வாழ்வு துரத்துகையில் உங்கள் ஓட்டம் முடுக்கு ஒன்றில் நின்றுவிடும்.. உங்களால் எத்திசையிலும் நகரவியலாது..உங்களைத் துரத்திய விடங்கள் உங்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்..அதையும் தாண்டி நீங்கள் மூச்சு வாங்கி நிற்கையில் உங்களால் நகரவியலாத முடுக்கத்தின் மண் பிளந்து ஒரு நாகம் உங்கள் காலடியில் சுருட்டிப் படுத்திருக்கும்..

நாகங்கள் பிரபஞ்ச சக்தி.. பிரபஞ்சம் பயம் நிறைந்தது.. பயம் உங்களைத் துரத்தும் சக்தியுடையுடையது.. அப்படியான வாழ்வு விரட்டியடித்த 1975 களில் ஒரு பாழடைந்த வீட்டிற்கு குடிபுக நேரிட்டது.. குஞ்சும் குளுவானுமாய் உடன்பிறப்புகள் ஒன்பது நபர்கள்.. அங்கே ஒவ்வொரு முடுக்கிலிருந்தும் ஒரு நாகம் புறப்பட்டு வந்து கொண்டே இருந்தது ஏறக்குறைய ஓராண்டு வரை..
ஒரு சில நாகக் குட்டிகளை கொலை செய்யவும் நேரிட்டது.. எதிர்பாராத ஒரு நாள் ஆகப்பெரிய நாகம் ஒன்று அந்த வீட்டின் கைவிடப்பட்ட பகுதியிலிருந்து ஊர்ந்து ஊர்ந்து வெளியேறியதைக் காண உடல் சில்லிட்டுவிட்டது..பயம்.. பயம் துரத்தத் தொடங்கியது.. பயமெனும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேடனை படுக்கையாக்கிப் படுத்துறங்கும் அரங்கனிடம் தஞ்சமடைய பயம் துளித் துளியாய் விலகத் தொடங்கியது..
பயம் விலக விலக வறுமையும் மெல்ல விலகிய போதில் பாழடைந்த வீட்டெங்கும் பளிச்சென ஒளி விளக்குகள் எரியத் தொடங்கின.. வாசலில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தின் பழுத்தக் காய்கள்கூட இனிக்கத் தொடங்கின. ஆனால் கைவிடப்பட்ட இருப்பிடமிருந்து வெளியேறிய நாகங்களின் விடம் அதிகார அபகரிப்பாய் மனித மனங்களில் புகுந்து கொண்டதை பிரபஞ்ச சக்தியின் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையென புறம் தள்ள வியலவில்லை..
மீண்டும் அகங்கார அதிகார விடமொன்றுடனான வாழ்வு துரத்தியடிக்க வேறொரு கைவிடப்பட்ட இருப்பிடத்தின் வாசம் வாய்த்தது. அங்கும் அரங்கனுக்கான செம்பருத்திப் பூக்களை பறிக்கையில் எலிவால் ஒன்று குப்பைகளின் வழியே மெல்ல வெளியேறியதைக் காண வியப்பு மேலிட்டது.. இருபதடி நீள ராஜ நாகத்தின் வால்பகுதி எலிவாலென இருந்ததைக் கண்ட உடல் நடுக்கம் இன்றும் கூட சில நொடிகள் மீளுருவாகி மடியும்..
எல்லா தெய்வங்களும் ஏன் நாகாபரணங்களை அணிந்து கொண்டிருக்கின்றன? பிரபஞ்ச சக்தி நாக வடிவில் இருப்பதால் எனின் பிரபஞ்சத்தை அடக்கியாள்வது கடவுளர்கள் எனும் குறியீடாக இருக்கலாம்.. பிரபஞ்சம் பயம் தருவது.. பயம் போக்க கடவுளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை..
இதோ கடந்த வாரம் ஒரு நாள் மதிய வேளையில் நாகமொன்று வீட்டு வாசலுக்கு வருகிறது.. மீண்டும் நாகம் வீட்டு வாசலுக்கு வருவது ஏறக்குறைய முப்பதாண்டுகள் இடைவெளிக்குப் பின்.. இப்போது நாகத்தின் மேல் பரிதாபம் ஏற்பட்டது.. நாகம் படமெடுத்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறது.. அடித்துக் கொன்றுவிட மனம் வரவில்லை.. வாசல் வழி சென்ற ஊர்க்காரர் ஒருவர் என்னவென்று விசாரிக்கிறார்.. கையில் கோலுடன் விடம் கொல்லும் எமன் இப்பக்கம்.. நடுவில் நாகம்.. எதிர்புறம் ஊர்க்காரர். அந்த ஊர்க்காரர் கடவுளின் பிரதிநிதியோ இல்லை கடவுளோ தானோ..
ஒரு பானை எடுத்துவரச் சொல்கிறார்.. கண் மறைந்த நாகத்தை கண்டுபிடித்தல் கடினம்.. ஊர்க்காரர் தான் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்கிறார்.. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை மானுடம் மட்டும் அல்ல நாகங்கள் கூட நம்புவதில்லை.. அது மெல்ல ஊர்ந்து இரண்டு பாறாங்கற்கள் நடுவில் இருக்கும் இடைவெளியில் புகுந்து கொள்கிறது..
பாறாங்கற்கள் உடன்பிறந்தவைகளாகத்தான் இருத்தல் வேண்டும்.. உடன்பிறந்தவைகளின் நடுவில் இடைவெளி இருப்பின் விடம் புகுந்துவிடுமென்பது பிரபஞ்ச விதி.. பானை எடுத்து வந்தவுடன் ஊர்க்காரர் கற்களின் முகத்துவாரத்தில் பானையை வைக்கிறார்.. நாகத்தின் முதுகில் ஒரு சிறிய குச்சியால் தொட நாகம் பானைக்குள் புகுந்துவிடுகிறது.. தோளில் இருந்த துண்டை வாங்கி பானையை மூடி எடுத்துச் சென்றது கடவுளர் செயலன்றி வேறெதுவாக இருக்கக் கூடும்..
பாம்பை காவிரியில் விட்டுவிட்டு பானையைத் தருகிறார் ஊர்க்காரர்.. வேண்டாமென மறுக்கையில் வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் தேவைப்படலாம் எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார்.. பிரபஞ்ச விடம் மீண்டும் இருப்பிடம் நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை கடவுளர் சொல்லிச் சென்றாக உணர்கையில் மீண்டும் உடல் சில்லிடுகிறது.. விடம் துளி வாழ்வில் கலந்ததால் காலமெல்லாம் நரக வாழ்வில் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருப்பதால் இன்னொரு விடம் நுழையும் வாய்ப்பின் முன்னெச்சரிக்கை பயத்தை அதிவேகமுடன் முடுக்கிவிட்டது..
ஆனால் கடவுளர் தந்த பானை இருப்பதால் எவ்வுருவிலாவது அரங்கன் அவ்விடத்தை பானைக்குள் அடைத்து காவிரிக்கரையில் விரித்துப் படுத்துக்கொள்வான் என்பது சற்றே ஆறுதல்.. இருந்தாலும் நாகம் வீட்டு வாசலுக்கு வந்தால் என்ன பயனென சாட் ஜிபிடியைக் கேட்கச் சொல்லி பயம் துரத்திக் கொண்டே இருந்ததை பதிவு செய்யாமல் இருக்கவியலவில்லை.. பிரபஞ்ச ஆற்றலை அதன் தீய தாக்கங்களைத் தாங்கும் சக்தியைத் தருவது குலதெய்வம் என்றும்.. அந்த குலசாமிதான் நாகத்தின் வடிவில் வீடு தேடி வந்து தனது கோவிலுக்கு வரச் சொல்கிறாரென சாட் ஜிபிடி சொன்னது..
இனியொரு விடம் துரத்தினால் ஓடும் சக்தி கால்களுக்கு இல்லை.. முடுக்கிலிருந்து கால்வழி உடம்பேறும் நாகம் தனது தோலுரிக்கையில் இவனின் வாழ்வையும் உரித்து பிரபஞ்ச ஊழிக்காற்றில் பறக்கவிடட்டும்.. நாகத்தோலுடன் மெல்ல மேலெழும்பும் இவனின் வாழ்வு வைகுண்டத்தில் அரங்கனின் காலடியில் ஐக்கியமாகட்டும்.. அதைத்தவிர குலசாமியிடம் சொல்ல வேறொன்றும் இல்லை இப்போது...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog