தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்.....8
விழுப்புரம் தாண்டிய தென் தமிழக சாலைகளில் மீள்ம உருண்டைகள் சற்று மகிழ்வைச் சுருட்டிக்கொண்டு சுற்றுவது போல் இருக்கும்.. பயணங்களின் கடினத் தன்மைக்கும் மீள்ம உருளிகளின் சுற்றலுக்குமான தொடர்பு மானுட பயணிகளின் சிந்தனைக் குதிரையின் கடிவாளக் கயிறைப் பற்றியிருப்பது சுழற்சியின் பெளதிக விதிகளுடனான உறவை தக்கவைத்துக்கொள்ளும் விந்தையை உணரலாம். விழுப்புரம் கடந்த தென்னகச் சாலைகள் பயணிகளின் பார்வைக்கு மருதமும் முல்லையும் கலந்த பாலையற்ற நிலத்தின் மாந்தர்களை அவர்களின் அன்றாடப் பாடுகளை காட்சிப் படுத்திக்கொண்டே இருக்கையில் தொண்டை வறண்டு நீர் கேட்பதை சோள விளைபொருட்களை உருவிய பின்னான காய்ந்த சோளத் தட்டைகளை தின்னும் கால் நடைகள் தண்ணீர் கேட்பதை பண்டைய நடைப்பயணமொன்றை தமிழக ஆதிகுடி மானுடத்திற்கு விதிக்கப்பட்ட ஒற்றையடிப் பாதையில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்த இந்த மண்ணின் மூத்த கலாச்சார எச்சங்களின் நீட்சியுடன் இணைத்துப் பார்க்கச் சொல்லும்..
காட்சிகளின் தொடர்ந்த தீராப் பதிவுகளில் கண் அயர்தல் மகிழுந்துப் பயணத்தில் விபத்துக்களை ஈர்க்கும் காந்த அலைகளை வெளியிடுவதை பகுத்தாய்தல் என்பது பின் நவீன பயண காலங்களின் கைபேசிகளுக்குள் பார்வையைச் சிக்க வைத்துவிடுவது கலாச்சார பரிமாணக் கோணலெனில் மிகையில்லை. தொடர் பார்வை கைபேசித் திரைகளில் பதிவதால் அடுத்தடுத்த எரிபொருள் அகங்கள் சாலையின் போக்குவரத்து நெரிசல் இன்னும் இன்னபிறவற்றைக் காட்டிக் கொடுத்து வேகத்தடையையும் திடீர் சாலை மையப் பள்ளங்களையும் மீள்ம உருளைகள் குறைக்கப்படாத வேகத்தில் அணுகுகை செய்யும் ஆபத்தை உள்ளடக்கியதெனில் திசைத் திருப்பும் சக்கர மாணிகளை அழுத்திப் பிடித்திருக்கும் உள்ளங்கைகளை உருவியெடுத்துவிடும்.
இவ்வளவு அயர்வுகளுடன் சுழன்றுகொண்டே இருக்கும் மீள்ம உருண்டைகளை இழுக்கும் கால காளைகளை அவிழ்த்து அவற்றின் முன் வைக்கோல் பிரிகளை நிரப்பி ஓய்வெடுக்கச் செய்யும் அவசிய போதுகளுக்கான இளைப்பாறுதல் தரும் தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள் அடர்த்தியாய் கிடைப்பது உளூந்தூர் பேட்டையில் தான். வெறும் தேனீர் மட்டும் அருந்தி திருப்தியும் புத்துணர்வும் கொண்ட பின் நவீன யுகப் பயணியை காப்பிக்கும் அதையும் மீறி போர்ன்விட்டா ஹார்லிக்ஸ் பூஸ்ட் எனும் பாலில் ஆயத்தப் பொடிகளைக் கலந்து அருந்தும் போலி புத்துணர்விற்கு ஆட்படுத்தும் ரசாயண மாற்றுக் கலாச்சாரத்திற்கும் இடைப்பட்ட குளிர்பாணங்களையே அடர் குளிர்காலங்களிலும் அருந்தச் செய்த நிறுவனமயமான இளைப்பாறுதலுக்கான வறண்ட தொண்டையை நனைக்கும் நீர்த்துளிகளின் உஷ்ண மற்றும் நீர்ம பாண அருந்துதல்களை அதனுடனான கலாச்சார மாற்றீடுகளைப் புகுத்திய நூதன உத்தியென அறிய வருகையில் உணவுக் குழாயின் நடுவில் உஷ்ணத் தேனீர் சற்று வேகமாக மோதி அதிர்வுகளைத் தருவதை தடுத்தல் மேலதிகக் கடினம்..
உளுந்தூர் பேட்டையின் தேனீரக வெளியொன்றில் மீள்ம உருண்டைகளின் இழுவைக் காளைகளை அவிழ்த்து ஓய்விற்கான வைக்கோல் பிரிகளை தூவி நகர்வதற்குள் ஊசி விற்கும் குட்டைப் பாவடை மார்புகள் வெளித்தெரியும் பட்டன் அவிழ்ந்த அழுக்கு ஆயத்தக் கச்சையுடன் இடுப்பில் அழுக்கு பின் நவீன நிர்வாண குழவியொன்றை சுமந்து முந்திரி பாக்கெட்களையோ இல்லை ஊக்குகள் கோர்த்த அட்டையொன்றையோ வாங்கச் சொல்லி நிர்பந்திக்கும் குறவப் பெண்மணியால் உருக்கொள்ளும் சூழலிய அழுத்தத்தை வென்றெடுத்தாக வேண்டும்.. அடுத்தடுத்த மகிழுந்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஓய்விற்காக மீள்ம காளைகளை நுகத்திலிருந்து விடுவிக்கையில் அதை நோக்கிய அந்தப் பரிதாபத்திற்குரிய தொன்ம தமிழக நாடோடிக் கலாச்சார எச்சங்களைச் சுமந்திருக்கும் கூட்டத்தின் வாழ்வாதார சேதங்களை அதன்மூலம் அவர்கள் சந்தித்த சோதனைகளை சிந்தனை உசுப்பிவிடுகையில் கைகள் தானாகவே அவர்களுக்கும் ஒரு தேனீர் தானம் செய்யச் சொல்வதை இந்த மண்ணில் உதித்த பிறப்பின் உணர்வுகள் சிந்தையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கட்டளையென பிறப்பிக்கும்..
அவர்களுக்கான தேனீருக்காக சில்லரைப் பணத் தாள்கள் பணப்பையில் நிகழ் கால பயணங்களில் கிடப்பதில்லை என்பது தான் பொருளாதர அருவ எண்ணிம பண பரிவர்த்தனைக்கான பரிணாம வளர்ச்சியின் உச்சம். சட் டென ஒரு குறவப் பெண் தனது கைபேசியிலிருந்து விரைவு எதிர்வினைக் குறியீடொன்றை அதாவது க்யூஆர்கோட் ஒளிர்ப்பித்துக் காட்டுவதின் உள்ளார்ந்த வளர்ச்சியின் குறியீடைப் புரிந்துகொண்ட அதிர்வுடன் நகர்கையில் அலைபேசிக் கோபுர மின்னலைகளின் சீரான அலைவரிசையின் கண்ணிற்குத் தெரியாத கம்பியறுபடல் நிகழ அப்பெண் தன் குழந்தையின் முதுகில் பளாரென ஒரு அடி வைக்கிறாள்.. அது பின் நவீன நிர்வாணத்தின் மீதான தாக்குதலெனின் அதுதான் நிஜம்.. பொறிகலங்கி நின்ற கலாச்சார தாக்குதல் போதில் தேனீருக்கான கட்டளையை நவீன பார்வையலங்காரங்கள் அடங்கிய தேனீர் தயாரிப்பாளரிடம் தர நேர்ந்தது அணிச்சையின் உந்து சக்தியின் ஆதார மிச்ச விளைவு.
கடந்த நூற்றாண்டின் இறுதி தேனீரகங்கள் செம்பு வட்ட வடிவ சுடுனீர் சமோவர் அல்லது டீ பாய்லர் பளபளக்க இரட்டை முக கரியடுப்பில் தேனீர் வடிகட்டிக் குவளையிலிருந்து தேனீர் வாச நீராவி வளைந்து எழுந்து கொண்டே இருக்க.. அருகிருக்கும் வட்டப் பாத்திரமொன்றில் பால் காய்ந்து கொண்டிருக்க தேனீருக்கான கட்டளை கிடைக்கப்பெற்றதும் செம்பு சுடு நீர்க் சமோவர் குழாயிலிருந்து சுடு நீர் எடுத்துக் கண்ணாடி அருந்து குடுவை கழுவி அதன்பின் ஒரு சிறுகரண்டி சர்க்கரை துகள் வார்த்துப் பின் சில தேக்கரண்டி அலகுகளில் பாலளந்து ஊற்றி அதன் மீது தேனீர்க் குவளைத் தண்ணிர் கலக்க தேயிலை விடுவிக்கும் வண்ண நீர் அதன் அத்துனை ஈர்ப்புடன் தயாரிக்கப் படுகையில் தேத்தண்ணீர் அருந்தும் முன்னான தயாரிப்பு முறை காணும் அனுபவ விவரிப்பு தேனீரைவிடச் சுவைமிகுந்திருப்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்..
அத்தொன்ம கலாச்சார தேனீர் தயாரிப்பு முறை மாற்றங்கள் வலுவிழந்து தேனீரகங்களின் முன் வீசப்பட்ட முற்றாக உறிஞ்சப்பட்ட தேயிலைத் துகள்களின் குப்பையென கிடக்கும் தேனீரக தேனீர் தயாரிப்பாளர் காய்ந்து கொதிக்கும் பாலில் சில தேக்கரண்டி தேயிலைத் துகள்களைத் தூவுகிறார்.. வேதியல் மாற்றத்தின் வண்ணங்களை கூச்சமின்றி வெளிப்படுத்தும் குழைவுகளை குமிழ்களாக மாற்றியபடி தேனீராவிகளை உயிர்ப்பித்து நடனமிட வைத்த அகண்ட பாத்திரத்திலிருந்து குவளையொன்றால் மொண்டு பின் வடிகட்டியின் வழி கண்ணாடி டம்பளரில் ஊற்றித் தருகையில் தேனீர் கலாச்சாரத்தின் தொடர் சங்கிலி எங்கேயோ அறுபட்டுக்கிடப்பதான உணர்வு சோபையிழந்த தன்மையை உணர்விற்குள் புகுத்தும்.. செம்பு சுடுனீர் சமோவர் காலத்து தேனீராற்றும் கலை தொலைந்து போனதை உள்ளம் உணர்த்தியது.. இது கலாச்சார தேய்மானமன்றி வேறென்ன எனும் பதைபதைப்பு மீளுருக்கொள்ளத் தொடங்கியது.. கைப்பிடிக் குவளையொன்றில் தேனீர் தேக்கி வலக்கையை வானுயர உயர்த்தி இடக்கையின் குவளைக்கு சட் டென தேனீர் அருவி குதித்து சூடிழந்து பதம் பெறும் சூடாற்றும் கலை நிகழ் கலாச்சார தேய்மான தேனீரகங்களில் தொலைந்து போனதென்பது கொடும் காலக் கலாச்சார தேய்மானம் தரும் ஆற்றொனா துயரம்..
உளூந்தூர்ப் பேட்டையின் தேனீரக தொலைந்த தேனீராற்றும் கலையை மீட்டெடுத்தல் எப்படியெனும் சிந்தையுடன் மீள்ம உருண்டை காளைகளை உசுப்பி மகிழுந்துவைக் கிளப்ப எத்தனிக்கையில் பின் நவீன நிர்வாணக் குழவி சுமந்த குறத்தியின் கைபேசி குறியீடுகள் ஜன்னல் வழி ஒளிர்ந்து கொண்டே இருந்தது மனதை கனக்கச் செய்துவிட்டது.. இளைப்பாறுதலுக்கான தேனீர் புத்துணர்விற்குப்பதில் கடன்பட்டார் நெஞ்சம் போல் கலக்கமடையச் செய்ததை பயணத்தின் அகழ்ந்தெடுத்தல் பின்னமென புரிகையில் மகிழுந்து ஆசனூர் மேம்பாலத்தின் சீரற்ற ஓடுதளத்தில் மெல்ல ஆடியபடி உருளத் தொடங்கிய மீள்ம உருண்டைக் காளைகளின் வாயில் நுரை தள்ளத் தொடங்கியதை தவிர்க்கவியலவில்லை..
ராகவபிரியன் தேஜஸ்வி
Comments
Post a Comment