வாழ்வின் சக மானுட செயல்பாடுகளில் கடுகளவு விஞ்சி நிற்கும் ஒரு சிறிய சாதனையே தான் எனும் அகம்பாவத்தை மனித மனதிற்குள் விதைத்து விட இயலும். அது அறிவார்ந்த சபையில் மெல்ல இதயச் சேறிலிருந்து துளிர்த்து வார்த்தைகளிலோ இல்லை உடல் மொழியிலோ தன் ஆணவத் துளிர்களை அசைத்துக் காட்டிவிடும். அப்படியான அகங்கார வெளிப்பாட்டைத் தவிர்த்தல் கடினம். அது தொடர்ந்த பயிற்சியினாலும் யோகத்தாலும் தான் சாத்தியப்படும்.
இதைத்தான் ஒரு பண்டைய விருத்தப் பாடல் இப்படிச் சொல்கிறது...
உற்றதொகை நான்கு இலக்கத்து ஐம்பதின் ஆயிரம் என்று
உரைத்தவட மொழி வேற்பின் ஒரு கடுகின் அளவில்
பெற்றிடும் அங்கிசம் நூற்றில் ஒரு பங்கின் பொருளைப்
பேர் உலகில்.........................................என்றே
வெற்றி நெறி செந்தமிழை உணர்ந்து அருளும் பெரியோர்
வீற்றிருக்கும் சபைதனில் யான் விளம்பியபுன் மொழியில்
குற்றமுறை யார் கருணை புரிவர் அறியாத
குதலைமொழிக் குழவியின் சொல் குறித்து அறிவார் போல.
[கீரனூர் நடராஜன்]
தனக்குத் தெரிந்த ஒரு மொழி உயர்ந்த மலையென முன்னே நிற்கிறது. அதிலிருந்து எடுத்த ஒரு சிறு கல் அளவிலான குழந்தையின் மழலைச் சொல் போல பொருள் முரண்களுடன் தான் பேசுவதாகச் சொல்கிறார் இந்த பன்மொழி வித்தகர். அப்படியான மொழியுடன் பேசுவதில் ஏதாவது சிறு குறையிருந்தாலும் சபையோர் மன்னிக்கும் படி எழுதியிருக்கிறார்.
பாரதியும்
பாரி வாழ்ந்திருந்த கீர்த்தி பழம் தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காண வேண்டின்
நேரில் அப்போது எய்தி வழிபட நினைகிலாயோ..
என்று கற்றறிந்த சான்றோர் முன்னே அரசன் எனினும் பணிவு காட்ட வேண்டுமென சொல்லிச் சென்றிருக்கிறார்.
இன்றைய நிலையில் பணிவு என்பதும் அவையடக்கம் என்பதும் தமிழ் மொழியில் தனது அர்த்தத்தை இழந்து நிற்பதைக் காண நேர்வது மானுட இயல்பு முரண் அன்றி வேறென்ன?
ராகவபிரியன்
No comments:
Post a Comment