மேஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதை...4

ஆந்தையின் கூடு தேடும் அவதையும் தாஸ்தாவஸ்கியின் குற்றமும் தண்டனையும்..
---------------------------------------------------------------------------------------------------------------
நகரத்தின் நடுவே இருந்த அந்த மழைக்கால நூலகத்தின் புத்தக அலமாரிகளில் ஆந்தைகள் அமர்ந்திருந்தன. கதையின் நாயகன் ஒரு நடுத்தர வர்க்க பின்நவீனத்துவ எழுத்தாளன். அவனது வலது தோளில் எப்போதும் பறவைகள் கைவிட்ட ஒரு கூடு இருக்கும். புத்தக அலமாரியின் புத்தகங்களுக்கு நடுவில் ஆந்தைகளும் அமர்ந்திருந்தது அவனுக்கு வியப்பளிக்கவில்லை. பின் நவீனத்துவ எழுத்தாளன் என்பதால் அவன் பாரதியைப் பற்றி எழுதியது ஒரு ஆந்தையாக மாறி இந்த நூலகத்திற்குள் மழைக்காக ஒதுங்கியிருக்கிறது.
மெல்ல ஒவ்வொரு ஆந்தையையும் அதன் அருகில் இருந்த புத்தகத்தையும் பார்த்துக் கொண்டே வந்தான். நூலகத்தின் மூன்றாவது வரிசையில் எப்போதோ அவன் எழுதிய இருத்தலியல் துயரமும்... இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும்... என்ற புத்தகத்திற்கு அருகில் இருந்த ஆந்தை இவன் தோளில் இருந்த கூண்டிற்கு தாவ இயலுமா என தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்து. அப்போதுதான் அது நடந்தது.அவன் தோளில் இருந்த கூடு மழையில் நனைந்திருந்ததால் அதிலிருந்து மழைத்துளி வருவதற்குப் பதில் மை நீல நிறத்துளிகளாகச் சொட்ட அதிலிருந்து ஆந்தைக் குஞ்சொன்று உருவாகி இப்போது இவனின் கூடுக்குள் இங்குமங்கும் நடக்கத் தொடங்கியது... நூலக அலமாரியின் ஆந்தைகளுக்கு இது அதிர்ச்சியாகவே இல்லை... ஏனென்றால், பின்நவீனத்துவ இலக்கியங்களில் அதிர்ச்சியடைவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவன் மெதுவாக அந்த ஆந்தைக் குஞ்சின் இறகுகளை தடவினான். ஒரு சொற்றொடரைத் தடவுவது போல.. பிறகு சிறகில் ஒட்டியிருந்த சொற்களைத் துடைக்க முயன்றான். அப்பொழுதின் ஈர கணத்தின் சூழலிய அழுத்தம் கனத்ததால் ஆந்தைக் குஞ்சு விருட்டென சிறகடித்து அலமாரியின் மேலடுக்கில் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பின் அருகிலிருந்த இடைவெளியில் நுழைந்து கொண்டது..
நாற்றங்கால் இடைவெளிகளில் உணவின் தரவுகளையும்.. உடன் பிறப்புகளின் இடைவெளிகளில் வாழ்வியலின் தரவுகளையும் ஊர்களுக்கான இடைவெளியில் கலாச்சார மாற்றத்தின் தரவுகளையும் புரிந்து கொள்ளவியலும்.. ஆனால் நூலகத்தின் இரண்டு புத்தகங்களுக் கிடையேயான இடைவெளியில் ஆந்தை புகுந்தால் ஒரு தலைமுறையின் அறிவுத் தரவுகளின் பர்முடேசன் காம்பினேசன் கெட்டுவிடும். ஓங்கிக் குரலெடுத்து அந்த எழுத்தாளன் கத்தியே விட்டான்.. பிறகு பேரமைதி.. ஆந்தைகள் கண்களை சுழற்றும் சப்தம் கூட துல்லியமாக கேட்பதான அமைதி.. அடுத்த ஐந்தாவது நிமிடம், நூலகத்தின் அமைதியைக் குலைக்கும்படி ஒரு சத்தம் கேட்டது. புத்தக அலமாரியிலிருந்து ரஸ்கோல்நிகோவ் நிஜ மனிதனாக வெளியே குதித்தார்..
அவரது கையில் எழுத்தாணிக்குப் பதில் ஒரு கோடாரி இருந்தது.. கோடாரியில் ஆந்தை இறகுகளும் ஒன்றிரண்டு மழைக்காகத்தின் இறகுகளும் சிக்கி இருந்தன.. அவன் பயந்து விட்டான். பின் நவீனத்துவ இலக்கிய வாழ்வில் ஆந்தைகளுக்கும் அமேசானுக்கும் அவன் பயந்ததில்லை.. ஆனால் ரஸ்கோல் நிகோவின் கோடாரி எழுத்துக்களை பிளந்து ஒரு பின் நவீனத்துவ இலக்கியத்தை கட்டுடைத்துவிட்டால் என்ன செய்வதென பயந்தான்.. அந்த பயத்துடன் அடுத்த அலமாரி வரிசைக்குள் துரிதமாக நுழைந்தான்..
அங்கே காப்காவின் தி மெட்டமார்பஸிஸ் புத்தகத்திற்கும் டால்ஸ்டாயின் அன்னா கரேனினா புத்தகத்திற்கும் இடையில் அமர்ந்திருந்த ஆந்தை மழை விட்டுவிட்டதா என கண்ணை உருட்டி அதன் மொழியில் அலறியது..இது பாரதியைப் பற்றி இவன் எழுதிய எழுத்தாந்தையாகத்தான் இருத்தல் வேண்டும்.. அந்த பின் நவீன எழுத்தாளனின் காலி பறவைக் கூடிற்குள் எந்த ஆந்தையும் இடம் மாறத் தயங்கியதின் காரணம் இப்போது புரிந்தது.. ஆனால் எதுவும் புரியாமல் தோளில் இருந்த கூடை உள்ளங்கையில் வைத்து ஆராயத் தொடங்கினான்...
அவன் எப்போதோ எழுதிய மெளனங்களின் தீர்மானமும் பிராமண வெகுளித்தனக் குறியீடுகளும் எனும் கட்டுரைத் தொகுப்பின் சில பக்கங்களை ஏதோ ஒரு பறவை அலகால் கொத்தி எடுத்துவந்து அடித்தளமாய் அமைத்திருந்தது புரிந்தது.. அவன் கடகடவென சிரிக்கத் தொடங்கினான்.. இதுதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய நகைச்சுவை. பாரதி பிராமணன்..ஆனால் அவன் பூணூல் அணியவில்லை.. பின் நவீனத்துவ தமிழிலக்கியம் பிராமணீயத்தைத் தான் தாக்குகிறது... பிராமணர்களை அல்ல.. எனும் கூற்று இருக்கும் புத்தகம் ஒன்றைத் தேடத் தொடங்கினான்.. இடைவெளியில் இருந்து வந்த ஒரு ஆந்தை கொஞ்சம் நகர்ந்து இன்னொரு ஆந்தைக்கு இடம் தந்த அந்த நொடியில் ஒரு கூற்று விழுந்தது..
விழுந்தது கூற்று இல்லை கீற்று.. அதில் ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் தேவையில்லை என்ற திராவிட பழிச்சொல் ஒரு தென்னைமரத் தேளாக மாறி அந்தக் கீற்றிலிருந்து இவனின் காலில் கொடுக்குத் தூக்கி வலிந்து கொட்டியது.. சில வலிகள் சொற்களில் தெரியாது.. தேள் கொட்டிய வலியும் அப்படித்தான்..
போகட்டும்.. இப்போது ஆந்தைகள் ஒரே அலமாரியின் ஒரே தட்டில் அமர்ந்து கொள்ள... புத்தகங்களுக்கான இடைவெளிகள் குறுகத் தொடங்கின.. சுத்தானந்த பாரதியின் தலைமையில் இவன் கவிதை வாசித்திருக்கிறான். சுரதாவை இவனின் கல்லூரி விழா ஒன்றிலும்.. பிறகு அவரின் தமிழ்த்துறை பேரா. கண்ணன் அவர்களுடன் அவரின் சொந்த ஊரான பழையனூரிலும் பார்த்திருக்கிறான்.. பாரதி தாசனின் மகன் மன்னர் மன்னனையும் திருவாரூரில் சந்தித்திருக்கிறான்.. எல்லோருமே பாரதி பிராமணன் என்று தான் சொன்னார்கள்.. வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.. அவன் பிராமணன் இல்லை என வரலாறும் சொல்லவில்லை.. இந்த பின் நவீனத்துவ எழுத்தாளனும் சொல்லவில்லை..
ஆனால் எந்த ஆந்தையும் இதை ஒப்புக் கொள்ளவில்லை.. ஆவணி வெயிலின் தாக்கத்தால் வரும் மழை தென்கிழக்குப் பருவ மழை அல்ல என்று புரிந்தது.. அவன் இப்போது நூலகத்தின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். காற்றில் மிதந்து வந்த அந்த குஞ்சாந்தை அவனிடம் சொன்னது...
நீ ஒரு இலக்கிய காமெடியன்.. அதுவும் பின் நவீன காமெடியன்.. பாரதியைப் பற்றி சீரியஸாக எழுதினால் தமிழ் பின் நவீனத்துவ இலக்கிய உலகம் சிரிக்காமல் என்ன செய்யும்.. ஒன்று சொல்கிறேன்...கேட்பாயா என்றது.. அவன் சொல்லேன் என்றான்.. நீ எழுதும் கதை கவிதை கட்டுரைகளை விட, நீ வாழும் இந்த வாழ்க்கையே ஒரு சிறந்த பின்நவீனத்துவ சர்ரியலிச மேஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச நகைச்சுவைதான்!"
சொல்லிவிட்டு மீண்டும் கூடுக்குள் அமர்ந்து கொண்டது.. மழை விட்டுவிட்டது போலும்.. இன்னும் நிறைய ஆந்தைகள் இப்போது நூலகத்திற்குள் நுழையத்தொடங்கின.. ஒரு வெவ்வாலும் அங்கே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.. கையிலிருந்த பறவைக் கூடிலிருந்த அவனின் பிராமண வெகுளித்தன குறியீடுகளும் என்ற வரியை மட்டும் அதன் அடித்தளத்திலிருந்து சுரண்டி எடுக்கத் தொடங்கினான்..
இப்போது மீண்டும் வெளியில் மழை பிடித்துக் கொண்டுவிட்டது...
ராகவபிரியன்..

Comments

Popular posts from this blog