அப்போது நாங்கள் மாஞ்சா தயாரிப்போம்..பட்டம் விடுவதற்காகத்தான். பட்டம் விடுவதென்பது ஒரு கலை. ஸ்ரீரங்கம் சாத்தார வீதியின் மாடி வீட்டிலிருந்து பட்டத்தை சுண்டி சுண்டி மேலெழுப்ப வேண்டும்.. இப்போதோ ராக்கெட்டுக்கள் ஏவு தளத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்புகிறது.. யதார்த்தத்தில் பட்டம் இப்படியும் அப்படியும் ஆடியபடி தான் வானில் ஏறும்..செங்குத்தாக மேலெழுந்த எதுவும் திரும்ப வருதல் அரிது..ஆனால் எந்த ஒரு பட்டமும் அதன் பறக்கும் காலம் முடிந்தால் கீழிறங்கத் தயங்கியதே இல்லை..
பட்டம் மெல்ல வானின் உச்சியை நூலின் தூரம் வரைத் தொடுகையில் ஆள்காட்டி விரலை அறுத்து விடுவது போல் விசை தந்து இழுக்கும்..அந்த விசையின் தாக்கத்தில் பட்டம் விரல் தப்பி உருவிச் செல்லவும் நேரலாம்.. அப்படி பட்டம் விரல் உருவி கழன்று செல்கையில் வாழ்வே கைவிட்டு உருவிச் சென்றது போல் இருக்கும்..
அன்று பிள்ளையார் சதுர்த்தி.. விடுமுறை நாள் வானில் நிறைய பட்டங்கள் பறந்து கொண்டிருந்தன.. சாதாரண நூலில் அப்பாவியாய் பட்டம் விடுகையில் வேண்டுமென்றே சில பட்டங்கள் வம்பிற்கு வந்தது விளாயாட்டிற்காக அல்ல.. வம்பிற்காகத்தான் என்பது முதலில் புரியவில்லை.. வானில் கூட மனிதனுக்கு வம்பும் பகையும் வரும் என்பதை உணராத காலம் அது. பட்டம் அறுக்கும் விளையாட்டென்பது வானின் போர்க்களமென அப்பொழுது எங்களுக்குத் தெரியாது..
நாங்கள் ஏழு அல்லது எட்டு பட்டங்களை இழந்த பின்பு தான் புரிந்தது ஒரு பட்டத்தையாவது அறுத்தெறிய இயலாதவன் பட்டக்கோழை என்பது.. அன்று முடிவு செய்தோம்..எங்கள் எதிரிகளின் பட்டத்தை அறுத்தே ஆக வேண்டும் என.. ஸ்ரீரங்கம் வீரம் விளைந்த வான்..அதற்குத்தான் மாஞ்சா தயாரிக்கக் கற்றுக் கொண்டோம்.. மாஞ்சா தயாரித்து ட்வெயின் நூலில் தடவி உலர்த்த வேண்டும்.. பிறகு மர உருளையொன்றில் மாஞ்சா நூலை கையை அறுக்காமல் சுற்றிக் கொள்ள வேண்டும்.. போருக்கான தயாரிப்புகளில் தீவிரமாய் இறங்கினோம்..
அறுபட்ட பட்டம் மெல்ல ஆடி ஆடி மர உச்சி
யொன்றிலோ இல்லை மின்சார கம்பிகளிலோ இல்லை கண்ணிற்கு புலப்படாத தூரம் வரை சென்றோ சிக்கியோ மறைந்தோ போகலாம்.. அறுபட்ட பட்டத்தின் தோல்வி என்பது மனதை விட்டு ஒரு நாளும் மறையாது.. அது மட்டுமல்ல ஒரு பட்டம் மறைவதைக் காணும் வேதனை எந்த மானுடத்திற்கும் வரக்கூடாது
வீரம் காட்டும் மாஞ்சா செய்வதற்கு பழைய கண்ணடிப் போத்தல்களை நுணுக்கிப் பொடியாக்க வேண்டும்.. பிறகு லயன் கரையோரம் வளர்ந்திருக்கும் பச்சை சோற்றுக் கற்றாழை தடித்த இலைகளை கொண்டு வந்து மைய்ய அரைக்க வேண்டும்.. அந்தக் கெட்டிக் குழம்பில் அரைத்த கண்ணாடிப் பொடியைக் கலக்க வேண்டும்.. இப்போது வீரமாஞ்சாக் கலவையை ஏறக்குறைய ஒரு கி.மீ வான தூரத்திற்கான நூலில் தடவி வெயிலில் உலர்த்த வேண்டும்..
வானில் சுண்டிச் சுண்டி ஏற்றிய பட்டத்தின் மாஞ்சா நூல் எதிரியின் பட்டத்து நூலைத் தொட்டாள் போதும்.. வீரம் வெளிப்படும்.. எதிரியின் பட்டம் அறுந்து மெல்ல ஆடி ஆடி காற்றில் சிறகு விழுவது போல் விழுவதைப் பார்த்தால் பிரமிளின் கவிதை இப்போது ஞாபகம் வரும்.. அப்போதோ பிரமிளை மட்டும் அல்ல..பள்ளிப் பாடங்களைக் கூட ஒழுங்காக நாங்கள் படித்ததில்லை..
அப்படியான பட்டம் விடும் கலை பழகப் பழகத் தான் வரும்.. அந்தச் சதுர்த்தி நாளில் பிள்ளையாரை வணங்காமல் நாங்கள் பட்ட்ம் விட்டிருக்க வேண்டும்.. மாஞ்சா நூலில் கண்ணாடித் துகளின் அடர்வு உதிர்ந்துவிட்டது போலும். எதிரியின் பட்டம் எங்கள் பட்டத்தை அறுத்து விட்டது.. தோல்வி..எதிர்பார்க்காத தோல்வி.. பட்டம் ஆடி ஆடி அப்போதைய ராய கோபுரத்தில் தன்னையும் எங்கள் சந்தோஷங்களையும் சேர்த்துக் சுற்றிக்கொண்டு விழுந்து விட்டது..
நாங்கள் உடனே ஓடிச் சென்று அந்த ராய கோபுரத்தில் ஏறினோம்.. அப்போது ஸ்ரீரங்கம் ராய கோபுரம் இவ்வளவு உயரம் கட்டப்பட்டிருக்க வில்லை.. மொட்டை கோபுரம் என்ற பெயரும் அதற்கு அப்போது இருந்தது.. அங்கே முகமறியாத ஒரு சிறுவன் களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க முயன்று கொண்டிருந்தான்.. எங்களின் அறுக்கப்பட்ட பட்டம் ஒரு குரங்கின் கையில் இருந்தது.. குரங்கின் கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.. மாஞ்சா நூலைக் கையில் பிடித்திருக்கிறது அந்தக் குரங்கு.. பட்டம் இப்படியும் அப்படியுமாய் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது.. எங்களையும் அந்தக் குரங்கையும் பார்த்த அந்தச் சிறுவன் எதுவோ சைகை செய்தான்.. குரங்கு வேகமாக வந்து களிமண் பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ள..அதன் ரத்தச் சொட்டுக்கள் நின்று விட்டன..
அந்தச் சிறுவன் எப்படியோ அறுந்த பட்டத்தை எடுத்து வந்து எங்களிடம் கொடுத்தான்.. வெற்றியை ஒருவன் எடுத்து வந்து கையில் கொடுக்கையில் வரும் நிம்மதி வந்தது எங்களுக்கு.. அதுமட்டுமல்ல எங்களின் இழந்த வாழ்வை மீட்டெடுத்த உணர்வும் வந்தது.. அன்றிலிருந்து நாங்கள் லயன் கரையில் அலையத் தொடங்கினோம்.. தரமான சோற்றுக்கற்றாழை தடித்த இலைகளைச் சேகரித்தாக வேண்டும்.. சோற்றுக் கற்றாழைகள் இப்போதும் லயன் கரைகளில் நிறைய தரமாகவே கிடைக்கின்றன..ஆனால் கைவிடப்பட்ட கண்ணாடி பாட்டில்கள் கிடைப்பது தான் அரிதாகிவிட்டது.. அதனால் மாஞ்சாவின் தரம் பற்றிய கவலை எங்களுக்குத் தொற்றிக்கொண்டது.. தோல்வி பற்றிய பயமும் தான்..
அன்றொரு விதி செய்தோம்.. தனியொரு பட்டம் அறுபடாமல் இருக்கும் மாஞ்சா செய்யும் வரை ஓயோம் என முடிவும் செய்தோம்..
ஆனால் இப்போது நிறைய காலி பீர் கண்ணாடி பாட்டில்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கின்றன.. பிள்ளையார் செய்ய களிமண் மட்டும் போதிய அளவு கிடைப்பதில்லை என ஒரு மண் பிள்ளையார் கலைஞர் சொல்லிக்கொண்டிருந்தார்..எல்லாவற்றையும் விட பிள்ளையார் சதுர்த்தியன்று மாஞ்சா செய்யச் சொல்லி பரபரக்கும் என்னுடை கையைக் கட்டுவதுதான் எளிதாக இல்லை...கொழுக்கட்டைத் தின்னச் சொல்லும் வாயையும் தான்..
ராகவபிரியன்
Comments
Post a Comment