ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/5
நீ இழந்தது உன் சொந்த வீடெனில்
தொலைத்தது மகிழ்வையல்ல
மாறாக துயரத்தை...
கடற்பசுக்கள் ஒரு போதும்
நிலத்தின் புல் நிறைந்த
தொழுவங்களைத்
தேடி வருவதில்லை..
பட்டுப் புழுக்கள்
தன் வாழ்வை நெய்து வாழ்ந்து
பின் தொலைத்த வீட்டைத்தான்
நீ பளபளப்பாய் உடுத்துகிறாய்..
குளவிக்கும் குருவிக்கும் மட்டுமல்ல
மானுட ஆன்மாவிற்கும்
சிறகுகளின் ஆற்றலுண்டு..
அரசர்களின் அரண்மனைகளும்
பணக்காரர்களின் மாளிகைகளும்
குதிரைகளுக்கான
தங்க முலாம் பூசிய லாயங்களும்
அவர்களின்/அவைகளின்
சொந்தமில்லை.
நாடோடிகளைப் பார்..
அவர்களின் தங்குமிடங்கள்
வீதிகளில் சாலைகளில்
சுழலும் இப்பூமிப் பந்தின்
வெட்ட வெளிகளில்
ரயில் நிலைய மரநிழல்களில்
பாலத்தடிகளில்
நிறைந்திருக்கிறது..
பொழிமழை துறந்த புகைவேழ் குன்றத்து
பழுமரம் தேடும் பறவை போல
தம் வாழ்விடம் விட்டு
அவர்கள் நகர்கையில்
துயரைவிட்டுத்தான்
நிரந்தரமாய் அகன்று போகிறார்கள்..
ஆறு கடலை நோக்கியும்
நாடோடிகள் வாழ்வை நோக்கியுமே
சதா நகர்ந்தபடியிருக்கிறார்கள்..
நகர்பவர்களின் வீட்டின்
வாசற்கதவு திறக்கையில்
இரவி உதிப்பான்..
அவர்களின்
பின் இரவுச் சன்னல்கள் மூடுகையில்
புத்தம் புது ஊரின் பாடல்கள்
உள்ளெங்கும் நிறைந்திருக்கும்..
ஆக உன் மாற்றத்திற்கான
காலத்தின் கட்டளையால்
நீ இழந்தது சொந்த வீடெனில்
தொலைத்தது துயரத்தைத்தான்...
மகிழ்வையல்ல...
ராகவபிரியன்
Comments
Post a Comment