பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்…15
திகம்பராய தீமஹி
==================
பணி முடிந்து வீடு திரும்பிய ராம்பாபுவால் இயல்பாக இருக்க முடியவில்லை…கால்கள் எதிர்பாராமல் பின்னிக் கொண்டு கீழே தள்ள முயற்சித்தன…கண்கள் எங்கோ நிலைகுத்தி ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியினின்று பார்வையை விலக்கிக்கொண்டதைக் கூட உணரும் பிரக்ஞையற்று சாய்வு நாற்கலியில் தன்னைக் கிடத்திக் கொண்டான்…
முன் இரவின் அவசரச் சந்தடியுடன் அவனிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் வேக வேகமாக கூடடையும் நிகழ்வை எப்போதும் ஆவலுடன் கவனிக்கும் அவனின் ஆழ்மனம் இன்று ஆக்ரோஷமான அடையாளமற்ற அலைகளால் மோதுவதும் மீண்டெழுவதுமாக இருந்தன…பணி முடிந்து வரும் வழியில் ஒரு பிச்சைக் காரனைச் சுற்றி நான்கு நாய்கள் வாலாட்டியபடி வந்து கொண்டிருந்ததைக் கவனித்தவனின் ஆழ்மனம் இன்று ஏதோ விபரீதம் நிகழப்போகிறதென மெல்லிய குரலில் சொன்னது…அது கூட அவனின் திடீர் சோர்வுக்குக் காரணமாக இருக்கலாம்…எனினும் சாய்வு நாற்காலியில் அப்படியே தூங்கிப் போனவனை இரவு உணவிற்காக மனைவி எழுப்பும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது…
சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தவனால் கால் ஊன்றி நிற்க முடியவில்லை…விழப்போனவனை மனைவி ஓடி வந்து பிடித்து அப்படியே கீழே உட்கார வைத்தாள்…இரண்டு இட்லிகளை வெறும் நல்லெண்ணை தடவி தட்டில் வைத்து அவன் முன்னே நகர்த்தினாள்…இவனின் குடியிருப்பின் பக்கத்து காலிமனையிலிருந்து ஒரு நாய் குரைப்பது போல் தொடங்கி ஓங்கி குரலெடுத்து அழத்தொடங்கியது…
ஒரு விபரீதம் நடப்பதற்கு முன்னான கட்டியங்கள் பிழையின்றி நடப்பதாகப் பட…அடையாள மற்ற அலைகளின் தாக்கம் அவனைக் கீழே தள்ளியது…அப்படியே படுத்து உறங்கியவனின் மனக்கண் முன் யது அரசன் பிச்சைக் காரன் வேடத்தில் தத்தாத்ரேயரை வழி மறிக்கிறான்…தத்தாரேயருடன் கூடவே வரும் நாய்கள் குரைப்பதற்கு பதில் நாராசமாய் அழத் தொடங்கின… ஓ ஓ வென விரட்டியவன் வாயிலிருந்து வந்த குழறல் சப்தம் கேட்டு மனைவி ராம்பாபுவை உலுக்கி எழுப்பினாள்…
காய்ந்த இட்லிகளை மீண்டும் சமையலறையில் வைத்து மூடிவிட்டு குழந்தைகள் தூங்கும் அறையில் போய் கதவை சாத்திக் கொண்டாள்…
ராம்பாபு மணியைப் பார்த்தான்…பணிரெண்டைத் தாண்டியிருந்தது…யாரோ அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ்தள தாழ்வாரத்தில் நடப்பது போல் இருக்க…கதவைத் திறந்து பார்த்தான்..நான்கு முகங்கள் கொண்ட ஒருவர் சட் டென ஓடி இருளுக்குள் ஒளிந்து கொண்டதைப் பார்த்தான்…மீண்டும் கதவை மூடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு தொலைக் காட்சிப்பெட்டியை இயக்கினான்…கடற்கரையோர அலைகளின் நடுவே ஒரு பிச்சைக் காரன் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சியொன்று வர தொலைக்காட்சிப் பெட்டியை மூடிவிட்டு ஜன்னலைத் திறக்க…மீண்டும் பக்கத்துக் காலிமனை நாய் அழத்தொடங்கியது…
மனைவி கைபேசியில் யாரோ அழைப்பதாகச் சொல்லியபடி கண்களை கசக்கிக் கொண்டே இவனிடம் கைபேசியைத் தருகிறாள்…மணியைப் பார்க்க மணி விடியற் காலை மூன்றைத் தாண்டியிருந்தது…கைபேசியில் ராம்பாபுவின் அண்ணன் மகன்…”சித்தப்பா…தாத்தா செத்துப் போய்டாரு…சித்தப்பா..”எனச் சொல்கிறான்…ராம்பாபு “சரி…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொள்கிறான்…
அடித்து அடித்தும் ஓயாமல் மீண்டும் மீண்டும் அடித்து அலறும் அலைகளின் சப்தத்தில் அண்ணன் மகன் சொன்ன வார்த்தைகள் ராம்பாபுவின் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை…ஏதோ விபரீத செய்தியாக இருக்க வேண்டுமென ஊகித்த மனைவி
“ என்னங்க…யாரு போன்ல…”
“அதான் வெங்கடேசு…”
“இந்த ராத்ரியிலயா…என்ன சொன்னான்…என்ன வேணுமாம்…”
“தாத்தா செத்துப்போய்டாரு சித்தப்பான்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான்…”
மனைவி அதிர்ந்து போய்விட்டது …அவளின் முகம் வெளிரியதிலிருந்து புரிந்தது…இவனருகில் அமர்ந்து…கைபேசியில் மீண்டும் அண்ணன் மகனை அழைத்தாள்..அண்ணனை அழைக்கிறாள்…உறவுகள் சிலரை அழைக்கிறாள்….மணி ஒலித்து ஓய்கிறதே தவிர எவரும் பதிலளிக்க வில்லை…
காலிமனை நாய் மீண்டும் அழத் தொடங்குகிறது…வாசலில் திரும்பவும் யாரோ நடப்பது போல் இருக்கிறது…விருட்டென எழுந்தவன் வாசல் கதவைத் திறக்கவும்…அதே நான்கு முகக்காரன் ஓடி ஒளிந்து கொள்ளவும் சரியாக இருந்தது… சோர்வு அகன்று ஏதோ ஒருவித பலம் வந்தது போல் இருக்க…மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொள்கிறான்…
இப்போது மீண்டும் கைபேசி ஒலிக்க…அண்ணனிடமிருந்து தான் அழைப்பு…
“என்னடா…”
“அப்பா அவுட்…”
“நிஜம்மாவா….”
“யெஸ்…”
“எனக்கு ஒடம்பு சரியில்லை…என்னால தஞ்சாவூர் வரைக்கும் வரமுடியுமான்னு தெரியல…”
சொல்லிவிட்டு பார்த்தால் அண்ணன் எப்போதோ கைபேசியை அணைத்திருக்கிறான்…
மனைவி உடனே பரபரப்பாகிவிட்டாள்…குழந்தைகளை எழுப்பி தயாராகச் சொன்னாள்…குழந்தைகள் திருதிருவென விழித்து அப்பாவின் அருகில் வந்து அமர்ந்து கொள்கின்றன…
ஒரு சில மாற்று உடைகளை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு ராம்பாபுவின் மனைவியே…வாடகை மகிழுந்துவிற்கு அழைப்பு விடுக்கிறாள்…
ராம்பாபுவால் தன்முன் அடித்து அடித்து விழும் அலைகளின் நடுவே யது அரசன் பிச்சைக்கார வேடத்தில் தத்தாத்ரேயரை பின் தொடர்ந்து கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது…யது வை அந்த நான்கு நாய்களும் அப்படித் துரத்துகின்றன…அலைகளைத் தாண்டித் தாண்டித் தாண்டி யது ஓடிக் கொண்டிருக்கிறான்…இப்போது தத்தாத்ரேயரைப் பார்க்க அவருக்கு நான்கு முகங்கள் இருக்கின்றன…
வண்டியில் குழந்தைகள் தூங்கிக் கொண்டே வருகின்றன…முன் இருக்கையில் இருந்தவனால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை…தலை சுற்றுவது போல் இருக்கிறது..எதிரில் வரும் வண்டிகளின் முகப்பு வெளிச்சத்தில் தத்தாத்ரேயர் நான்கு முகங்களாலும் அந்த நான்கு நாய்களை விரட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது…அவனின் தலை இப்போது ஓட்டுனரின் தோளில் விருட்டென சாய்ந்து விட…ஓட்டுனர் வண்டியை நிறுத்துகிறார்…
மனைவியின் ஆலோசனைப்படி வண்டியை வல்லம் தாண்டி தஞ்சை சாலையில் திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையின் முன் நிறுத்துகிறார் ஓட்டுனர்…மணி ஐந்தைத் தாண்டியிருக்க மெல்ல இருள் நகர்வதற்கான முஸ்தீப்புகளில் இருந்தது…தெரு நாய்கள் குரைப்பதையும் அழுவதையும் ஒத்தி வைத்திருந்தன…ஒரு சிலர் நடை பயிற்சிக்காகவும் தேனீர் அருந்தவும் மகிழுந்துவைத் திரும்பிப்பார்த்தபடி முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்தனர்…குழந்தைகள் தூங்கி விழுந்து கொண்டிருக்க…மனைவி ஒரு சில ஆஸ்ப்பிரின் மாத்திரைகளும் ப்ளாஸ்க்கில் தேனீரும் வாங்கி வந்து குழந்தைகளுக்கு தேனீரை டம்பளரில் ஊற்றி ஆற்றிக் கொடுக்கத் தொடங்குகிறாள்…இவன் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை வாயில் போட்டு தேனீர் ஒரு மிடறு விழுங்குகிறான்… யது அரசன் தத்தாத்ரேயரிடம் …”நீங்கள் யார்…உங்கள் குரு யார்..” எனக் கேட்பது தெளிவாக காதில் விழுகிறது…
ராம்பாபுவின் பக்கத்தில் அண்ணன் இப்போது நின்று கொண்டிருக்கிறான்…ஒரு சில உறவினர்களும் கூட…தத்தாத்ரேயரையோ அவருடைய நாய்களையோ இப்போது காணோம்…ஒரு குரல்…”இப்போ நல்லா ஆயிட்டாரு சார்…எதோ ஷாக் நியூஸ் சொல்லிருக்காங்க…இனிமே பயப்பட வேணாம்…ஆனா ரொம்ப வீக்கா இருக்காரு…ஜாக்ரதையா பார்த்துக்கோங்க…”
அண்ணனிடம் தான் டாக்டர் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்…ராம்பாபுவிற்கு இப்போது தெளிவாக எல்லாம் புரியத் தொடங்கியிருந்தது…ஒரு ஆட்டோவில் இவனை அழைத்துக் கொண்டு மருத்துவ மனையிலிருந்து அண்ணனும் ஒரு சில உறவுகளும் வீட்டிற்கு வருகிறார்கள்…
ஆஜானுபாகுவான அப்பாவின் உடலை வாசலில் கிடத்தியிருக்கிறார்கள்..
அண்ணன் பஞ்சகச்சம் உடுத்தியிருக்கிறான்…
அம்மா முகத்தை மூடியபடி தலைமாட்டில் அமர்ந்திருக்கிறாள்…
மெல்ல நடந்தவன் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறான்…அப்பாவின் தலையை ஆதுரமாக தடவிக்கொடுக்கிறான்…இவனின் முகம் பார்த்து அம்மா மீண்டும் அழத் தொடங்குகிறாள்..
அண்ணன் முன்னால் செல்ல இவனும் தம்பிகளும் பின் தொடர அப்பாவைச் ஈரம் சொட்டும் கிழிந்த வேட்டியுடன் சுற்றி வருகிறான்…அப்பாவின் சிதையின் மேல் அண்ணனுக்குப் பின் இவனும் நெருப்புத் துண்டங்களை மயானத்தில் கொட்டுகிறான்…
தத்தாத்ரேயரும் அவருடைய நாய்களும் சற்று தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறான்…கண்கள் யது அரசனைத் தேட அவர் ராஜ்ய பரிபாலன நிமித்தம் எங்கோ சென்றிருப்பதாக ஆழ்மன அலையொன்று சொல்லிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகிறது…
பத்தாம் நாள் காரியத்திற்கான தகவல் யார்யாருக்கு அனுப்ப வேண்டுமென சாஸ்திரிகள் அண்ணனிடம் கேட்கிறார்…
எல்லா சம்பந்திகளுக்கும் அனுப்பி விடுங்கள் எனச் சொல்லியபடி முகவரிகள் அடங்கிய நோட்டை சாஸ்திரிகளிடம் தருகிறான் அண்ணன்…
ராம்பாபு…சாஸ்திரிகளிடம்…
”என் மனைவியின் வீட்டாருக்குச் சொல்ல வேண்டாம்…திருமணம் ஆன அன்றுமுதல் நான் பிச்சைக் காரனாகிவிட்டேன்…எனக்குச் சொந்தமானவர்கள் எவரும் இல்லை…”
எனச் சொல்ல…அப்பா இறந்த துக்கத்தை நொடியில் முகத்திலிருந்து அகற்றிய அண்ணன் முகத்தில் அளவற்ற சந்தோஷம் ஒரு அங்குலம் அப்பிக்கொண்டது…
யது அரசனிடம் தத்தாத்ரேயர் தனக்கு இருபத்து நான்கு குருமார்கள் இருப்பதாகவும்…பாம்பும் அதில் ஒரு குருவெனவும் சொல்கிறார்…ஏனென்று கேட்ட யதுவிடம்… சொந்தங்கள் எதுவும் யாரும் கிடையாது என்பதை பாம்புகளிடம் கற்றுக் கொண்டாத தத்தாத்ரேயர் சொல்வதை ராம்பாபுவால் தெளிவாகஇப்போது கேட்க முடிகிறது…சில புதிர்மடல்கள் கடலின் நடுவில் அவிழத்தொடங்குவதைப் பார்க்கிறான்...
மகிழுந்துவிற்குள் ஏறி அமர்ந்து கொள்கிறான்…தனக்கு ஏன் அழுகை வரவில்லை என தத்தாத்ரேயரிடம் கேட்க வேண்டுமென நினைக்கிறான்…எதிரே அவரின் நான்கு முகங்களைச் சுற்றியும் ஒளி வட்டம் பெரிதாகிக் கொண்டே போவதைப் பார்க்கிறான்…கண்கள் கூசுகிறது…
ஓட்டுனர் வண்டியைக் கிளப்புகிறார்…ஒலிப்பானை அழுத்த…வண்டியின் முன்னால் நான்கு நாய்கள் குரைத்தபடி ஓடத் தொடங்குகின்றன…ஒரு பாம்பும் வளைந்து வளைந்து சுவர் ஓரமாய் போய்க்கொண்டிருக்கிறது…திடீரென நின்ற ஒரு தத்தாத்ரேயரின் நாய் பாம்பைப் பார்த்துக் குரைக்கத்தொடங்கியது…
“ஓம் தத்தாத்ரேய வித்மஹி திகம்பராய தீமஹி….”
என உதடு முணுமுணுக்கத் தொடங்கியது…ஓட்டுனர்…வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு…”சார்…என்ன ஆச்சு…” எனக் கேட்கிறார்…இப்போது ஓட்டுனருக்கு நான்கு முகங்கள் இருப்பதை ராம்பாபுவால் பார்க்கமுடிகிறது… நீங்களும் கூட பார்க்க முடியும்...
ராகவபிரியன்
Comments
Post a Comment