு மற்றும் தண்ணிர் இவைகளின் ஆற்றல் நுல்லியத்தின் அளவுகளான நிகிதத்தின் வழியாகக்கூட
கணக்கிடுதல் கடினம் என உணரும் பொழுதில் வெளிபடும் இயங்கியல் அதிசயம்.
ஆத்மா
– ஆத்மா: ந ப்ரகாசதே அக்ர்யயா
ஸுக்ஷ்மயா
புத்த்யா
ஸுக்ஷ்ம தர்சிபி த்ருச்யதே
என ஆத்ம உபனிஷதப்
பாடல் சொல்கிறது. உயர்சுயம் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட மானுடம் நுல்லியத்தின் நிகித அளவுகளையும் மீறிய ஆற்றல் கொண்ட
இயற்கையின் படிமங்கள் தன்னுள்ளேயும் சமன்பாடு கொண்டு இயங்குவதை உணர்த்துவதாக மேலே உள்ள
பாடல் சொல்கிறது.
இதைத்தான் நிகம்மாந்த
மஹாதேசிகர் ஸ்ரீஸ்துதியில் இப்படிப் பேசுகிறார்.
நிஷ்ப்ரத்யூஹ
ப்ரணய
கடிதம் தேவி
நித்யாஙபாயம்
விஷ்ணுஸ் த்வம்
சேத்யநவதி குணம்
த்வந்த்வ மந்யோந்ய
லக்ஷ்யம்
சேஷச் சித்தம்
விமல மநஸாம்
மெளளயச் ச ச்ருதீநாம்
ஸம்பத்யந்தே
விஹரண விதெள
யஸ்ய சய்யா
விசேஷா:
[ ஆச்சார்யன்
நிகம்மாந்த மஹாதேசிகன்]
பெருந்தேவித்
தாயே நீயும் அரங்கனும் ஒரு நாளும் பிரிந்திருப்பதில்லை. அரங்க நாயகியும் வரதனும் தான்.
உங்களிடையே உள்சுயம் வெளிசுயம் என்பதன் பிரிவினைகள் இல்லை. நீங்கள் இருவரும் இணைந்திருக்கையில்
உயர்சுயமே வெளிப்படுவதால் பஞ்ச பூதங்களில் எல்லாம் நீங்களே இருக்கிறீர்கள். அரங்கனாய்
பள்ளி கொண்டும். வரதனாய் நின்றிருந்தும் கேசவனாய் எல்லாவித்திருந்தும் ஆகப்பெரிய பிராட்டிமார்களுடன்
உலகெங்கும் வியாபித்திருக்கிறாய்.
தொடர்ந்த யோகப்
பயிற்சியில் உள்ள யோகிகள் உங்கள் இருவரையும் தனித்தனியாய் ஞானக் கண்களில் கண்டதாக வரலாறில்லை. ச்ரியா பதி எனும் போது பெருந்தேவியின் வடிவில் வரதனையும்
விஷ்ணு பதி எனும் போது அரங்கனின் வடிவில் அரங்கதம்மாவான அரங்க நாயகியையுமே காண்கிறார்கள்.
இயற்கையின்
மாபெரும் சக்தி நிறைந்த பஞ்சபூதங்களிலும் பள்ளிகொண்ட அரங்கன் அனந்தாழ்வான் மீதும் யோகிகளின்
உள்ளங்களிலும் வேதங்களின் தலையாய உபனிடதங்களிலும் பள்ளிகொண்டிருக்கிறான்.
அரங்கனையும்
வரதனையும் பெருந்தேவியையும் அரங்க நாயகியையும் உணரவேண்டுமெனில் உயர்சுயத்தின் வானம்
பாடி தன் சிறகுகளை மடக்கி ஆழ்மனதில் பாடிக்கொண்டிருக்கவேண்டும். அந்த வானம்பாடியின்
இசையில் உள்சுயமும் வெளிசுயமும் கட்டுக்குள் அடங்கி ஆதிசேடனாக முடக்கப் பாயை விரித்து
அதன் மேல் அரங்கனை பள்ளிகொள்ள அனுமதிக்கும். அப்போதில் மானுடம் தன் உயர் ஆற்றலை மானுட
நலனுக்காக செலவிடுதல் சாத்தியப்படும்.
திருவரங்கன்
திருவடிகளே சரணம்.
ஆச்சார்யன்
திருவடிகளே சரணம்.
ராகவபிரியன்
No comments:
Post a Comment