மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்தின் பார்வை வேறிடம் அகன்றுவிடக் கூடாத செயல்பாடுகளில் சில நேரம் தன்னையே இழந்தும் விடுகிறான். பிறந்தவுடன் தாயின் பார்வைக்காக தனது இருத்தல் அழுகையை துவக்குகிறான். பிறகு வளரிளம் பருவத்தில் எதிர்பாலின பார்வை படுவதற்காக அலையத் தொடங்குகிறான்.அவனின் அலைச்சலுக்கு இப் பிரபஞ்சமே போதாமல் போவதுதான் வாழ்வியலின் இருத்தலிய புதிர்நிறை யதார்த்தம். அடுத்ததாக அங்கீகாரத்திற்கான ஏக்கப் பார்வைக்காக ஏங்கத்தொடங்குகிறான். வாழ்வின் இருத்தலிய நீட்சிக்கான பொருளீட்டும் வாய்ப்புகளின் பார்வைக்காக கூனிக்குறுகி நிற்கவும் அவன் தயங்கியதில்லை. மானுட முதுமையின் இருத்தலிய அவலம் மரணத்தையும் விஞ்சிய கொடுமை. அவனின் முதுமையில் அன்பிற்கான கரங்களை கண்டுவிடத்துடிக்கும் பஞ்சடைந்த பார்வையின் இருண்மைக்குள் வெளிச்சத்தின் கால்கள் எப்போதும் நுழைவதே இல்லை.
மானுடன் தன் இருத்தலை வெளிப்படுத்த அடர் காடுகளுக்குள் கூட ஆயுதங்களின்றியும் நுழைவான். சுவாசக் காற்று சுற்றவியலா ஆகாய வெளிக்குள்ளும் அவன் புகத் தயங்கியதில்லை. எப்படியும் தனது இருத்தலை எவ்வழியேனும் வெளிக்காட்டிவிடும் அவன் தன் மரணத்தைக்கூட வெளிச்சமிட்டுக் காட்ட இறுதி ஊர்வலம் போவதுதான் இருத்தலிய நிஜம்.
இப்படியான சில குறிப்பிட்ட மானுடங்கள் தன்இருத்தலை வெளிக்காட்டும் இருத்தலிய இருண்மையின் தாக்கத்தால் எங்கும் நிறைந்திருக்கும் அரங்கனின் இருத்தலை நம்ப மறுக்கும். ஆனால் அரங்கனின் இருத்தலை நம்பும் மானுடனுக்கு அரங்கன் தன் இருத்தலை எப்படியும் காட்டிக் கொடுத்துவிடுவான். அச்செயலின் பெயர்தான் தெய்வீக அரங்கன் செயல். அதைத்தான் இவ்வடிமை அரங்கனின் செயல் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
அரங்கன் தன் பக்தன் வாழ்வின் காடுகளில் பசியுடன் அலைந்து திரிகையில் அணில் கொத்தாத மண் ஒட்டாத பழமென பாதையில் கிடப்பான். சுவாசம் வற்றி வாழ்வின் வெளியில் வறுமையுடனும் தாகமுடனும் கொடும் பாலையின் மணல் குன்றுகளுக்குள் ஒட்டகப் பயணம் செய்து வேர்த்திருக்கையில் மழைத்துளியென ஈரம் சொட்டுவான். அப்படியான அரங்கனைக் கண்டு கொள்ளும் மானுடன் தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனடிமையாய் அரங்கனின் தெய்வீக இருத்தலிய இருண்மைக்குள் தன்னைப் புகுத்திக்கொள்வான்.
இந்த அரங்கனடிமையும் தன் வாழ்வின் இருத்தலிய இருண்மைக்குள் இதுவரை கண்டறியா ஊரில் பேரக் குழந்தைகளை மழலைப் பள்ளியில் விடுவதற்காக அழைத்துச் செல்கிறான். அவ்வேளை அவனின் இருத்தல் அடுக்கித் தேங்கும் அடர் மானுட கூட்டத்திற்குள் அழுத்தப்படுகிறது. பள்ளி செல்லும் பாதையில் ஒரு மானுட மரணம் நிகழ்ந்திருக்கிறது போலும். அத்தடையொன்றின் திடீர் இருத்தலால் அடர் மானுட கூட்டம் ஆகச் சிறிய சந்தொன்றிற்குள் சுருக்கப்பட்டு நுழைக்கப் படுகிறது. இதுவரை கண்டறியா ஊரொன்றின் ஆகச் சிறிய சந்தின் பாதைக்குள் புகுத்தப்பட்ட இவ்வரங்கனடிமையின் குருட்டுப் பார்வையில் பளீரென வெளிச்சம் ஒன்று பாய்கிறது. அங்கே அரங்கனின் பிருமாண்ட பண்டைய கோவில் ஒன்று விழித் திரையெங்கும் தன்னை வியாபித்துக் கொண்டு வியப்பைத் தருகிறது. அந்நொடியின்தெய்வீக அதிர்வின் தாக்கத்தில் அரங்கனடிமை அடர் மானுட கூட்டத்தின் நத்தை நகர்விலும் கூட பேரக்குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு அரங்கனின் திருக்கோவில் நோக்கி அடியெடுத்து வைக்கிறான்.
அவனுக்கு இன்னும் ஆறுமாதங்கள் இருக்கிறது அரங்கனின் கோவிலுக்குள் தனது பாதம் பதிக்க. என்ன செய்வது. நெடிதுயர்ந்த கோபுரத்தின் முன் நிற்கிறான். திருவரங்கத்திலிருந்து அரங்கன் துரத்திவிட்டானென நினைத்து கோபமுடன் தன்னைக் குருடாக்கிக் கொண்டவன் அவன். பிறகு தனது பஞ்சடைந்த கண்களின் பார்வையைச் சுருட்டி பரணில் எறிந்தவன். அந்த பிரிய மறுக்கும் மானுட இமைகளை தெய்வீக வெளிச்சம் பாய்ச்சும் அரங்கனின் கரமொன்று மெல்ல பிரித்து இருண்மையிலிருந்து வெளிக்கொணர பிரயத்தனம் செய்வது அரங்கனின் செயல் அன்றி வேறென்ன?
அக்கோவில் திருப்பாண்டகம் எனும் அரங்கனின் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்று எனப் புரியும் போது தன் இமைகளை நன்றாகத் திறந்து பார்வையை வெளிச்ச வண்ண கோபுரத்தின் மேல் பதிக்கிறான். வாசலில் நின்றிருந்தாலும் கர்ப்ப கிரஹத்தின் 25 அடி உயர பாண்டவ தூதப் பெருமாளின் திருஉருவம் அவனின் இருண்ட மனக் கண்ணில் எழுகிறது. பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு விஸ்வரூபம் காட்டிய அரங்கனின் இருத்தலிய நிஜம் யுகங்கள் தாண்டியும் இன்னமும் உயிர்த்திருக்கும் இடம் அதுவெனப் புரிகிறது..
ஓங்கிக் குரலெடுத்துப் பாடுகிறான்..
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
கோவிலில் இருந்து வெளியில் வருகிறார் பட்டர்.
ஏன் அங்கயே நின்னுண்டு இருக்கேள் உள்ளே வாங்கோ எனச் சொல்கிறார்.
இருண்மையிலிருந்து வெளிக்கொணரும் அரங்கனின் குரலாகத்தான் உங்கள் அழைப்பு இருக்கிறது. ஆனால் இந்தத் திருதராஷ்டிரன் அரங்கன் தருவதாகச் சொன்னப் பார்வையை யுகம் யுகமாய் மறுதலித்து இன்னும் குருடனாகவே இருக்க விரும்புகிறான். இன்னும் ஆறுமாதம் காத்திருங்கள்.. பார்வையுடன் வருகிறேன் என்றவனை சற்று கலவரப்பார்வையுடன் பார்க்கிறார் பட்டர். இரண்டடி பின் நகர்ந்து வேகமாக மீண்டும் கோவிலுக்குள் சென்றுவிடுகிறார்.
அரங்கன் தன் இருத்தலிய நிஜத்தை வெளிக்காட்டிய தெய்வீக நிகழ்வின் வெடித்துக் கிளம்பிய வெளிச்சம் இந்த அரங்கனடிமையின் பார்வையை இப்போது பறித்துக்கொண்டு கோபுரமெங்கும் நிறைந்து மின்னத் தொடங்குகிறது. மானுட இருண்மையைப் போக்கும் வெளிச்சக் கருவி அரங்கனின் கையில் இருப்பது புரிகையில் மானுடம் தன் மீதான வெளிச்சத்தைத் துறப்பது தான் தெய்வீக வாழ்வியலின் முதிர்வு. சரிதானே...சொல்லுங்கள்..
திருப்பாண்டக பாண்டவதூதப் பெருமாள் திருவடிகளே சரணம்.
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
ராகவபிரியன்
No comments:
Post a Comment