மனம் என்பதொரு விசித்திர சிருஷ்ட்டியை அரங்கன் மனிதனுக்கு மட்டும் கொடுத்திருக்கிறானா எனத் தெரியவில்லை. மனதில் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டே நிகழ்வது இந்த எளியவனுக்கு மட்டும் தானா எனப் புரியவுமில்லை. பயம் என்ற வார்த்தையின் உண்மைப் பொருளைக்கூட உணராதவன் இவன்..
எதிரில் சிங்கம் ஒன்று சட் டென பாய்ந்து வருகையில் பயம் கொள்ள மாட்டாயா எனக் கேட்கலாம்.. அது எல்லா மானுட இதயங்களுக்குள்ளும் உருவாகும் யதார்த்த சஞ்சலமென ப்ராய்ட் கூறுகிறார்.. நமது சுய ஆளுமைக்குள் அடக்கிவிட இயலாத சில ஆசைகள் பொதுவெளியில் தானாகவே வெளியேறி காட்டிக்கொடுத்துவிடுமோ எனும் பயம் நரம்புத் தளர்ச்சி சஞ்சலமெனவும் ப்ராய்டிய கூற்று ஒன்று பதிவு செய்கிறது..சமூக அல்லது குடும்ப ஒழுக்க விதிகளை மீறி நாம் ஏதோ செய்கிறோமெனும் குற்ற உணர்வான நெறிமுறை சஞ்சலமும் இல்லாத ஏதோ ஒரு அழுத்தம் கடந்த சில நாட்களாக இவனை ஆட்கொண்டிருக்கிறது..
மேலே சொல்லப்பட்ட ப்ராய்டிய சஞ்சலங்களையெல்லாம் கடந்து வந்துவிட்டதும் புரிந்தது. பிறகும் ஏன் மனம் அல்லாடிக் கொண்டிருக்கிறதென புரியவில்லை.. காஞ்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஓராண்டாக காமாட்சியின் திருக்கோவிலை அவ்வப்போது வெளியிலிருந்து சுற்றுவதைத் தவிர வேறு மனசஞ்சல தீர்வுகள் இவனுக்குக் கிட்டவில்லை.
ஓராண்டு எக்கோவிலும் புகுவதில்லையெனும் சுயச் சிறையில் கால்களை இரும்புச் சங்கிலியால் கட்டியிருந்த காலம் துருவேறி உதிர்ந்து போனதால் காமாட்சியை தரிசிக்க மனம் தானாகவே உந்தித் தள்ளியது.. இருந்தும் காமாட்சியை நேரில் தரிசிக்க மனம் ஒப்பவில்லை...
ஆதிசங்கரர் காஞ்சியில் ஆதிமுதல் பார்வையில் அன்னையைப் பார்க்கிறார்.. அவளின் உக்கிர வடிவம் அவருக்கு சஞ்சலத்தை உண்டு பண்ணுகிறது.. முற்றும் துறந்த துறவி மனமே பயமெனும் சஞ்சலத்திற்கு உள்ளாகும் ஆக்ரோஷ உக்கிரம் அது... அப்படியாயின் சாமான்ய மானுட மனங்கள் ஒரு நொடியில் பற்றி எரிந்து சாம்பலாகிவிடுமே எனும் எண்ணம் உதித்தது.. ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டைச் செய்து அன்னை காமாட்சியை சாந்தப்படுத்தியிருப்பதையும் மனம் சொல்லியது..
இருப்பினும் அன்னையிடம் கோபித்துக் கொண்டு இந்த எளியவன் ஏதாவது தகாத செயல்களை அன்னையின் முன் செய்துவிடுவானோ எனும் நெறிமுறை சஞ்சலம் ஆன்மீக பயம் தந்ததை மறுக்கவும் இயலவில்லை.. உடனே குனிந்து சுயமாகக் கோர்த்த சங்கிலியை கால்களுக்கு மீண்டும் பிணைத்துக்கொள்ள நேர்ந்தது..
இனி திசை தெரிந்தால் தான் பிணையவிழும்.. உடனே இந்த எளியவனின் ஆன்மீக குரு மஹாபெரியவரை மனதிற்குள் வரவழைத்தான் .. சஞ்சலத்தால் தடுமாறிய மனதை நேர்வழியில் செலுத்தும் காத்திரமான ஆலோசனைகளை ஜகத்குருவான மஹான் சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருவ வடிவில் இவனுக்கும் உபதேசிப்பார். அந்த ஜகத் குரு அருவ வடிவில் இவன் முன் தீவிர பிரயத்தன வேண்டுதல்களுக்குப் பின் தோன்றுகிறார்..
இந்த எளியவனை வாஞ்சையுடன் நோக்குகிறார்.. நோக்கக் குழைகிறது அணிச்ச இதயம்.. ஆன்மீக தீர்க்க ஜகத்குருவின் பார்வையல்லவா இது.. அப்படியே தலை குனிந்திருக்கிறான்.. அவர் சொல்கிறார்.. நீ உன் கடமைகளை அனைவருக்கும் உன்னளவில் எவ்வித குறையுமின்றி நிறைவேற்றியிருப்பதை அன்னையும் உன் அரங்கனும் அறிவார்கள்.. அன்னையின் உக்கிரம் பற்றிய பயம் உன்போன்றவர்களுக்குத் தேவையற்றது.. ஒவ்வொரு மானுட உடலையும் அதில் உறையும் ஆன்மாவையும் எவ்வித உறவுமின்றி பிரித்துப் பார்.. உன் முடிவாலோ இல்லை உன் செயல்களினாலோ அத்துன்பங்கள் அவர்களுக்கு இல்லை என்பதை அறி.. அவரவரின் கர்ம வினைப் பயனை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும்.. அன்னையைக் காண உடனே புறப்பட்டு வா.. நீ இப்போது அருகில் வந்துவிட்டாய்.. இன்னும் நடக்கும் தூரம் தான் உனக்கு..
குருவின் வார்த்தைகள் புரியவில்லை.. அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொல்கிறார்...
புரியவில்லையே குருதேவா எனச் சொல்கிறான் இவன்.. இது செளந்தர்ய லஹரியின் பதினோராவது ஸ்லோகம்.. எனச் சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார்...
உடனே கணிணியைத் திறந்து ஆதிசங்கரரின் செளந்தர்ய லஹரியின் பதினோராவது ஸ்லோகத்தைத் தரவிறக்குகிறான்..
சதுர்பி: ஶ்ரீகண்டை: ஶிவயுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: ஶம்போர்னவபிரபி மூலப்ரக்ருதிபி: ।
சதுஶ்சத்வாரிம்ஶத்வஸுதலகலாஶ்ரத்ரிவலய- [த்ரயஶ்சத்வாரி]
த்ரிரேகாபி: ஸார்தம் தவ ஶரணகோணா: பரிணதா: ॥ 11 ॥ [சரணகோணா:, ப⁴வனகிணா:]
இதன் பொருள்.. சிவனின் நான்கு மேல்நோக்கிய முக்கோணங்களும், சக்தியின் ஐந்து கீழ்நோக்கிய முக்கோணங்களும் இணைந்து ஒன்பது மூலப் பிரகிருதிகளை உருவாக்குகின்றன. இவற்றுடன் எட்டு இதழ்கள், பதினாறு இதழ்கள், மூன்று வட்டங்கள் மற்றும் மூன்று கோடுகள் (திரிவலய த்ரிரேகா) சேர்ந்து நாற்பத்து நான்கு கோணங்களாக (Corners/Triangles) தேவியின் இருப்பிடமான ஸ்ரீ சக்கரமாகப் பரிணமிக்கின்றன. அதாவது, பிரபஞ்சத்தின் ஆதி வடிவமும் இயக்கமும் சிவசக்தி ஐக்கியமான ஸ்ரீ சக்கரம் மூலமாகத் தேவியின் திருமேனியில் அடங்கியுள்ளது என்பதை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.
இருந்தும் நெறிமுறைச் சஞ்சலத்தின் தீவிர தாக்குதல்களால் இன்னொரு நாள் குடும்பத்துடன் அன்னையைக் கண்டு வரலாமென குமரகோட்டம் கோவிலின் உள் புகுகிறான்.. இந்தக் கோவிலுக்குள் இவன் புகுவதும் இதுதான் முதல் முறை.. கந்தனை தரிசித்து பிரகாரம் சுற்றுகிறான்.. பிரகாரத்தின் அருகில் இது என்ன இங்கொரு காளி கோவில் இருக்கிறதே என மனம் சொல்கிறது.. ப்ராய்டிய நெறிமுறைச் சஞ்சலங்கள் கொண்ட மனம் அடக்குமுறைக்கு உள்ளாகிறது. அடக்கு முறையால் கட்டுண்டவன் தீர்க்கமாக பார்க்கும் சக்தியை இழக்கிறான்.. சுற்றி வருகிறான்.. பிறகு குமரகோட்ட பின் கோபுர வாயில் திறந்திருக்கிறது.. அதில் புகுந்து வெளிவர தெப்பக்குளம் வற்றிக் கிடக்கிறது.. எதிரே அன்னை காமாட்சியின் நெடிதுயர்ந்த கோபுரம்.. அதனருகில் தான் திருக்கள்வ அரங்கன் இருக்கிறான் என மனம் சொல்ல...மீண்டும் அரங்கன் மீதான கோபம் இரு இலைகளை மனமண் பிளந்து வெளித்தள்ளுகிறது..
முகத்தைத் திருப்பிக்கொண்டு அந்த காளி கோவில் என நினைத்த கோவில் வாசலுக்கு வருகிறான்.. ஒரு செல்பி எடுக்கிறான்.. இரண்டு சிறுவர்கள் பிராமண சிறுவர்கள் துண்டணிந்து பூணுல் அசைந்தாடும் மார்புடன் அத்துனை வெகுளியாய் அந்தக் கோவிலில் இருந்து வெளிவருகிறார்கள்.. இவன் கேட்கிறான்.. தம்பி இது என்ன கோவில்.. என..
தாத்தா.. இது ஆதி காமாட்சி கோவில்.. உங்களுக்குத் தெரியாதா.. இந்த அன்னையிடம் தசரதன் வேண்டிக்கொண்டதால் தான் ராமலெட்சுமணர்கள் பிறந்தார்கள் என எங்கள் பாடசாலை வாத்யார் சொல்லியிருக்கிறார்..
சொல்லிவிட்டு குமரகோட்டத்திற்குள் கடுகி காற்றென மறைந்துவிடுகிறார்கள்.. உடனே ஜகத்குரு மஹாபெரியவர் அருளிச் செய்த காமாட்சி ஸ்தோத்திரம் உதட்டிலிருந்து மேலதிக சப்தமுடன் வெளிப்படுகிறது...
மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி க்ருபாகர வதனே குங்கும வர்ணிணி காமாக்ஷி
ஜய ஜய காமாக்ஷி ஜய ஜய காமாக்ஷி
ஜய ஜய காமாக்ஷி ஜய ஜய காமாக்ஷி
பத்ம நயனி பத்ம விமல வதனே பத்ம விபூஷிணி காமாக்ஷி
பக்த ஜனப்ரிய பவ பய ஹரணி பாவன ரூபிணி காமாக்ஷி
திரிபுர சுந்தரி திவ்ய ஸ்வரூபிணி தபஸ்வினி காமாக்ஷி
த்ரிசூல தாரிணி துக்ஹ விநாசினி தர்ம ஸ்வரூபிணி காமாக்ஷி
சங்கு சக்ர தாரிணி சாந்த ஸ்வரூபிணி சங்கரி காமாக்ஷி
சகல லோக ஜனி சத்ய ஸ்வரூபிணி சர்வ மங்கள காமாக்ஷி
என இவன் தன்னறியாமல் இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி தாளம் தட்டியபடி கோவிலுக்குள் நுழைகிறான்..
அன்னை ஏகாந்த தபஸ்வினியாய் கண்ணை மூடி அமர்ந்திருக்கிறாள்.. அன்னையின் சாந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.. அங்கிருந்த தட்டிலிருந்து ஒரு சிவப்பு புட்பத்தையும் குங்குமத்தையும் எடுத்துக் கொள்கிறான்..
மனம் சர்வ அமைதியடைந்ததை உணர்கிறான்.. இனி அமைதியும் அரிய முக்தியும் கிட்டும் எனும் உத்தரவாதத்தை அன்னை தந்தாக உணர்கிறான்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
அன்னை காமாட்சி திருப்பாதங்களே சரணம்..
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர...
ராகவபிரியன்
Comments
Post a Comment