மாஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதை..1..

.தூக்கு வாளி கூழ்
நானும் நண்பன் சந்துருவும் பாத்திரக் கடைக்குச் சென்றோம்.. அது ஏழைகளுக்கான பாத்திரக் கடை அல்ல..அவன் தன் குழந்தைக்கு மதிய உணவுக்கு பள்ளிக்குக் கொடுத்தனுப்ப ஒரு டிபன் பாக்ஸ் வாங்க வேண்டும்..அந்தக் கடையின் பாத்திரங்களில் எல்லாம் பலவகையான தின்பண்டங்கள் இனிப்பு கார வகைகள் நிரம்பி இருந்தன.. தேங்காய்சாதம் புளி சாதம் எலுமிச்சை சாதம் கறிகாய் கூட்டு வகைகள் சாம்பார் ரசம் மோர் எல்லாம் இருந்தன.. ஒரு மூலையில் சோறு சின்னக் குன்றென குவித்து வைக்கப்பட்டிருந்தது..
பாத்திரக் கடைக்குப் பதிலாக ஏதாவதொரு ஹோட்டலுக்கு கூட்டி வந்து விட்டாயா என்றேன்.. அவன் எல்லா பண்டங்களையும் பார்த்துக் கொண்டே வந்தான்.
கடை ஊழியர்கள் தங்கள் டிபன் பாக்ஸ்களை திறந்து எங்களிடம் காட்டினார்கள். எந்த பாக்ஸிலும் மதிய உணவு இல்லை..
அவர்களிடம் கேட்டேன்.. பள்ளிக் குழந்தை மதிய உணவு எடுத்துச் செல்ல ஒரு டிபன் பாக்ஸ் இந்தக் கடையில் கிடைக்காதா என.
என்னை பாத்திரக் கடைக்கு கூட்டிச் சென்றவனிடம் பாத்திரக் கடை முதலாளி கேட்டார்.. நீங்கள் பணக்காரரா இல்லை ஏழையா?
சந்துரு என்னை புரியாமல் பார்த்தான்..
நான்.. எதற்கு கேட்கிறீர்கள்? என்றேன்..
பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் மதிய உணவு கொடுத்தனுப்புவதில்லை.. ஏழைகளின் குழந்தைகளுக்கோ அரசுப் பள்ளியிலேயே மதிய உணவு கொடுத்து விடுவார்கள் என்றார்..
அப்போது ஒரு ஊழியர் எட்டடுக்கு கேரியரில் கொள்ளளவு வரை எல்ல உணவுகளையும் அடைத்து சந்துருவிடம் கொடுத்தார்..
ஊழியர் தான் எடுத்து வந்திருந்த காலி டிபன் பாக்ஸை என்னிடம் கொடுத்தார்..
இது என்ன கொடுமை என்று கேட்டேன்.. கடை முதலாளி சொன்னார்.. கொடிது கொடிது வறுமை கொடிது..
அவர் மதிய உணவிற்காக எடுத்து வந்திருந்த தூக்கு வாளியைத் திறந்து காட்டினார். அதில் கூழ் மேலில் கெட்டித் தட்டிய ஆடையுடன் பளபளப்புக் காட்டியது..
கடை ஊழியர்கள் அங்கிருந்த சாப்பாட்டை சாப்பிடத் தொடங்கினார்கள். சந்துரு அந்த டிபன் கேரியர் உணவுகளை கடை முதலாளியின் டேபிளில் வைத்து விட்டான்.
விருட்டென என் கையிலிருந்து காலி டிபன் பாக்ஸை பிடுங்கினான்.. குழந்தையின் பள்ளிக்கூடம் நோக்கி ஓடத் துவங்கினான்..
நான் கடை முதலாளியின் கூழ் இருக்கும் தூக்கு வாளியை எடுத்துக் கொண்டு அவன் பின்னால் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறேன்..
துளித் துளியாய் சிந்திய கூழ் நேப்பாள வெள்ளமென வழியில் எதிர்கொண்ட எல்லாவற்றையும் மூழ்கடிக்கத் தொடங்கியது..
ராகவபிரியன்

மாஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதை...2
உப்பு மூட்டை
கடற்காற்று மெல்லிய அலைகளை எழுப்பும் உப்பளத்தின் அருகில் தேனீர் கடை இருக்கிறது. அதன் கூரையில் கூட்டமாய் ஆலாக்கள் சிறகு கோதிக்கொண்டிருக்கின்றன..
உப்பளத்தின் எதிரில் இருக்கும் ரயில் நிலையத்தில் கூட்ஸ் வண்டி நிற்கிறது.. மூட்டைத் தூக்கும் தொழிலாளி தேனீர் அருந்த வருகிறான். தேனீர் கோப்பைகளுக்குள் கூட்ஸ் பெட்டிகளை தங்கள் அலகால் கொத்தி தூக்கி வந்து மிதக்க விடுகின்றன..ஆலாக்கள்.. தொழிலாளிக்கு வியர்வை..
கூட்ஸ் பெட்டிகளுக்குள் உப்பு மூட்டைகளை அடுக்க ஒவ்வொன்றாய் முதுகில் சுமக்கிறான் அவன்.. ஆனால் தேனீரில் மிதந்த பெட்டிகளில் இப்போது உப்பு மூட்டைகள் மிதக்கத் தொடங்கின.. இவனுக்குத் தாகம் எடுத்தது..
கூரையில் அமர்ந்து இறகு கோதும் ஆலாக்களின் மேல் மூட்டைகளை தூக்கி வீசி விரட்டினான்.. ஒரு குவளை தண்ணீரில் மீண்டும் கூட்ஸ் பெட்டிகளும் உப்பு மூட்டைகளும் மிதக்கத் தொடங்கின.. ஆலாக்கள் ஒவ்வொரு மூட்டையாய் கொத்தி வெளியில் அடுக்கின.. உப்புத் தின்றால் தண்ணீர் குடித்துத் தானே ஆகவேண்டும்..
தண்ணீர் குடிக்கக் குடிக்க தொழிலாளியின் முதுகெங்கும் உப்புப் பாத்திகள் உருக்கொண்டன.. புறப்படத் தயாரான கூட்ஸ் பெட்டிகளில் இருந்து கூட்டமாய் வெளியேறிய ஆலாகள் தொழிலாளியின் முதுகில் அமர்ந்து கொண்டன..
உப்பு மூட்டையை விட ஆலாகளைத் தான் அவனால் தூக்கிச் சுமக்கவியலவில்லை..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog