நெகிழித் துணியின் வண்ண வடிவமைப்பில்
சந்தனப் பேழையொன்று
குழந்தைகளை உள்வரச் சொல்லி
பவ்யமாய் நீள்கிறது
அன்புத்தாயின் கரமுடன்..
அலுவலக அறையில் தொங்கும்
வண்ண ஊதும்பைகளில்
ஈர்ப்புடன் சட் டென தாவி ஏறி
தங்களை நிரப்பிக்கொள்கிறார்கள்..
அவர்களுடனும் குழந்தையுடனும்
மேலெழுகிறது வண்ண வண்ண
நம்பிக்கை வளிக்கூடுகள்..
நீளும் பள்ளியின் கை நகங்களெங்கும்
அப்பியிருக்கும்
சாயமிழந்து மூடிக்கிடக்கும்
மூலதன கட்டணப் பூச்சுகளைச்
சுட்டிக் காட்டுகிறாள்
முன் மழலையர் வகுப்பில் சேரப்போகும்
மழலைப் பெதும்பை.
பொக்கைவாய்ச் சிரிப்புடன்
கோட்டோவியக் குழந்தைகள் விளையாடும்
விளையாட்டுக்கள் வரையப்பெற்ற சுவரில்
காந்தி அவருக்கான
அத்தனை உயரத்தில்
இன்னமும் கருப்பு வெள்ளையில்
வெகுளியாகத்தான்
தொங்கிக்கொண்டிருக்கிறார்.
மெல்ல மெல்ல ஆடி அசைந்து மேலேறி
காந்திப் படத்துடன் ஒட்டியிருக்கும்
அறையின் கூரையில்
அடைக்கலம் கொள்கின்றன..
சுருட்டி வீசும் காற்றில்
பள்ளிக் கட்டண சுமைஅடைத்த
ஊதும்பையொன்றும்
சட்டென மேலெழும்பி
ஓட்டியிருக்கும்
வளிக்கூடுகளுடன் ஒட்டிக் கொள்கிறது..
மூலதனக் கட்டணமும் பூசிய
நகத்தின் கூர்முனை பட்டு
வெடித்துச் சிதறுகின்றன
நம்பிக்கை ஊதும்பைகள்.
வளிக்கூடொன்றுடன்
பெற்றோரின் கைபிடித்து
துள்ளிக்குதித்தபடி
வாசலுக்கு வருகிறாள்
மழலைப் பெதும்பை..
விருட்டென நீண்ட பேழையின் சந்தனம்
சிவப்பென மாற
மோதிர விரல் நுழைத்தெடுத்து கொஞ்சம்
பெதும்பையின் வளிக்கூட்டிற்கு
வண்ணப்பூச்சிடுகிறாள்
அன்னை…
வாழ்வின் வானமெங்கும்
அலைந்து கொண்டிருந்த
எதிர் காலப் பெதும்பையின்
நம்பிக்கை அடைத்த வண்ண வண்ன
ஊதும்பைகள்..
சாயமிழந்த கட்டண நகப்பூச்சுள்ள
கைகள் வானம் வரை நீண்டதறியா
மழலை பெதும்பை
கைக்கொட்டியபடி
அப்படிச் சிரிக்கிறாள்...
No comments:
Post a Comment