ஒரு சொல்லும் நானும்.. சிறுகதை..
நேற்றிரவு எனது அன்றாட வாழ்வின் சுழற்சியில் கிடைக்கும் தூக்கம் பாதியிலேயே உறைந்துவிட்டது. ஒரு சொல் அல்லது வாழ்வின் தவிர்க்கவியலா தலைமுறையாய் நெருக்கும் வேலை பற்றிய பழம்சொல் உறக்கத்தின் இழையின் முனையொன்றைப் பிடித்துக் கொண்டு விடமறுத்து மதம் கொண்டிருந்தது..
யாழினி நம்பவியலாமல் மஞ்சள் இரவு விளக்கொளியில் எதையொ புரட்டிக்கொண்டு கணிணியின் முன் இருப்பவனைப் கண்கள் கசக்கியபடி பார்க்கிறாள்.. அருகில் வருகிறாள்..
நான் பார்த்துக்கொண்டிருக்கும் பிரதியை ஊடுறுவின அவளின் கண்கள்.. அவளின் பார்வை என் பிரக்ஞையைத் துண்டு துண்டாய் வெட்டியது. நான் சொல்லைப் பிரதியில் தேடவில்லை. சொல்லை தூர அனுப்பிவிட்டு பிறகான அவசிய உறக்கத்தைப் பிடிக்க கணிணியின் முன் அமர்ந்திருக்கிறேன் என்பது யாழினிக்குப் புரியவில்லை..
யாழினி சட் டென படுக்கையை மடித்து வைத்தாள். அவளின் கைபேசியின் உறையை விருட்டென உருவியதில் ஜன்னல் வழி நிலவு திரையில் குதித்து ஒளிரத் தொடங்கியதில் நேரம் காணக்கிடைக்காத ஆத்திரத்தில் நீலகிரி மலைச்சாலையின் இரவு யானையென அடுப்படிக்குள் நுழைந்தாள்..
அவளின் தேனீர் தயாரிக்கும் நுட்பத்தின் அடவுகள் காற்றில் கலந்து எனது சொல்லின் அவதையுடனான தனிமையில் உட்புகுந்தது.. தனிமையின் ஏகாந்த தேனீர் பொழுதுகளை கலைத்த யாழினி இப்போது என் அருகில் தேனீரை வைத்தாள்.. இரவின் குளிரூட்டப்பட்ட அறையில் தேனீர் ஆறத் தொடங்கியிருக்க யாழினியின் வெப்பம் என் மூச்சிற்குள் புகுந்தது..
ஏன் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் தூக்கம் உங்கள் உரிமை.. அதுபோல் என் தூக்கம் என் உரிமை..அதுவும் ஒரு பெண்ணின் தூக்கத்தைக் கெடுப்பது அவளுடன் போர் தொடுப்பது போன்றது என்றாள்..
யாழினியை என் அருகில் அமரச் சொல்லி கணிணியின் எலிச் சுட்டியை அவளிடம் கொடுத்தேன்.
நான் வாழ்வியலின் அவசியத் தலைமுறைகளாய் கூற்றாகி நிற்கும் ஒரு பழம் சொல்லைத் தேடுகிறேன்.. முடிந்தால் இந்தச் கணிணி எலிச்சுட்டியை சரியான இடத்தில் வைத்து என் தேடல் மொழியைத் தேடிக்கொடு என்றேன்..
இப்போது யாழினி குனிந்த படியே கணிணி எலிச் சுட்டியால் திரையில் எதை எதையோ நகர்த்தத் தொடங்கினாள்.. அவளது முடிக்கற்றை என் முகத்தில் விழுந்தது தற்செயல் அல்ல.. தேடிக் கண்டடையும் அச்சொல் அவள் முடிக்கற்றையென என் முகத்தின் மேல் வேண்டுமென்றே தான் மணம் வீசியதென உணர்ந்த போது தேடல் தேங்கத் தொடங்கியது..
இப்போது யாழினி...நீங்கள் தேடலை நிறுத்துகிறீர்களா..அல்லது இந்த எலிச் சுட்டியின் மூலம் ஷட் டவுன் செய்துவிடவா என ஏறக்குறைய மிரட்டினாள்..சப்தமான வார்த்தைகளில் மிரட்டல் சகிக்காமல் இருக்கும்.. மெல்லிய வார்த்தைகளின் மிரட்டல் நிஜ பயங்கரத்தைத் தரும்.. நான் பயந்து போய் அவளின் கையிலிருந்து கணிணிச் சுட்டியை கைப்பற்ற எத்தனித்தேன்..
இப்போது எனது கைகள் அவளின் மணிக்கட்டைப் பற்றியதால் ஒரு சில கண்ணாடி வளையல்கள் உடைந்தன.. ஒரு சொல் உடைந்து சிதறுகையில் கனம் உணரப்படுவதில்லை...ஆனால் கண்ணாடி வளையல்கள் உடையும் கணம் எனது உடலுக்குள் மின்சார அதிர்வுகளை உண்டாக்கியது..
யாழினி என்னைப் பார்த்தாள்.. நானும் அவளைப் பார்க்கிறேன். இருவரும் ஒரு கூட்டுச் சிறைக்குள் ஒரே ஒரு சொல்லைத் தேடுவதற்காக சிக்கியிருப்பது போல் இருந்தது. நான் தேடும் சொல் எது என்பதை விட அவள் தேடுவ்து உறக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன்..
இப்போது கணிணியின் ஷட் டவுன் எனும் இடத்தில் சுட்டியை நகர்த்தியபடியே யாழினி மெல்லிய குரலில் கேட்கிறாள்.. எழுத்தாளரே ஏதோ ஒரு சொல்லைத் தேடுவதாகச் சொன்னீரே ..அது எந்தச் சொல்..
என் குரல் வெளிவராமல் சிக்கியபடி இருந்தது.. நாளின் உறைந்த உறக்கம் மெல்ல உருகி நகரத் தொடங்கியிருக்க வேண்டும்.. அந்தச் சொல்லை அவளிடம் சொன்னால் அவளின் உறக்கம் போய்விடக் கூடுமெனும் பயம் தயக்கத்தைத் தந்தது..இருந்தாலும்
அது ஒரு சொல் தான்..ஆனால் அதை சில சொற் கோவைகளாய்க் கோர்த்துச் சொல்கிறேன்.. புரிந்து கொண்டால் உன் தூக்கம் போய்விடும் பரவாயில்லையா...என்றேன்..
கணிணியை அணைத்தவள் இப்போது என் முகம் அருகே நெருங்கி சொல்லுங்கள் என்றாள்..
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றேன்..
இதையா தேடினீர்கள்.. என்றவள் மெல்ல எழுந்து கணிணியை மீண்டும் உசுப்பியபடியே...சுருட்டிய படுக்கையை விரித்தாள்..
அந்தச் சொல் முட்டாள் தானே... சொல்லியபடி படுக்கையில் விழுந்தாள்..
தேடப்பட்ட சொல் கிடைத்ததால் கணிணியை மீண்டும் அணைத்தேன்..
யாழினி எனது தலையணை மற்றும் மெத்தையை மட்டும் கட்டிலில் இருந்து தூக்கி வீசிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள்..
வாழ்வின் தலைமுறையாய் நெருக்கும் வேலை பற்றிய அச்சொல் இப்போது தரையில் கிடக்கும் தலையணையைப் பிடித்துக் கொண்டு விழிக்கத் தொடங்கியது..
நான் உண்மையிலேயே அச்சொல் தான் என்பது புரிந்தது..
ராகவபிரியன்
Comments
Post a Comment