சில நாட்கள் பூர்வீக கிராம வாசம்..சில நாட்கள் காஞ்சியின் பரபரப்பான வசிப்பு.. வாழ்வுந்துவின் காலச் சக்கர திசைமாற்றியை வேறு திசைகளில் திருப்புதல் இயலாமல் போனது..பயணத்திற்கானவற்றை சுமக்கும் பெட்டியின் சக்கரங்கள் எத்திசையிலும் திரும்வதைக் காண பொறாமையும் வந்தது.. கால்களில் சக்கர ரேகை இருக்கும் கால்களை அன்பின் கடின சங்கிலிகளாலோ இல்லை குடும்பக் கயிறுகளாலோ பிணைப்பது சுலபமும் அல்ல. பிறகொரு நாள் சட்டை உரித்துக் கொள்ளலாம் என உடலை வளைத்து வீசிப் புறப்படும் நாகமென காஞ்சி நோக்கிப் புறப்பட்டேன்..

பாம்புகள் பயணங்களின் போதுகளில் முட்டையோ பாலோ அருந்துமா என்பது ஆய்விற்கான ஒன்று.. ஆனால் காலின் சக்கர ரேகையின் வேகத்தை தடுப்பது தேனீர் மட்டும் தான்.. சாலையில் தேங்கிய மழை நீரை இங்குமங்கும் பார்த்தபடி கொத்தும் மழைக்காகமென தேனீருக்காக திண்டிவனத்தில் பயணம் அதன் சிறகுகளை மடித்துக் கொண்டு தேனீரை உறிஞ்சியது..
உடன் வரும் தோழமை மனையாளெனின் சக்கர ரேகைகள் அதன் நீளத்தை எப்படித் தான் சுருக்கிக் கொள்கிறதோ தெரியவில்லை.. தேனீர் மட்டும் தான் அருந்த வேண்டுமாம்..கட்டளை.. உடலெல்லாம் முள் இருப்பதால் ஊமத்தைப் பலாவாகாது.. உடலெல்லாம் சர்க்கரை இருப்பதால் நாவு ஸ்வீட்டை வெளித்துப்பாதென சொல்லிக் கொள்ள நினைத்து சிகப்பு நிற செவ்வாழை மைசூர் பா வாங்கியாகி விட்டது..
புல் மேயும் ஒற்றை முயலை ஒளிந்திருந்து பார்க்கும் புலியின் பார்வையுடன் அந்த ஸ்வீட் பாக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனையாள்.. காலச் சக்கர திசை மாற்றியிலிருந்து கையை விடுவிக்கவியலாத ஒரு விதியின் நொடியில் அந்த இனிப்புப் பொட்டலம் தூர வீசப்பட்டு விட்டது..
சரியாக மூடப்படாத பொருள் நிறைந்த வார்த்தைகள் எங்கு வீசினாலும் கொஞ்சம் வீசுபவரின் மேலும் விழும்.. இனிப்புப் பெட்டியை வீசினாலும் தான்..அப்படி இவன் மேல் விழுந்த இரண்டு செவ்வாழை சிவப்பு மைசூர் பா காஞ்சி வரை வந்து விட்டது.. இனிப்புப் பெட்டிகளுக்கு சக்கரங்கள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை என அரங்கன் சொல்வதில் கொஞ்சம் அர்த்தமும் உள்ளது..
ராகவபிரியன்..

Comments

Popular posts from this blog