நேற்றிரவு ஆழ்ந்த உறக்கத்தில் புறஉலகின் அதிர்வுகள் இவ்வெளியவனைத் தாக்கவில்லை. அகமெங்கும் சயனித்திருக்கும் அரங்கன் உடலை மெலிதாக அசைக்கிறான். விசிஷ்ட்டாத்வைதத்தில்.. விஷிட்ட ஏகங்கம் என்றே மானுட உடல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது அரங்கன் வேறு பக்தனின் மானுட உடல் வேறு எனும் பாகுபாடு வைணவத்தில் இல்லை. இதுபோன்ற ஆன்மீக தத்துவார்த்த புற எல்லைகளின் தாக்குதல்கள் வரையறை தாண்டி ஆழ்ந்த நித்திரையில் சில சொற்களை உதிர்கிறது..
ஆழ்மன உறக்கத்தில் அகமும் புறமும் பேசிக்கொள்வதை ப்ராய்ட் புதைக்கப்பட்ட ஆன்மீக உணர்வுகள் வெளிப்படுத்தப்படவியலாத புற உலகச் சூழலில் உறக்கத்தில் வெளிவந்து சொற்களாக இங்குமங்கும் நடக்கிறதென்பார்..
உடலெனும் இறை உறக்கத்தில் அதிர்வுகளை உள்வாங்காமல் கிடக்கிறது. விசிஷ்ட்டமெனும் அகத்திருக்கும் அரங்கன் சில சொற்களை உதிர்க்கிறான்.. அபிதீஸ்தவம் எனும் தேசிகரின் அற்புதமான படைப்பை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்..தற்கால ஆன்மீக எதிர்ப்பிருக்கும் சமூக யதார்த்தம் மானுட மனமெங்கும் பயத்தின் அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. புறப்பட்டு தேசிகர் கோவிலுக்கு வா. அவரிடம் அபிதீஸ்தவமெனும் விளக்கிருக்கிறது.. பயத்தின் இருள் போக்கும் அவ்விளக்கை அவரின் அனுமதி பெற்று காணொளி வாயிலாக ஏற்றி வை. பயமற்ற அதாவது மரணபயமற்ற முழுமை வாழ்வின் வெளிச்சத்தை உலகமயமாக்க அபிதீஸ்தவம் பயன்படவேண்டுமென்று சொல்கிறார்...
அரங்கனின் கட்டளையை உள்வாங்கிய உடலதிர்வு அதீத சப்தமெழுப்ப.. மனையாள் என்ன உளறுகிறீர்கள் என எழுப்புகிறாள்..புற உலகிலும் அக உலகிலும் பயணிக்கும் ஏக பொழுதின் ஆன்மீக ஆழ்மன விசித்திரமான தர்மபூத ஞானநிலை மனையாளெனும் புற உலக அதிர்வாக உடலை அசைத்ததால் சற்றே தடுமாறுகிறது..
விடிந்ததும் ஆச்சார்யனின் பிறந்த இடமான காஞ்சி தூப்புலில் பாதம் பதிக்கிறான் இவன்.. விளக்கொளி எம்பெருமானிடம் அபிதீஸ்தவமெனும் ஞானவிளக்கொன்று இருக்கிறது.. அதன் ஒளியை காணொளியாக உலகெங்கும் கடத்தும் பெரும் பொறுப்பை அவன் முன் நின்று இதோ யாசித்துக் கொண்டே இருக்கிறான் இந்த அரங்கனடிமை..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன் தேஜஸ்வி
Comments
Post a Comment