அப்போது இவன் பியுசி படித்துக்கொண்டிருந்தான். 1977-78 ல் திருவாரூரில் இருந்து பூண்டி கல்லூரிக்கு தினமும் தொடர்வண்டியில் தொடர் பயணம். சினிமா என்பது அன்றைய இளைஞர்களின் மனப்பசிக்கான ஒரே உணவு.. சிவாஜி எம்ஜியாரைத் தாண்டி கமல் ரஜினியை கொண்டாடத்துவங்கிய கனாக்காலமது. ஏறக்குறைய ஒரே கள்ளை விதவிதமான மொந்தைகளில் திரையுலகம் இவனொத்த ரசிகர்களுக்கு ஊற்றி ஊற்றி போதையேற்ற முயன்று தோற்கத் தொடங்கிய காலம்.
இவன் இன்னும் 16 வயதினிலே படம் பார்க்கவில்லை. அடுர் கோபலகிருஷ்ணனும் சத்யஜித் ரே மிருணாள் சென் போன்றவர்களும் தங்கள் புரியாத படங்களால் இவனை புளங்காகிதம் செயத நாட்கள். எதோ தமிழில் பாலச்சந்தரை ஓரளவு இயக்குனராக இவன் ஒப்புக்கொண்டிருந்தான் அன்று..
அதற்குள் அவனின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் அப்படத்தைப் பார்த்துவிட்டிருந்தனர். எல்லோரும் அந்தப் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். இவனின் கல்லூரி நண்பன் சாந்தகுமார் சக்ரவர்த்தி மற்றும் அன்பழகனுடன் தஞ்சையில் தியேட்டரில் வரிசையில் இவனும் 16 வயதினிலே பார்க்க நிற்கிறான்.. இவனிடம் பரம்பைசா கிடையாது. அன்பழகன் ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டிற்கான தொகையைக் கேட்கிறான். எல்லோரும் டிக்கெட்டிற்கான தொகை 3.50 காசு கொடுக்கிறார்கள். பெஞ்சு டிக்கெட். இவன் பக்கம் திரும்புகிறான் அன்பு. கொஞ்சம் கொறையுதுடா எனச் சொல்ல சரி நான் மீதம் போட்டுக்கொள்கிறேன் என் கிறான். வரிசையும் அன்றைய கால நிகழ்வுகளும் இதோ மெல்ல நகர்வதை நீங்களும் காணலாம்.
டிக்கெட் கவுண்டர் வந்தவுடன் வெறும் இரண்டு நாலணாவை அன்பழகனிடம் தர அவன் பார்த்த பார்வையை எழுத்தில் கொணர்வது சிரமம்.. 16 வயதினிலே பார்த்து முடித்த பின்னும் அதன் பிறகான கடந்த ஐம்பதாண்டுகள் மட்டுமல்ல இதோ இன்னமும் அன்பழகன் அன்று பார்த்த இரக்கப் பார்வை அப்படியே இவனின் இதயத்தில் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறது.. அன்பழகன் இவனையும் சேர்த்து எல்லோருக்கும் டிக்கெட் எடுத்துவிடுகிறான். கல்லூரி வகுப்பைப் புறக்கணித்து விட்டுத்தான் அனைவரும் மார்னிங் ஷோ பார்க்கிறார்கள். ஏனோ 16 வயதினிலே படம் இவனுக்குப் பிடிக்கவில்லை. அழகியல் என்பதெல்லாம் அன்று இவனுக்கு எதுவெனத் தெரியாது. திரைப்படவியல் எனும் சாகரத்தில் தனித்தோணியொன்றில் பயணித்து சாகசம் நிகழ்த்திய பாரதி ராஜாவை அன்று இவனுக்கு சரியாகப் படிக்கத் தெரியவில்லை.. ஏனோ அப்படம் இவனுக்குப் பிடிக்கவில்லை.. ஒருவேளை கமல் கோமணம் கட்டி எச்சில் உமிழ்வது இவனுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அன்றைய ரயில் நிலையங்களிலும் வீதிகளிலும் எச்சில் துப்பும் கலாச்சாரம் பரவிக்கிடந்தது நிஜம். உதட்டின் மேல் இரண்டு விரல்களை வைத்து புளிச் சென துப்பும் கலை கிராமத்தார்களுக்கு அப்போது கைவந்த கலை.
படம் முடிந்து எல்லோரும் வெளிவந்து விட்டோம். எல்லோருக்கும் தேனீர் சாந்தகுமார் வாங்கித் தருகிறான். திருவாரூர் வரும் வரை ஸ்ரீதேவி ரஜினி கமல் மற்றும் அந்த டாக்டர் கேரக்டர் வரை எல்லோரும் 16 வயதினிலேவை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இவன் மெளனமாக வந்து கொண்டிருக்கிறான். இது எப்புடி இருக்கு...
கடைசீயாக இவனிடம் கேட்கிறார்கள்.. படம் நன்றாக இருந்ததா என..
இவன் சொல்கிறான்...பிடிக்கவில்லையென...
சட்டென ஒரு சில நண்பர்கள் இவனை அடிக்கப் பாய்ந்ததும் நடந்தது அன்று..
பிரிதொரு நாள் 1981ல் பாரதிராஜாவை சினிமாவில் ஏதாவது வேலை தரும்படியான இவனின் கல்லூரி முதல்வர் கடிதத்துடன் சந்திக்கிறான். அப்போது வெளிவந்த படம் அலைகள் ஓய்வதில்லை என நினைவு.. அதில் ஒரு பாடல் வரி.. கோவிலில் காதல் தொழுகை என வரும். அது இவனுக்குப் பிடிக்கவில்லை. இவையெல்லாம் மதமாற்ற உத்தியென அன்றே ஆகச் சரியாக கணித்தவன்.. இவன். பாரதிராஜா இவனிடம் தனது கரகரத்தக் குரலில் கேட்கிறார்...
செவ்வரியோடிய உன் பாத கமலங்களே சிவப்பாய் இருப்பதால் செந்தூரப் பூச்சிற்கு செலவில்லை ...என வானொலியில் கரகரத்து தமிழகத்தின் காதுகளை நிறைத்த அதே கரகரத்த பாரதிராஜாவின் குரலில்..
உங்களுக்கு என்ன வேலை தெரியும்..
சார் இசைக்கு பாடல் எழுதுவேன்..
அப்படியானால் இளையராஜாவைப் பார் தம்பி..
இல்லை ஐயா நான் பரம ஏழை. பிகாம் முடித்துவிட்டேன்..எதாவது ஆபீஸ் வேலை இருந்தால்...
தம்பி என் நேரத்தை வீணடிக்காதே.. இன்னொரு நாள் வா..
ஐயா இளையராஜாவிடம் நான் வேலை செய்ய மாட்டேன்..
அதிர்ந்து திரும்பியவர் கரகரத்த குரலில் ஏன் என்றார்..
கோவிலில் காதல் தொழுகை என்ற வரிக்கெல்லாம் இசையமைத்ததால்.. எனச் சொல்ல..
அவரின் கேள்வியும் பிடிக்காமல் அன்று வெளியேறியவன் இன்று பதில் சொல்கிறான்.. ஆமாம் இயக்குனரே இவன் அய்யர் தான். போய் வாருங்கள்...தங்கள் ஆன்மா அமைதிபெறட்டும்..
No comments:
Post a Comment