Thursday, October 23, 2025

கவிஞனை காலம் எப்படியாவது காப்பாற்றிவிடும். எப்படி என்று கேட்பவர்களுக்காக இதைச் சொல்லியாக வேண்டும். கவிஞனின் மூச்சு கவிதை. மனிதனின் சுவாசம் காற்று. மனிதனுக்கு மரணம் நிச்சயம். காற்றிற்கு மரணமில்லை. கவிஞன் நிச்சயம் ஒரு நாள் அமரனாகக்கூடும். ஆனால் கவிதைக்கு மரணமில்லை. அப்படியான மரணமில்லா பெருவாழ்வு கொண்ட காலத்தால் அழிக்கவியலா கவிதைகளை தொகுத்து அதன் மேல் எனக்கு எந்தப் புகாருமில்லை என்ற தலைப்பிட்டு சமகால கவியாளுமை அருமை நண்பர் அய்யப்ப மாதவன் இந்த ஏழைக் கவிஞனையும் அவனின் ஒரு கவிதையையாவது மரணமின்றி வாழ்ந்தாக வேண்டுமெனும் நல் உள்ளத்தாலும் காலத்தின் தொடர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அரிய இலக்கிய சேவையென கருதி ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 

இரண்டு நாட்களுக்கு முன் இந்தத் தகவலை கைபேசியில் அழைத்து கவி அய்யப்ப மாதவன் அவர்கள் சொல்லியபோது அவரது மின்னும் அன்பு மின்னலில் தாக்குண்டு சிறுது நேரம் செயலற்றுப் போனேன். செயலற்றுப் போதல் என்பது மரணத்திற்கான முதற் பாடம் அல்லவா. ஒரு நாள் உங்கள் ராகவபிரியன் மரணித்துக் கிடக்கலாம். ஆனால் அவனின் இத்தொகுப்பில் இடம் பெற்ற ஒரு கவிதையை காலத்தால் அழியாமல் காப்பாற்றிய பெருமையை அன்பு நண்பர் திரு அய்யப்ப மாதவன் அவர்கள் தக்க வைத்துக் கொண்டார். இன்று அந்தப் புத்தகத்தையும் அவரின் நீலப்பெருங்கடல் கவிதைத் தொகுப்பையும் அஞ்சலில் அனுப்பியிருக்கிறார். காஞ்சியின் முதல் அஞ்சல் மானுடனின் சார் போஸ்ட் எனும் குரல் தேனை என் காதுகளில் பாய்ச்சியது. ஓடிச் சென்று  நெகிழ்வுடன் பெற்றுக்கொண்டு பிரிக்கிறேன் அந்தப் புத்தகங்களைப் பிரிக்கையில் சுவாசம் நுழைந்த கவிதைகளடங்கிய காகித வாசம் அடங்குவதற்குள் இந்தப் பதிவை இங்கே பதிவேற்றச் சொல்லி அரங்கன் ஆணையிட்டான்.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற அத்தனை கவிஞர்களுக்கும் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர் அய்யப்ப மாதவனுக்கு என் நன்றியும் வணக்கங்களும். அரங்கனுக்கும் வரதனுக்கும் காலத்தால் அழிக்கவியலா கவிதைகளுக்கும் என்றென்றும் நன்றியுடன்...  

அன்பன்...உங்கள்

ராகவபிரியன்







No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...