நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. பெயர்த்திக்கு ஐந்து வயது தான் ஆகிறது.. தலையில் விக் மற்றும் இன்ன பிற ஆபரணங்கள் கனக்க செயற்கை பின்னல் குஞ்சம் வைத்து பின் பக்கம் இழுக்க சற்றே வானம் பார்த்தபடி மேடையில் நின்றிருந்தாள்..

கீழ் பார்வையில் தாத்தாவைப் பார்த்துவிட்டாள்.. விருட்டென கண்ணிலிருந்து தாத்தாவுக்கும் பெயர்த்திக்கும் ஒரே நேரத்தில் கண்ணீர் துளிர்த்தது.. தாத்தா மெல்ல பெயர்த்தியின் குரு மேடத்திடம் செல்கிறார்..
வணக்கம் மேடம்..
வணக்கம் சார். உங்கள் பெயர்த்தியின் ஆட்டத்தைப் பார்க்க வந்திருக்கிறீர்களா..
ஆமாம் ஏன் இவ்வளவு அலங்காரம் குழந்தைக்கு.. பாருங்கள் அழுகிறாள்..
ஐயா.. பரத சாஸ்த்திரத்தில் துன்பமென்பது முகபாவத்தில் கொணரும் போது சுவை மிகுந்தது.. பாருங்கள் சர்வ அலங்கார குழந்தை அழுவதற்கும் சாதாரண குழந்தை அழுவதற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கே தெரியும்..
மேடம்..நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவரா..
இல்லையே ஏன்..
அழகான வார்த்தைகளை அடுக்காக...உங்களைப் போல் சொல்ல வரவில்லை.. சூப்பரா சொன்னீங்க.. ஆமாம் பரத சாஸ்த்திரம்னு சொன்னீங்களே.. பரத முனிவர்னு ஒருத்தர் குடுத்ததுன்னு சொல்வாங்களே அதுவா..
ஐயா.. கேலி செய்கிறீர்கள்..கேலியையும் நடன அசைவுகளில் இந்த பரத சிஷ்யையால் கற்றுத் தருதல் சுலபம்..இருந்தாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.. பரதன் என்ற பெயர் கொண்டவர்கள் புராண காலங்களில் நால்வர் இருந்தனர்..
அதற்குள் பெயர்த்தி நடனம் முடிந்து ஓடி வருகிறாள்..
தாத்தா.. தலையெல்லாம் வலிக்குது தாத்தா.. எனக்குப் பசிக்குது.. எதாவது வாங்கி வா... பெயர்த்தி சொல்லி முடிக்கும் முன் அவளின் அம்மா ஒங்கி முதுகில் ஒன்று வைத்து.. சாப்ட்டா ஆட முடியாது தெரியுமா.. போ இன்னொரு பாட்டுக்கு வேற ஒன் பெர்பார்மன்ஸ் இருக்கு..
அடுத்த பாட்டிற்கு குழந்தை அழுத முகத்துடன் மேடையில் அபிநயம் பிடிக்க..
மீண்டும் தாத்தாவிடம் வந்த பரத சிஷ்யை.. பாருங்கள் இந்தப்பாட்டிற்கு புன்னகை செய்ய வேண்டும்.. உதடுகள் சிதம் ஹசிதம் காட்ட வேண்டும்.. ஆனால் உங்கள் பெயர்த்தி அபஹசித முத்திரை அதாவது கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு ஹாஸ்யம் இருப்பதான முத்திரை... காட்டிக்கொண்டிருக்கிறாள்..
மேடம் நீங்க சத்தமா வாய்விட்டுச் சிரிக்கறததானே சொல்றிங்க..ஆனா குழந்தை அழுவறா மேடம்..
சார்..பாட்டை கவனியுங்கள்..
திருப்பரம் குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ...என ஒலித்துக்கொண்டிருந்தது..
கையில் வைத்திருந்த ஸ்ட்ராபெர்ரி கப் ஐஸ்க்ரீம் டப்பாவைக் காட்ட...பெயர்த்தி சிரிக்கத் தொடங்கினாள்.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.. தாத்தாவிற்கும் பெயர்த்திக்கும்..
சார் பெயர்த்தியின் அபஹசித முத்திரையை படம் பிடித்துவிட்டீர்களா.. எனக் கேட்டுக்கொண்டே வந்தார் பரத சிஷ்யை...
மேடம்.. நீங்க சொல்லிக்குடுத்ததால அந்த முத்திரை வரல..இதோ இந்த ஐஸ்க்ரீம் கொண்டு வந்தது அந்த முத்திரை..
இப்போது பரத சிஷ்யையின் முகம் பரத முத்திரைகளின் அணிவகுப்பு நடக்கும் மைதானமாகியதை படமாக்கவியலவில்லை...
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog