Monday, October 13, 2025

 



ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5

 

கொதிக்கும் குழந்தை விழுமியங்கள்…

 

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னான

பள்ளிக் காலையில் குழந்தை

உறக்கத்தை உள்ளங்கைக்குள் பிடித்துக்கொள்கிறாள்..

 

உறங்கும் உள்ளங்கை உறக்கம்

குளிக்கிறது.. சீருடை அணிகிறது… உணவு உட்கொள்கிறது….

ஆனால் தன் காலையின் இன்னமும் திறக்காத விழிக்கதவுகளை

உள்ளங்கைக்குள் பூட்டி வைத்துக்கொள்கிறது…

 

மடங்கிய விரலுக்குள்ளான உறக்கமிழந்த விழிகள்

பார்வை முஷ்ட்டியை உயர்த்துகையில்

மண்டியிடுகின்றன மழலையர் பள்ளிகள்…

 

மழலையர் பள்ளிகள் குழந்தை உறக்கத்தின்

துரோக வெளிகள்..

அங்கிருக்கும் வகுப்பறைச் சப்தங்கள்

குழந்தை கும்பகர்ணனை எழுப்பும்

ஆனை மிதித்து ஆடும் அலப்பறைகள்...

 

தினமும்

பள்ளியின் வகுப்பறையில்

தொலைந்து போன மீதி உறக்கத்தைத் தேடுகிறாள் குழந்தை..

சற்றே கண் அயர்ந்த வகுப்பறை கரும்பலகையில்

அது எழுத்துக்களாயும் வடிவங்களாயும்  

தூங்கி தூங்கி அவள் மீதே வழிகிறது

சீலீரென தெளிக்கப்படும் உள்ளங்கை நீரென...

 

குழந்தையின் மீந்த உறக்கம்

வகுப்பு வானில்

மேகங்களாய் மிதக்கத் தொடங்குகிறது..

அதனுள் ஊர்ந்து வரும் பாடமெனும் பால்நிலா

தன் பாடத்தைத் தொலைத்துவிட்டு

குழந்தையின் வகுப்புத் தொட்டிலை

மேலும் கீழும் ஆட்டத் தொடங்குகிறது..

 

குழந்தையின் உறக்கம் அதன் உரிமை..

குழந்தையின் உரிமையைப் பறித்துவிட்டு

அறிவைப் புகட்டுவதான செயல்

அராஜக அத்து மீறல் அன்றி வேறென்ன?

 

குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு

மீந்த குழவியுறக்கத்தை  

எடுத்துச் செல்லும் தாய்

மாலையில் சேய் வரும்வரை

மாண்டெஸரி சிபிஎஸ்சி மெட்ரிக்

எனும் கண்மை குழைத்து

குழந்தை விழியின் கீழ்

கருமையை அப்பிவிடுகிறாள்…

 

மாலையில் வீடு வந்த குழந்தை

தன் மீதி உறக்கத்தைத் தேடிப் பிடிக்கையில்

வீட்டுப்பாடங்கள்

அவளின் உள்ளங்கையில்

கழுவ இயலா கண்மையென

ஒட்டிக்கொள்கின்றன…

 

உறக்கம் தொலைத்த

குழந்தைக் கண்களின் கண்ணீர்

நிகழ் வாழ்வியலில் சேந்தப்பட்டு 

காலத்தின் கொதிகலனில்

ஊற்றப்படுகிறது...

 

கொதிக்கும் 

குழந்தைக் கண்ணீர் கொதிகலனுக்குள் தான் 

வீசப்படுகின்றன

குழந்தையின் உறக்கத்திற்கான 

எஞ்சிய விழுமியங்கள்…

ராகவபிரியன்

 

 







No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...