கச்சி வரதனும் காலப்பனவனும்..2
தெய்வீகவியல் எது என்பதன் கேள்வி அறிவுசார் அலகென உலவிக்கொண்டிருக்கிறது. இறையியல் வேறா இல்லை தெய்வீக இயலும் இறையியலும் ஒன்றுதானா? இக்கேள்வியுடனேயே இன்றைய கோவில் பயணிப்போர் புனித பயணங்களை மேற்கொள்கின்றனர். இறையியலில் சுற்றுலா இன்பங்களைத் துய்க்க அனுமதி உள்ளதா எனும் மருட்கையை புறந்தள்ளவியலவில்லை. நிகழின் தெய்வீக இயல் காலப்பரிணாம வளர்ச்சியில் சில உடன்பாட்டு நேர்செய்கைகளின் சமரசத்தை உள்வாங்கியுள்ளதை மறுதளித்தல் கடினம்..
தெய்வதரிசனம், கோயில் செல்வது, நேர்த்திக் கடன் நிறைவேற்றல், திருப்பணிக்கு உதவுதல், குருவென ஒருவரை வரித்து கொண்டு வாழ்வின் அன்றாடங்களை அவர்கள் வகுத்தளித்த வகையில் வாழ்வது மற்றும் இன்னபிறவும் தெய்வீக இயலில் உள்ளடக்குதல் சாத்தியப்படுமா எனும் ஐயம் எழாமலும் இல்லை.. இப்படியான மரபுவழி தொன்மங்களின் அறுதி உண்மைகளை கட்டுடைத்து எங்கிருந்தாலும் மனதில் தெய்வத்தை நினைத்து எவ்வுயிர்க்கும் தீங்கின்றி வாழ்வதாக பறைசாற்றுவது அல்லது பாவிப்பது தெய்வீகவியல் நிகழ் கால துன்பவியல் சூழ் நிறுவனமயமானதைச் சொல்வதாகவே தோன்றுகிறது..
இறையியல் என்பது தெய்வீகவியலைக் கட்டுடைத்து மறுசீரமைப்புச் செய்யும் நெகிழ் தன்மையைக் கொண்டிருக்கிறதா என்பதும் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.. இறையியலில் கடவுள் எங்கும் இருக்கிறார் எனும் கோட்பாடு பரவலாக தெய்வ நம்பிக்கையுள்ள நிகழ்கால மாந்தர்களால் சான்றளிக்க கடினமாக இருப்பதைக் காணமுடிகிறது.. கடவுள் எங்கும் இருக்கிறார் எனும் இறையியல் தத்துவம் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தால் கயிலை யாத்திரைகளும் பழனிக்கான காவடி சுமந்து நடையாத்திரை செல்வதும் அறுபது மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் அரங்கனை தரிசிப்பதும் முக்தி நாத் கேதார் நாத் மற்றும் கங்கை ராமேஸ்வர பயணங்களும் தேவையற்றவையென நாத்திகம் உரத்துக் கூவத் தொடங்கும் தானே.. இவைகளை இந்த கூரிய நாத்திகத்தின் கத்தி வீசுதலை எப்படி ஆன்மீகக் கேடயம் கொண்டு தடுப்பதெனும் கலையொன்றையும் இறையியல் மற்றும் தெய்வீகவியலில் இணைத்தாக வேண்டும்..
பின்நவீனத்தில் எதிர்மறை இறையியல் ஒன்றை அறிவு சார் தெய்வீகவியற் ஆய்வாளர்கள் கொஞ்சமும் கூச்சமின்றி முன் வைக்கிறார்கள்.. இத்தருணத்தின் இறை நம்பிக்கையின் மேல் கொரில்லா தாக்குதல் நிகழ்த்தப்படுவதை எப்படித் தடுப்பது எனும் கேள்வி ஆதி இறைப்பற்றாளர்களை தவம் செய்ய ஆரண்யம் புக வைத்திருக்க வேண்டும்.. அறிவு என்பதும் ஞானம் என்பதும் இருவேறு நிலைப்பாடுகள் எனும் ஏற்பிசை இணக்கம் கொள்வதும் இலகுவானதல்ல.. அறிவு நிறை ஆதிமுனிபுங்கவர்களான வியாசர் பராசரர் போன்றோர் அறிவின் எல்லையைத் தொட்டபின்னும் ஏன் தெய்வீக மெய்ஞானமடைய காடேகி தவம் மெற்கொண்டார்கள் என்பது இறையியல் புதிர்.
இப்படியான படிப்பறிவு பட்டறிவு இறையறிவு தெய்வீகவியலின் முழுமை அனைத்தையும் அடைந்தும் மெய்ஞானம் பெற தொடர்ந்து முயன்று கொண்டே இருந்த ஆதிமுனிபுங்கவர்களே அரங்கனைத் துதிக்க அரங்கனைக் காண சக்தியற்றவர்களாக இருந்ததை நம் மரபுசார் இதிகாச இலக்கியங்கள் தற்சூழலில் மின்னணுவியற் பக்கங்களில் கூட பதியவைத்துக்கொண்டுதான் இருக்கின்றன..
இன்னமும் இறையியலுக்கும் தெய்வீகவியலுக்கும் இருக்கும் நுணுக்கமான இடைவெளிகளையொ இல்லை போதாமைகளையோ அறியாதவன் இவன். அதுமட்டுமல்ல ஏனைய கடவுள்சார் சடங்குகளையோ வாழ்வின் நெறியையோ அறியாதவனும் கூட இந்த அறிவிலி.. அப்படியான என்னை நீ ஏன் காஞ்சிக்கு வரவழைத்தாய் என சதா வினவின் பனுவல்களை கிறுக்குத் தனமான உன் முன் அர்ச்சனைப் பூக்களென கூரிய ஆன்மீக முட்களை உன் பாதங்களின் மேல் கனமாக வீசிக்கொண்டிருப்பவன் இவன்..
இப்படியான ஒரு வினவின் பனுவலுக்கு விடையளிக்கும் வகையில் அரங்கா நீ இந்த உன் அடிமையை எதிர்பாராத ஒரு தெய்வீக நாளில் சின்னக் காஞ்சியின் அத்தகிரிக்கு வரவழைத்தாய். அங்கே இந்த ஆச்சாரியரின் அதி உன்னதமான சம்ஸ்கிருத பிராகிருத சொற்கள் சூழ்ந்த ஸ்லோகத்தை இவ்வெளியவனுக்குக் காட்டித் தருகிறாய்.. இது இறையியலின் அற்புதமா இல்லை தெய்வீகவியலின் கூறடக்கமா.. புரியவில்லை.. அந்த ஸ்லோகத்தை கீழே தருகிறேன்..
யஸ்யானுபாவ மதிகந்து மசக்னுவந்த:
முஹ்யந்த் யபங்குர தியோ முனி ஸார்வபெளமா:
தஸ்யைவ தே ஸ்துதிஷூ ஸாஹஸ மஸ்னுவாந:
க்ஷந்தவ்ய ஏஷ பவதா கரி சைல நாத!!
ஆச்சார்யன் இப்படிப் பேசுகிறார்.. அரங்கனே மெய்யறிவும் மெய் ஞானமும் பெற்ற ஆதிமுனிபுங்கவர்களே உன்னைத் துதிக்க தடுமாறுகின்றனர். நீ இறையியல் தெய்வீகவியல் மற்றும் இன்னபிற இறைத் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட நிஜம் என்பதைக் கூட அறியாத நான் உன்னை தரிசிக்க முற்படுவது எவ்வளவு அறிவீனமான செயல்.. தரிசித்தது மட்டுமல்ல உன்னிடம் சில கேள்விகளையும் முன் வைக்கும் துணிச்சலை வேறு செய்து காட்டுவது எத்தனை மடமை.. ஆதாலால் இம்முட்டாளை மன்னித்தருள்வாய்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்
Comments
Post a Comment