என் கிராம வாழ்வு எவராலும் பிரித்துப் பார்க்கவியலாத புத்தகமாக இருந்தது. சட் டென ஒரு நாள் சென்னைக்குச் சென்றாக வேண்டிய கட்டளை. அந்தச் சென்னை நகரம் ஒரு உரையாகும் போது, அதை நடந்து கடப்பது ஒரு வாசிப்புச் செயலாகிறது. திருவல்லிக்கேணி என்னும் இந்தச் சிற்றிடம் ஒரு பொருண்மையல்ல... அது பல குரல்களின் மேற்பொறிப்பு. அங்கே பாரதியின் மூச்சு, பெருமாளின் திருமேனி, தெருவின் அன்றாட ஒலி, எல்லாமும் ஒரே தளத்தில் அடுக்கடுக்காக எழுதப்பட்டு, அழிக்கப்பட்டு, மீண்டும் எழுதப்பட்டிருக்கின்றன. நான் இன்று செய்வது ஒரு பயணம் அல்ல...அது ஒரு மறுவாசிப்பு..சரியாகச் சொல்வதென்றால் ஒரு உரையாடலின் இடைவெளிக்குள் நுழையும் முட்டாள் தனமான முயற்சி.

முதலில் பாரதி வாழ்ந்த வீட்டைப் பற்றி உரைத்துவிடுகிறேன். அவர் சுவாசித்து மீந்த உயிர்காற்றை 1982 ல் எட்டயபுரத்தில் சுவாசித்தது இன்றும் நினைவு நுரையீரல்களில் நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறது... அதாவது 2022ல் திருவல்லிக்கேணிக்குச் சென்றதை இப்போது வித்ட்ராயல் ஆப் லிபிடோ முறையில் உங்களுக்குச் சொல்கிறேன்..
திருவல்லிக்கேணியில் இருக்கும் பாரதி வாழ்ந்த வீடு ஒரு காட்சியகம். சுவர்களில் தொங்கும் புகைப்படங்கள், கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்ட கையெழுத்துப் பிரதிகள் இவை யாவும் பாரதி என்னும் பெயரை ஒரு நிலையான திடப்பொருளாக்க ஆக்க முயல்கின்றன. ஆனால் மொழி என்பது ஒருபோதும் அசையாதது அல்லவே. மொழி திரவமல்ல.. மெர்குரியும் அல்ல..இந்த வீட்டின் காலியிடங்களில் பாரதி உண்மையில் அமர்ந்திருந்த இடம் எதுவென்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. அவன் எல்லா இடங்களிலும் வியாபித்திருந்ததைப் பார்த்தேன். அவன் இல்லாத அந்த வெறுமையே அத மஹா கவிஞனை உயிர்ப்புடன் இன்னமும் வைத்திருக்கின்றன. அவன் சொல்வான்..
புதிது புதிதாய் விஷயம் விரித்துப் புதுக்கவிதை பல செய்திடுவேன்...என
இந்த வரி இன்று இந்த வீட்டின் சுவரெழுத்தல்ல.. அது இந்த நூற்றாண்டு திராவிடியர்களால் மொழி திருடி திரித்த கயிறால் கட்டியவைகளை கட்டுடைக்கும் கருவி. அதைத் தான் வித்ட்ராயல் ஆப் லிபிடோ முறையில் இந்த வீடு தன்னைக் காட்டிக்கொள்ள முற்படுகிறது. ஒவ்வொரு தருணத்திலும், புதிது புதிது என்னும் அவனது சொல் அந்த நெகிழ்தன்மையைக் குலைத்துவிடுகிறது. காட்சியகம் என்பதே ஒரு முரண்நகை என பாரதியை பிராமணராகவே பார்க்கும் ஒரு கூட்டம் ஒரு நூற்றாண்டு காலமாய் செப்பித் திரிகிறது.. பாரதியெனும் நிலைகுலையாத் தன்மையை நிரந்தரமாக்க விழையும் ஒரு அமைப்பு இந்த இல்லம்.. இது ஓயாது நகரும் ஒரு கவிதா மொழியை நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்க முயலும் பகிரத பிரயத்தனம்..
முப்பத்தொன்பது வயதே வாழ்ந்த அந்த மஹாகவி சுவாசித்த வீட்டிலிருந்து கோவில் நோக்கி நடக்கிறேன்... அது ஒரு புனித இடைவெளியில் புகும் பரவசத்தைத் தந்தது. ஆன்மீகப் புனிதத்திற்கும் கவி ஆளுமைக்கும், அரங்கனுக்கும் மஹாகவிஞனுக்கும் இடையிலான ஒரு இடைவெளியில் புகுவதென்பது அவ்வளாவு சுலபமா என்ன? பாரதி தன் பாரததேசம்பாடலில்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
என்று உரக்கச் சொன்ன வெளி இது எனும் எண்ணம் மனமெங்கும் வியாபித்தது... அவன் நின்று நடந்து இசையுடன் பாடல்கள் பாடிய இந்தத் தெரு எனக்குள் இன்னொரு முறை அந்த மஹாகவியின் வாழ்வின் சில பகுதிகளை கொணர்ந்தது..அதைத்தான் ப்ராய்ட் வித்ட்ராயல் ஆப் லிபிடோ எனச் சொல்லிச் சென்றுள்ளார்..
இன்று அந்தத் தெரு ஆட்டோக்களும், பூக்கடைகளும், சப்தமும் நிறைந்ததாக இருக்கிறது.... அந்தச் சப்தங்களின் வழி பாரதி பாடல்கள் என் காதுகளில் மோதி இதயத்திற்குள் திரும்பிக்கொண்டிருந்தன.. பின்நவீனத்துவம் சொல்லும் ஒவ்வொரு நிகழ்காலமும் கடந்த காலத்தின் சிதைந்த துண்டுகளால் ஆனது என்பதைக்கூட வித்ட்ராயல் ஆப் லிபிடோ எனச் சொல்லவியலுமா என யோசித்தபடி நடந்து கொண்டிருந்தேன்..
என் மனையை ஆளும் அரசி கொஞ்சமாய் கோபத்தை தோளில் சுமந்து கொண்டே வந்து கொண்டிருந்தாள்.. செல்லம்மாவிற்கு பாரதி மேல் இருந்த கோபம் நியாயமானது. ஆனால் இவளின் கோபம் பல பொருண்மைகளை உடைத்தெறிந்ததைக் காண மனம் வலித்தது..பார்த்தசாரதி பெருமாள் சன்னதி வாசலில் நின்றபோது, திவ்யப் பிரபந்தத்தை உரத்துப் பாடத் தொடங்கினேன்..
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்செற்றவன் தன்னை,
புரமெரி செய்த சிவன்உறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன்தன் தேர்முன் நின்றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக்கேணி கண்டேனே.
கோவிலை விட்டு வெளியில் வந்தவுடன் பாரதியின் தோடி ராகப் பாடலான திக்குத் தெரியாத காட்டில் ரெங்கா உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே என மீண்டும் கத்திப் பாட.. சிலர் கூட்டமாய் கூடி விட்டார்கள்..
திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு (திக்குத்)
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு (திக்கு]
ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு (திக்குத்)
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு (திக்குத்)
கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்-
இந்த வரி வரை முற்றாக பாடி முடிக்கையில் முடிவற்ற வாழ்வின் முடிவிலியை நோக்கி தன்னறியாமல் நடக்கத் தொடங்கினேன்.. வாழ்வின் பாதையில் உடன் வருவதாக சத்தியம் செய்த இணையரை கண்கள் தானாகவே தேடத் தொடங்கியது..வித்ட்ராயல் ஆப் லிபிடோ இல்லை இது.. இந்த உணர்வு துறவறத்திலிருந்து இல்லறம் நோக்கித் திரும்பும் ஒரு வித்ட்ராயல்.. பாரதியின் வீட்டிலிருந்து கோவிலுக்கும், கோவிலிலிருந்து மீண்டும் தெருவுக்கும் நான் நடந்த அந்தச் சுற்றுவட்டப் பாதையை பின் நவீன ஆன்மீக இலக்கியக் கட்டமைப்பிற்கான முதல் செங்கல்லை ஊன்றிய அயர்வுடன் கூடிய பெருமிதம் கொப்பளிக்கும் கண்களூடன் பார்த்தேன்..
பாரதியையும் பெருமாளையும் பார்த்துட்டீங்க.. இன்னும் இங்க வேற எதைங்க பார்க்கனும் என்று எங்கிருந்தோ வந்த இணையாள் கேட்கிறாள்..
ஆம் இனி காண என்னதான் இருக்கிறது எங்கும்...?
இல்லறத்திலிருந்து துறவறம் நோக்கிய வித்ட்ராயல் ஆப் லிபிடோ மீந்திருக்கிறதோ என்னவோ.. வல்லிக்கேணி அரங்கனே அறிவான் அதை..
ராகவபிரியன்
2022 ல் திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த நினைவில்லத்தில்... அவரின் வெண்கல பிரதிமையின் முன் எடுத்த செல்பியுடன்...உங்கள் ராகவபிரியன்

Comments

Popular posts from this blog