ஆறு என்பதனுள் வைத்துத்தான் மானுட நாகரீக வரலாறு படைக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டின் வாழ்வியல் காவிரி ஆறின் ஓட்டத்தைக் கொண்டே மானுட ஓட்ட வேகத்தை இன்றும் நிர்ணயிக்கிறதென்பதை மறுதளித்தல் கடினம். காவிரியைக் குடித்தும் காவிரியில் குதித்தும் காவிரியை அள்ளியும் காவிரியைத் தூர்த்தும் வாழ்ந்த வாழ்வை அரங்கன் ஒரு நொடியில் திசை மாற்றிவிட்டது காலத் துயரம். எனினும் கடந்த ஓராண்டாய் காஞ்சியைச் சுற்றி வந்த ஏரிக் கரை நாகரீகம் ஆற்றங்கரை நாகரீகத்தினுடனான உறவின் முறிவின் துயரத்தைச் சொல்லவேயில்லை. மாறாக ஆகப்பெரும் ஏரிகளும் அதனுள் வளர்ந்து அடர்ந்திருக்கும் வெளிர்சிவப்பு காஞ்சி மரங்களும் மகிழ்வைத் தருவது முரணாக முடியாதுதானே?
அதுபோல் தான் காஞ்சி தொடர்வண்டி நிலையம் அருகில் இருக்கும் பொன்னேரி காஞ்சியின் வாழ்வியலை வரலாற்றின் கரையில் மணற்சிற்பமாக வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது. ஆக பிரம்மாண்ட மான பொன்னேரியின் இன்றைய சுற்றளவே ஆக்கிரமிக்கிற்குப்பின் பிரமிக்க வைக்கிறதெனின் பண்டைய பொன்னேரி பல்லவ மன்னர்களை உசுப்பிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொன்னேரி என்ற பெயரில் ராஜேந்திர சோழன் காஞ்சியின் பொன்னேரியை விட ஆகப்பெரிய சோழகங்கம் ஏரியை அமைத்ததாக வரலாறு பேசுகிறது. சோழ நாட்டின் காவிரியை விட அதிகம் வரலாற்றில் இடம் பிடித்தது காஞ்சியின் பொன்னேரி..எனில் அது மிகையல்ல நிஜம்..
காவிரி தரும் விவசாய வளமையை காஞ்சியின் பொன்னேரிக் கரை விவசாயம் விஞ்சி நிற்பதாக இரட்டைப் புலவர்கள் [ ஒருவர் ஊனமுற்றவர் மற்றொருவர் பார்வையற்றவர்] இப்படிச் சொல்கிறார்கள்..
பாணியிற் கங்கை நதி மலையினிற் கயிலைமலை பாரழகினிற் தண்டகம்
பழமொழியில் ஔவை சொல் அரசரிற் சேரமான் பத்தியிற் சிறிய தொண்டன்
காணியிற் தொண்டை புகழில் வேளாளர் புகழ் கான்முனையினிற் பகீரதன்
நதிகளில் கங்கை, கைலாசம், அழகு தண்டகா
பழமொழிகளில் அவ்வை, அரசர்கள் சேரமான், பக்தி சிறுதொண்டன்
நில மேலாண்மையில் தொண்டை , புகழ் வெள்ளாளன், குழந்தைகள் பகீரதன்
இப்பாடலில் எங்கே காவிரியை குறைத்து மதிப்பிடுகிறார்களென புரியவில்லை. காஞ்சியில் இருந்துகொண்டு ஏகாம்பரேஸ்வர கலம்பகத்தை திறனாய்வு செய்தால் இன்றைய காஞ்சிவாழ் முக நூல் புலவர்கள் பொன்னேரிக்கரையில் புதைத்து காஞ்சி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தாலும் வைத்து விடுவார்கள். இது போன்ற நினைப்பில் வறண்ட பிரமாண்ட பொன்னேரியை இருசக்கர வாகனத்தில் சுற்றி வருகையில் வெயில் கொளுத்தி எடுத்துவிட்டது..
பொன்னேரிக்கரை தேசிய நெடுஞ்சாலையோர காஞ்சி மர அடர் நிழலில் கரும்பு ஜூஸ் ஜில் என ஜகஜோராய் விற்பனையாகிக் கொண்டிருந்தது.. அவரின் தள்ளுவண்டியில் க்யூஆர் கோட் வேறு இருந்தது. ஆனால் கையிலும் வங்கிக் கணக்கிலும் சுத்தமாக எதுவும் இல்லை. இரத்தச் சர்க்கரை அளவு வேறு சட்டென காஞ்சிமரமாய் கண்முன் அசைய ஆசையை அடக்கி வைக்க நேர்ந்தது. தூர்ந்து கிடக்கும் பொன்னேரியைப் போலவே நாவும் வறண்டுவிட இருசக்கர வாகனத்தின் எரிபொருளும் வறண்டுவிடுமோ என பயம் வெயிலைப் போலவே கடுமை காட்டத் தொடங்கிவிட்டது..
இவ்வெயிலில் ஆற்றங்கரை நாகரீகமோ ஏரிக்கரை நாகரீகமோ எதுவாக இருந்தாலும் பாதையோர குளிர்பாண கடைகளில் காசிருந்தால் தான் தாகம் தணியுமெனும் நாகரீக வளர்ச்சி இலையுதிர்ந்த இளஞ்சிவப்பு காஞ்சி மரமென அங்கங்கே வேர் தெரிய வேர்விடத் தொடங்கிவிட்டதுதான் வேதனை.
இலவச தண்ணீர் பந்தல்கள் அல்லது இலவச குளிர்பாண சத்திரங்களை ஆகப்பெரும் பணக்காரர்கள் நிறுவினால் அவர்களின் பாவம் ஓரளவு குறையலாம். இதைத்தான் காஞ்சிமாநகரின் ஊரகம் அதாவது உலகளந்த பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்துகொண்டே திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் இப்படிச் சொல்கிறார்..
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
இலவச வெற்றி பொவண்டோ மிராண்டா பேண்டா மற்றும் இன்னபிற குளிர்பாணங்களை தரும் தண்ணீர்பந்தல்களை அமைக்காத ஏரிக்கரை நாகரீகமோ இல்லை ஆற்றங்கரை நாகரீகமோ எதுவாயினும் தான் நல்காதாகிவிடுமென பரிமேலழகர் சொல்கிறார்...
No comments:
Post a Comment