நடுப்பகல் நகரப்பேரூர்ந்துகள் இப்போது அருகிவிட்டன.. முப்பது நிமிடங்கள் வரையாவது காத்திருக்க வேண்டியதாகிறது.. கிராம பேரூர்ந்து நிலையத்தில் அல்லது நிறுத்தத்தில் காத்திருத்தல் என்பது முன்னொரு காலத்தில் மளிகை கடையில் ரோக்கா கொடுத்துவிட்டு பொருட்களுக்காக காத்திருக்கும் அவதையை விடக் கொடியது..
காவிரிக் கரையோர பஸ் நிறுத்தத்தில் சில நேரங்களில் ஆடைகளைத் தொற்றிக்கொண்டு மரவட்டைகள் மெல்ல மேலேறி வரும்.. ஒரு மானுட உடலின் உச்சிவரை ஒரு முறையாவது ஊர்ந்தேறி விடவேண்டுமெனும் ஊக்கம் கொண்ட ஒரு ரயில் பூச்சியை தட்டி விட தலை குனியும் நொடிப்போதில் மகளிர் மட்டும் பேரூர்ந்து வந்து நிற்கும்.. உங்களுக்கான பேரூர்ந்து விதிக்கப்பட்டிருக்க வேண்டும்..
அப்படியான உட்கார இடம் இருக்கும் நெரிசலற்ற பேரூர்ந்து வரும் வரை காத்திருப்பேன் என்பது பயண மடமை. எப்படியாவது அடித்துப் பிடித்து உள் நுழைந்து மேல் கம்பியையோ இல்லை சீட்டின் கைபிடி எவர்சில்வர் குழாயையோ பிடித்துக் கொண்டு பயணிக்கையில் நகரப் பேரூர்ந்தும் பயண நகர்வும் அருவ நெம்பு கோலால் உந்தப்பட வேண்டும்.. அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தால் நீங்கள் முன் ஜென்மத்தில் புண்ணியம் நிறைய செய்திருக் கிறீர்களென உணர்ந்து கொள்ளலாம்.. ஆனால் பெரும்பாலும் சேரிடம் வரை உட்கார இடம் கிடைக்காவிட்டால் முன் ஜென்ம சாதா பாவங்கள் காரணமென்றும்... ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணத்தில் அடுத்தடுத்த நிறுத்தங்களில் மேலதிக கூட்டம் உள் ஏறி நெருக்குகையில் முன் ஜென்ம மாபாதக பாவங்களே காரணமெனவும் காவிரிக் கரையில் மூக்கு கழுவி பேருந்த நிறுத்தப் புளியமரத்தில் அமர்ந்து கத்தும் கருநிற பட்சி சாஸ்திரத்தில் சொல்லியிருக்கக்கூடலாம்...
நடத்துனர் பெண்களுக்கு காசு வாங்காமல் டிக்கெட் கொடுத்தும் ஆண்களிடம் காசு வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுப்பதையும் ரெளத்திரம் பழகியவர்கள் சகித்துக் கொள்ள வேண்டும்.. ஆணினத்தை இழிவு செய்யும் அரசாங்க மடமையைக் கொளுத்துவோம் என யாராவது அதீத ரெளத்திர பழக்கத்தால் முணுமுணுக்க நேர்ந்தால் அடுத்த நிறுத்தத்தில் பேரூர்ந்திலிருந்து இறக்கிவிடப்படும் அபாயமும் இருக்கிறது..
படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் சாகச விளையாட்டை நம் மாணவ மணிகளின் கலாச்சார நீட்சியை இம்மண்ணிலிருந்தும் நகரப் பேரூர்ந்துகளில் இருந்தும் முற்றிலும் அழிக்க தானியங்கிக் கதவுகளை பொருத்திய பின் நவீன காலத்தின் கயமையை அமல்படுத்திய அதற்கு காரணமானவர்களை ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா ஒரு போதும் மன்னிக்காது...
ஆகையால் பின் இருக்கை உயரத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கை காலியாக இருந்தால் ஓசி லிப்ட் கேட்டு அதில் பயணித்தால் இச்சென்ம புண்ணிய பலனை உடனே ஜிபே மூலம் உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்...
ராகவபிரியன் தேஜஸ்வி..
Comments
Post a Comment