தெருவில் சுற்றும் கோல்டன் ரெட்ரீவர்....சிறுகதை

-----------------------------------------------------------------
எங்கள் வீட்டில் அப்போது நாய் வளர்து வந்தோம்.. அது கோல்டன் ரிட்ரீவர் நாய். அதை வாங்கத்தான் இப்போது அன்பு எனும் அன்பழகன் என் முன் நிற்கிறான்..
சார் உங்க வீட்டு நாய் ரொம்ப அழகா இருக்கு. விலைக்குத் தருவீங்களா...
இது ரொம்ப விலை உசந்த நாய்ப்பா... நம்ம ஊர் ராஜபாளையம் நாய் மாதிரி இல்ல..இதோட முடியெல்லாம் கோல்டன் கலர்ல இருக்கும்..அதுவும் இல்லாம இத நான் விக்கறதுக்காக வாங்கலப்பா... போய்ட்டு வா...
கோல்டன் ரிட்ரீவரின் தொடர் குரைத்தல் சப்தத்திலும் கத்திப்பேச வேண்டியதானது..
அந்த அன்பு நாங்கள் எது வளர்த்தாலும் மிருக வகைகள் தான் அதை வாங்க வந்துவிடுவான்..
விலையுயர்ந்த ஆடு கோழி சமயத்தில் மாடுகள் கூட நாங்கள் வாங்கி வருவோம்..சில காலம் வளர்த்துவிட்டு பிறகு கொஞ்சம் அதிக விலை வைத்து விற்று
விடுவோம்..
ஆனால் இந்த நாயை அறுபதாயிரம் கொடுத்து திருவனந்தபுரத்திலிருந்து வாங்கி வந்தேன்.. அந்தக் கதையைத் தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகிறேன்..
நாங்கள் ஆடு வாங்கினால் ட்ரையினில் புக் செய்து வீட்டிற்கு கொண்டு வருவோம்.. போக்குவரத்து செலவு கணிசமாகக் குறையும்.. மாடுகளை ட்ரையினில் புக் செய்ய மாட்டார்கள்.. ஈச்சர் அல்லது குட்டியானை தான் பார்க்க வேண்டும்..
நாயை ட்ரையினில் புக் செய்தால் எப்படி லால்குடிக்கு கொண்டு வருவது என யோசித்தேன்.. விலையுயர்ந்த கோல்டன் ரிட்ரீவர்.. விடாமல் ஓயாமல் குரைத்துக் கொண்டே இருக்கிறது.. என்னிடம் நாயை விற்றவர்..
சார்.. நாய ட்ரையின்ல புக் பண்ணுவாங்க சார்..
அப்புடியா... எப்புடி கொண்டு வருவாங்க.. அதுக்கு சாப்பாடு தண்ணி குடுக்கனும்.. குரைச்சுக்கிட்டே இருக்குமே. பார்சல் வேன்ல வச்சு பூட்டிட்டா செத்துல்ல போயிரும்..
அது இல்ல சார்..வண்டியில கார்டு இருக்காருல்ல.. அவரு பயணம் செய்யற பொட்டியில ஒரு டாக் பாக்ஸ் இருக்கு சார்.. அதுல உள்ள போட்ருவாங்க.. தண்ணி பிஸ்கட் எல்லாம் குடுக்கலாம்.. நீங்க பக்கத்து கம்பார்ட்மெண்ட்ல பயணம் செய்யலாம்.. பயப்படாம வாங்கிட்டுப் போங்க சார்.
சொன்னது மட்டுமல்ல கூடவே வந்து கோல்டன் ரிட்ரீவரை ட்ரையினில் அனுப்புகைச் சீட்டிற்கான பணம் கட்டி வண்டியிலும் ஏற்றியாகிவிட்டது..
ரயில்வே சிப்பந்தி ஒருவர் நாயின் கழுத்துச் செயினைக் கூட தொடத் தயங்கினார். அவர் தொட எத்தனிக்கும் போதெல்லாம் அந்த கோரெ குரைத்துத் தாவி கவ்வ வந்தது.. ஒரு வழியாய் அதை சமன்பாட்டிற்கு கொண்டு வந்து கார்டின் டாக் பாக்ஸிலும் ஏற்றியாகிவிட்டது..
கோரெ அந்த சின்ன பெட்டிக்குள் சுற்றிச் சுற்றி வந்து குரைத்துக் கொண்டே இருந்தது.. கம்பிகளின் வழி எச்சில் ஒழுக குரைத்து ஓய்ந்து இளைப்பாற என்னைப் பார்க்கையில் எனக்கு ஏதோ மிருக வதை குற்றம் செய்வதான உணர்வு வந்தது..
கார்டு சிப்பந்தியிடம் இன்னு ஏது முகத்திலான் உண்ணர்ந்ததன்னு அறியில்ல.. அதாவது எந்த மூஞ்சில முழிச்சு டூட்டிக்கு வந்தேன்னு தெரிலப்பா.. என்று சொல்லிக்கொண்டிருந்தார்..
வண்டி புறப்பட நானும் பக்கத்துப்பெட்டியில் ஏறிக் கொண்டேன்..
இரவு பத்து மணிக்கு இருள் நிறைந்த ஸ்டேஷன் ஒன்றில் வண்டி நின்றது.. இறங்கிச் சென்று பார்த்தேன்.. என்னைப் பார்த்ததும் கோரெ வாஞ்சையுடன் வாலாட்டியபடி மெல்லிய குரலில் குரைத்தது.. கார்டிடம் பிஸ்கட் பாக்கெட்டும் தண்ணீர் பாட்டிலும் கொடுத்தேன்.. அவர் வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டு..மலையாளத்தில் திட்டியதை நான் பொருட்படுத்தவில்லை..
எப்படித் தூங்கினேன் என்று தெரியவில்லை... விடிந்திருந்தது.. வண்டி கொடை ரோடு எனும் ரயில் நிலையத்தில் நின்றவுடன் இறங்கி ஓடினேன்.. வண்டியில் வேறு கார்டு இருந்தார்..
சார் டாக் பாக்ஸுல இருக்கற நாய் என்னோடது தான்..அந்த கார்டு இறங்கிட்டாரா..
ஆமாம்ப்பா.. பார்த்தா ரொம்ப வயலண்டா இருக்கு.. குரைக்க மாட்டேங்குது.. சரி சரி பிஸ்கட் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா..
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே..நாய் குரைக்கத் தொடங்கியது.. நாய் குரைக்கும் சப்தம் கொரே சப்தம் மாதிரி இல்லையே என உணர்வதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது..
அடுத்ததாக திண்டுக்கல்லில் தான் வண்டி நின்றது..இறங்கி ஓடிப்போய் பிஸ்கட் பாக்கெட்டுகள் தண்ணிர் பாட்டில் மற்றும் கார்டுக்கும் சேர்த்து தேனீர் வாங்கிக் கொண்டு வந்தேன்..
சார் வாங்க.. நாய் நல்லா தூங்க ஆரம்பிச்சுடுச்சு..
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார்டு பெட்டியில் ஏறி டாக் பாக்ஸைத் திறந்தேன்.. ஒரு நொடி கண் இமைக்க மறந்த அந்த இடைவெளியில் பளிச்சென்று தாவி அது வெளியில் ஓடிவிட்டது..
அப்போதில் ரயில்வே ப்ளாட்பாரத்தில் இருந்த தெரு நாய்கள் இதைப் பார்த்துக் குரைக்கத் தொடங்க..இது பின் கால்களை மடக்கி அப்படியே அமர்கிறது..
அதற்குள் கார்டு அங்கிருந்த ரயில்வே சிப்பந்தியிடம் சொல்லி அந்த நாயை பெரும் போராட்டத்திற்குப் பின் பிடித்து மீண்டும் டாக் பாக்ஸிற்குள் அடைத்துவிட்டார்..
கண்டிப்பாக இது விலையுயர்ந்த கோல்டன் ரிட்ரீவர் இல்லை என்பது மட்டும் புரிந்தது..
வண்டி லால்குடிக்கு வந்துவிட்டது..
லால்குடியில் இந்த நாயை அங்கிருந்த நிலைய சிப்பந்தியிடம் கொடுத்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டு கார்டும் ட்ரையினும் போயே போய்விட்டார்கள்..
ஓடிப்போன நாயையும் ட்ரையினையும் பிடிக்கவா முடியும்..
லால்குடியின் நிலைய அதிகாரி..
சார் நாயை ரொம்ப நேரம் ஸ்டேஷன் வாசல்ல கட்டக் கூடாது.. பாஸஞ்சர் யாரையாவது கடிச்சா கோர்ட் கேஸுன்னு நீங்களும் நானும் அலையனும்.. இந்தாங்க இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டு நாயை கூப்டுட்டுப் போங்க... வற்புறுத்தினார்..
சார்..இது நான் திருவனந்தபுரத்துல ரயில்வெ கிட்ட குடுத்த கோல்டன் ரிட்ரீவர் இல்லை சார்... இது ஏதோ தெரு நாய் போல இருக்கு.. எனக்கு என்னோட கோல்டன் ரிட்ரீவர் நாயை குடுங்க.. அப்பத்தான் நான் இங்கேருந்து போவேன் என கொஞ்சம் சப்தமாகவே சொன்னேன்..
இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றியது..
ஒரு கட்டத்தில் நிலைய அதிகாரி..யோவ்.. உங்கிட்ட இருக்கற அனுப்புகை சீட்ல என்னயா இருக்கு.. ஒன் டாக் இன் கோல்டன் கலர்ன்னு தானே இருக்கு..
ஆமாம் சார்..
அந்த கார்டு எங்கிட்ட ஒன் டாக் இன் கோல்டன் கலர் ஹேண்டட் ஓவர் டு எஸ் எம் னு கையெழுத்து வாங்கிட்டு குடுத்துட்டுப் போயிருக்கான்.. இங்க பாரு.. நீயே படி..நீ கையெழுத்து மட்டும் போடு.. நாயை நாங்க அவுத்து வுட்டுடுறோம்..
நான் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன்.. சார் கோல்டன் ரிட்ரீவர் ஒரு லட்சம் ரூபா சார்.. இது தெரு நாய் போல்ருக்கு.. எனக்கு என்னோட நாயை குடுங்க.. இல்லைன்னா..கோர்ட்டுக்குத்தான் போவேன்..
யோவ்..திருவனந்தபுரத்துல நீயும் டாக் பாக்ஸ்ல நாயை கட்டும் போது கூட இருந்தேல்ல.. அப்புறம் எப்புடிய நாய் மாறும்..
எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.. திருவனந்த புரத்து கார்டு மலையாளத்தில் ஏதோ சொன்னது இப்போது நினைவில் வந்தது..
இதப் பாருங்க.. நீங்க அதிகாரிங்கறதால பொறுமையா பேசறேன்... இந்த ஜிகினா வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்..
சொல்லிக்கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ சில தெரு நாய்கள் இந்த நாயைச் சுற்றி குரைக்க... மெல்ல பம்மி பின்னங்கால்களில் உடல் வலுவைச் சாய்த்த நாய் விருட்டென சிப்பந்தியின் கையிலிருந்த கயிறை உருவிக்கொண்டு ஓட்டமெடுத்தது.. நான் அப்படியே அருகிருந்த ரயில்வே தூணில் சாய்ந்து கொண்டேன்..
பிறகு...வேறு வழி... கன்ஸ்யூமர் கோர்ட்டில் ஒரு லட்சம் செலவு செய்தாலும்.. நான் ட்ரையினில் ஏற்றியது ஒரு நாய் மட்டுமே.. அதில் கோல்டன் ரெட்ரீவர் என்ற பெயரே இல்லை.. என ரயில்வே நிர்வாகம் சாதித்தது.. ஐம்பதாயிரம் பைன் வேறு கட்டிவிட்டு வந்தேன்..
மறுபடியும் இன்னொரு கோல்டன் ரிட்ரீவர் நாயொன்றை மேலதிக விலை கொடுத்து இதோ வீட்டில் கார் மூலம் கொண்டுவந்து வளர்த்து வருகிறேன்..
என் வாஞ்சை மிகு கோல்டன் ரெட்ரீவர் எந்த ஊரில் எந்தத் தெருவில் எந்த குப்பைத் தொட்டியில் அலைகிறதோ அறியேன்.. இருந்தாலும் அந்த கொரெவின் அழகை நினைவிலிருந்து இன்னமும் அழிக்கவியலவில்லை..
சில நாட்கள் கழித்து மீண்டும் அன்பு என்னைத் தேடி வந்தான்..
சார் உங்க வீட்டு கோல்டன் ரெட்ரீவர் மாதிரியே ஒரு தெரு நாயை திருனெல்வேலியில பார்த்தேன் சார்.. தாமிரபரணி ரயில்வே பாலத்தடியிலதான் சுத்திக்கிட்டிருக்கு.. என்றான்..
உடனேயே அன்புவையும் அழைத்துக் கொண்டு திரு நெல்வேலி தாமிரபரணி ரயில்பாலத்தடிக்கு வந்தோம்..
ஒரு நாய் என்னைப் பார்த்துக் குரைக்கத் தொட்ங்கியது..அட ஆமாம் இது லால்குடியில் ட்ரையினில் வந்த தெருநாய் என்பது புரிந்தது.. அப்படியென்றால் அந்த விலையுயர்ந்த கோல்டன் ரெட்ரீவர்.. இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்...
என் கோரெவை இந்த ஊரில் எந்தத் தெருவில் எந்த குப்பைத் தொட்டியருகே என்று காண்பேனோ.. இந்த அழகை எந்தக் கண்ணில் எந்த ட்ரையினில் என்று கொண்டு செல்வேனோ...என முணுமுணுத்தேன்..
அன்பு..சார் என்னமோ சொல்ல வந்தீங்க என்றான்..
அதற்குள் தெரு நாய் கூட்டமொன்று எங்களைச் சுற்றிக் குரைக்கத் தொடங்கின..கோரஸாக...
ராகவபிரியன்...

[நேற்றைய எனது சிறுகதை தெருவில் சுற்றும் கோல்டன் ரிட்ரீவர் எனும் கதையைப் படித்தவர்கள்.. லைக்கோ பின்னூட்டமோ இடவில்லை. இருந்தாலும் உள்பெட்டியில் கோல்டன் ரிட்ரீவர் நாய் எப்படி எங்கே யாரால் தெரு நாயாக மாறியது என்று கேட்கிறார்கள்.. அதுமட்டுமல்ல.. அந்த ஜிகினா வேலை என்பது என்ன... என்றும் கேட்கிறார்கள்..
கதையைப் படித்தவர்கள் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை கீழே தரலாம்.. நியாயமான பார்லிமெண்ட் வார்த்தைகள் பயன்படுத்தி பின்னூட்டமிடலாம். தவறான அனியாயமான [தமிழக சட்டசபை தூற்றல் வார்த்தைகள் மற்றும் அன்பார்லிமெண்டரி கமெண்ட்கள் நிர்தாட்சன்யமின்றி நீக்கப்படும்.. தொடர் வண்டித் துறையில் பணி செய்பவர்கள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் விடையளிக்கலாம்..
நன்றியும் அன்பும்..ராகவபிரியன் தேஜஸ்வி]

Comments

Popular posts from this blog